இன்டெக்ஸ்

 இப்னுமாஜா இன்டெக்ஸ்

Unicode Page

    பக்கம் - 5 (ஹதீஸ்கள் 42 முதல் 50 வரை)

அத்தியாயம்: முகத்திமா - முகப்பு

ஹதீஸ் எண்: 42

கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளங்களை நடுங்கச் செய்யும் அரிய உரை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (உலகிலிருந்து) விடை பெற்றுச் செல்பவரின் உரை போன்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள், எனவே எங்களிடம் (பலமான) உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. 'இறையச்சத்தையும், (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின்னால் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள்! அப்போது என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (மார்க்கத்தில்) பதிதாக தோற்றுவிக்கப்பட்ட காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு 'பித்அத்தும்' வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 43

கண்கள் கண்ணீர் வடித்து, உள்ளங்கள் நடுங்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இந்த உரை (உலகத்திலிருந்து) விடை பெற்றுச் செல்லும் உரை தான். எனவே எங்களிடம் என்ன உறுதிமொழி கேட்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற வழியில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்தப் பாதையிலிருந்து சருக மாட்டான். உங்களில் யார் (உனக்குப் பின்) வாழ்கிறாரோ அவர் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார்.

என் சுன்னத்திலிருந்தும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்திலிருந்தும் எதை அறிகிறீர்களோ அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமை என்றாலும் (அவருக்கு) கட்டுப்பட்டு நடப்பதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக மூமின் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகம் போன்றவனாவான். எங்கு இழுக்கப்பட்டாலும் அவன் இழுபடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மது, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 44

மேற்கூறிய அதே செய்திதான் 44-வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது. எனினும் அதில் (ஒரு நாள்) சுபுஹ் தொழுகைக்குப் பின் இந்த உபதேசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஹதீஸ் எண்: 45

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும், அவர்களின் குரல் உயரும், அவர்களின் கோபம் கடுமையாகும், 'ஸப்பஹகும் வ மஸ்ஸாகும்' என்று கூறி படையினரை எச்சரிப்பவர் போல் ஆகிவிடுவார்கள். (காலை, மாலை எல்லா நேரத்திலும் எதிரிகள் தாக்கக்கூடும், அதனால் எல்லா நேரங்களிலும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! என்று உணர்த்துவதற்காக இந்த வார்த்தை கூறப்படும்) சுட்டு விரலையும், நடு விரலையும் சேர்த்துக் காட்டி நானும் யுகமுடிவு நாளும் இப்படி (அருகருகே) உள்ள நிலையில் நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்று கூறுவார்கள். பின்னர், செய்திகளில் சிறந்தது இறைவனின் வேதமாகும், வழிகாட்டுதல்களில் சிறந்தது முஹம்மதுடைய வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) பின்னர் உருவாக்கப்பட்டவைகளாகும். ஒவ்வொரு பித்அதும் வழிகேடுதான் என்றும் கூறுவார்கள். யாரேனும் சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவனது குடும்பத்திற்கு உரியதாகும். யாரேனும் கடனையோ, சந்ததிகளையோ விட்டுச் சென்றால் பொறுப்பு என்னைச் சேர்ந்தது என்றும் கூறுவார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 46

(மனிதனுக்கு நேர்வழி காட்டுபவை) இரண்டே இரண்டு தான், ஒரு சொல்லும் ஒரு வழி காட்டுதலுமே அவை. சொற்களில் சிறந்தது அல்லாஹ்வின் சொற்களாகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். புதிதாக (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் உச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவைகளே காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் (பித்அத் எனும்) அனாச்சாரமாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடுதான். உங்கள் வாழ்நாள் அதிகமாகி அதனால் உங்கள் உள்ளங்கள் இறுகி விடக்கூடாது. எது இனி வரவிருக்கிறதோ அதுவே சமீபமானதாகும். எது இனி வரப்போவதில்லையோ அதுவே தூரமானதாகும். தன் தாய் வயிற்றிலேயே துர்பாக்கியசாலியாக ஆனவனே உண்மையில் துர்பாக்கியசாலியாவான். பிறரால் திருத்தப்படுபவனே பாக்கியசாலி. அறிந்து கொள்க! மூமினுடன் போர் புரிதல் குப்ரு (இறை மறுப்பு) ஆகும். அவனை ஏசுதல் பாவமாகும். ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்திருக்கலாகாது, பொய்யை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். விளையாட்டாகவோ வினையாகவோ பொய் அறவே கூடாது.

