இன்டெக்ஸ்

 இப்னுமாஜா இன்டெக்ஸ்

Unicode Page

    பக்கம் - 6 (ஹதீஸ்கள் 51 முதல் 60 வரை)

அத்தியாயம்: முகத்திமா - முகப்பு

ஹதீஸ் எண்: 51

யார் பொய்யை, அது வீணானதாக இருக்கும் நிலையில் விட்டுவிடுகிறானோ, சுவனத்தின் ஓரத்தில் அவனுக்கு ஒரு மாளிகை எழுப்பப்படும். யார் சத்தியத்தின் பால் இருந்தும் வீண் தர்க்கத்தை விட்டுவிடுகிறானோ, அவனுக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு மாளிகை எழுப்பப்படும். யார் தனது குணங்களை அழகுபடுத்திக் கொள்கின்றானோ சுவனத்தின் உயர்ந்த இடத்தில் அவனுக்கு ஒரு மாளிகை எழுப்பப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ அவர்கள் தனது நூலில் பதிவு செய்து இது ஹஸன் என்று நற்சான்று வழங்கினாலும், இது நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸாகும். ஏனெனில் அனஸ் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கின்றவராக ஸலமா இப்னு வர்தான் என்பவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்று அஹ்மது இப்னு ஹம்பலும், ஒன்று மற்றவர் என்று எஹ்யா இப்னு முயீன் அவர்களும் குறிப்பிடுகிறார்கள். மற்றும் பல அறிஞர்களும் இவரைக் குறை கண்டுள்ளனர்.)

பாடம்: 5 அபிப்பிராயங்களையும், அனுமானங்களையும் தவிர்த்துக் கொள்ளல்

ஹதீஸ் எண்: 52

அல்லாஹ் கல்வியை ஒரேயடியாக பறித்துக் கொள்வதில்லை, எனினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். அவன் ஒரு அறிஞனையும் விட்டு வைக்காத போது, அறிவற்ற தலைவர்களை மக்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவற்ற முறையில் அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். தானும் கெட்டுப் பிறரையும் கெடுப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 53

'அறிவில்லாத(வர்களால்) யாரேனும் தீர்ப்பளிக்கப்பட்டால் அதன் குற்றம் தீர்ப்பு அளித்தவனையே சாரும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூது, தாரமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 54

'திட்டவட்டமான (குர்ஆன்) வசனங்கள், நிலையான சுன்னத் (எனும் நபிவழி), நடுநிலையான கடமைகள் ஆகிய மூன்று தான் கல்வி என்பது இதற்கு அப்பாற்பட்டவைகள் உபரியானவைகளாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்திர்ரஹ்மான் இப்னு ஸியாத் அன்னயீம் என்பவரும், அப்துர்ரஹ்மான் இப்னு ராபிவு என்பவரும் இடம் பெற்றுள்ளனர் இவ்விருவரும் பலவீனமானவர்கள்.)

ஹதீஸ் எண்: 55

உனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டே தவிர நீ தீர்ப்பு வழங்கக் கூடாது, ஏதேனும் ஒரு காரியம் உனக்கு தீர்க்க முடியாமல் போனால் அதை நீ தெரிந்து கொள்ளும் வரை, அல்லது எனக்கு எழுதிக் கேட்கும் வரை அதை நிறுத்தி வை! என்று என்னை எமன் நாட்டிற்கு அனுப்பிய போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹதீஸ் எண்: 56

'அபகரிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகள் பிறக்கும் வரை பனீ இஸ்ராயில்களின் காரியங்கள் சரியாகவே இருந்து வந்தன. அவர்கள் வந்து, சொந்த அபிப்பிராயங்களைக் கூறி, தானும் வழிகெட்டு, (பிறரையும்) வழிகெடுத்து விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தனர்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் 'இப்னு அபிர் ரிஜால்' என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை.)

ஈமான் பற்றிய பாடம்

ஹதீஸ் எண்: 57

'ஈமான் என்பது அறுபது அல்லது எழுபதுக்கு மேற்பட்ட வாயில்களைக் கொண்டதாகும். அதில் மிகவும் கடைசி நிலையில் உள்ளது, வழியில் கிடக்கும் தொல்லை தருபவற்றை அகற்றுவதாகும். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, என்ற கொள்கை அதில் உயர்ந்த நிலையில் உள்ளதாகும். வெட்க உணர்வும் ஈமானில் ஒரு பகுதி தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 58

ஒரு மனிதர் தன் சகோதரிடம் வெட்கப்படுவது (கூடாது என்பது) பற்றி போதனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்ற போது, 'நிச்சயமாக வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியே' என்று கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 59

'எவரது உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார், எவரது உள்ளத்தில் கடுகளவு 'ஈமான்' உள்ளதோ அவர் நரகத்தில் நுழைய மாட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 60

அல்லாஹ் மூமின்களை நரகிலிருந்து விடுவித்து, அவர்கள் மனஅமைதி அடையும் போது உங்களில் ஒருவர் உலகில் உள்ள விவகாரங்களில் தன் உரிமைக்காக தன் தோழரிடம் வாதிடுவதை விட கடுமையாக நரகில் நுழைந்து விட்ட தம் சகோதரர்களுக்காக தம் இறைவனிடம் வாதிடுவார்கள். 'எங்கள் இறைவா! எங்கள் சகோதரர்கள் எங்களுடன் தொழுதார்கள், எங்களுடன் நோன்பு நோற்றார்கள். எங்களுடன் ஹஜ் செய்தார்கள். அவர்களை நீ நரகில் புகுத்தி விட்டாயே! என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் சென்று அவர்களில் உங்களுக்கு அறிமுகமானவர்களை வெளியேற்றிக் கொள்ளுங்கள்!' என்று இறைவன் கூறுவான்.

உடனே நரகவாசிகளை நோக்கி இவர்கள் வந்து, அவர்களின் உருவங்களை அறிந்து கொள்வார்கள். அவர்களின் உருவங்களை நெருப்பு சிதைத்திருக்காது, பாதிகால் வரை நெருப்பு தீண்டியவர்களும் அவர்களில் இருப்பர். கரண்டை கால் வரை நெருப்புத் தீண்டியவர்களும் அவர்களில் இருப்பர். அவர்களை இவர்கள் வெளியேற்றுவார்கள். 'எங்கள் இறைவா! நீ எவர்கள் விஷயத்தில் அனுமதித்தாயோ அவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம்' என்று கூறுவார்கள்.

எவருடைய உள்ளத்தில் ஒரு தீனார் (தங்க நாணயம்) அளவு ஈமான் உள்ளதோ அவரையும் நரகிலிருந்து வெளியேற்றுங்கள். எவரது உள்ளத்தில் அரை தீனார் அளவு ஈமான் உள்ளதோ அவரையும், எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ அவரையும் வெளியேற்றுங்கள் என்று இறைவன் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

யார் இதை நம்பவில்லையோ அவர், 'நிச்சயமாக, அல்லாஹ் கடுகளவும் அநீதி இழைக்கமாட்டான், நன்மைகளை அவன் பன்மடங்குகளாக ஆக்குவான், மேலும் தன் புறத்திலிருந்து மகத்தான கூலியை வழங்குவான்' (4:4) என்ற வசனத்தை ஒதிக் கொள்ளட்டும் என்று அபூஸயீத் (ரலி) குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இது புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்