ஒரு மனிதன் தன் சிறு குழந்தைக்கு (எதையேனும்) வாக்களித்து விட்டு பின்னர் அதை நிறைவேற்றாதிருக்கக் கூடாது. ஏனெனில் பொய் குற்றங்களுக்கு பாதை அமைக்கும். குற்றங்கள் நரகத்திற்கு வழிகாட்டும். உண்மை நன்மைக்கு வழிகோலும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். உண்மையாளனைப் பற்றி 'உண்மை சொன்னான், நன்மை செய்தான்' என்று கூறப்படுவதுண்டு. பொய்யனைப் பற்றி 'பொய்யுரைத்தான், குற்றம் புரிந்தான்' என்று கூறப்படுவதுண்டு. அறிந்து கொள்க! ஒரு அடியான் பொய் சொல்லத் துவங்குவான், முடிவில் பெரும் பொய்யன் என்று இறைவனிடத்தில் எழுதப்பட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண்: 47

'அவன் தான் இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினான். அவற்றில் திட்டவட்டமான வசனங்களும் உள்ளன. அவை தான் அவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (இலக்கிய உவமைகள் அடங்கிய) முதஷாபிஹாத் என்னும் வசனங்களாகும். எவரது உள்ளங்களில் வழிகேடு உள்ளதோ அவர்கள் தவறான அர்த்தம் நாடியும், குழப்பத்தை நாடியும் (உவமையாக கூறப்படுபவற்றை விளங்காது) அதனைப் பின்பற்றுவார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வும், கல்வியில் திறமைமிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். நாங்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே உள்ளன' என்று கூறுவார்கள். அறிவுடையோர் தவிர மற்றவர்கள் படிப்பினை பெறுவதில்லை. (அல்குர்ஆன் 3:7) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஒதிவிட்டு 'ஆயிஷாவே! இதில் வீண் தர்க்கம் புரிவோரை நீங்கள் காணும் போது அவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்! அவர்களையே அல்லாஹ் நாடியுள்ளான் என்று கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 48

'எந்த ஒரு சமுதாயமும் தான் பெற்றிருந்த நேர்வழியிலிருந்து வீண் தர்க்கம் கொடுக்கப்பட்டதால் தவிர (வேறு எதனாலும் வழி) தவறுவதில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, 'அவர்கள் வீண் தர்க்கம் செய்யும் சமூகத்தாராகவே உள்ளனர்.(43:58) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள் என அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றனர்.

(குறிப்பு: அஹ்மது, திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 49

'பித்அத்' காரனின் நோன்பையோ, தொழுகையையோ, ஸதகாவையோ, ஹஜ்ஜையோ, உம்ராவையோ, ஜிஹாதையோ, ஈட்டுத்தொகையையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். குழைத்த மாவிலிருந்து மயிர் வெளியேறி விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து அவன் வெளியேறி விடுவான். (அதாவது குழைத்த ஈரமான மாவுடன் மயிருக்கு எப்படி பிடிப்பு இருக்காதோ, இது போல் இஸ்லாத்தின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பும் இராது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெறும் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் பற்றிய விபரம் தேடியவரை கிடைக்கவில்லை அறிமுகமற்றவர்களாகவே உள்ளனர்.)

ஹதீஸ் எண்: 50

'பித்அத்' காரன் தனது பித்அத்தை விட்டொழிக்கும் வரை அவனது அமல்களை ஏற்க அல்லாஹ் மறுக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(குறிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக இதை அறிவிக்கின்ற அனைவருமே ஹதீஸ் கலை வல்லுனர்களுக்கு அறிமுகமானவர்களல்லர், யாரென்றே அறியப்படாதவர்கள் என ஹாபிழ் தஹபீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.)

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்