இன்டெக்ஸ்

 இஸ்லாம் ஓர் அறிமுகம் இன்டெக்ஸ்

Unicode Page

    கமலாதாஸ் - ஸுரையா

கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.

கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

அவர் தமது அறிக்கையில், 'நான் இந்துக்களைப் போல என்னை – எனது பிணத்தை எரிக்க விரும்பவில்லை. இதுவே நான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதான காரணம். நானோ ஒரு கைம்பெண். எனது குழந்தைகளும் என்னோடு இல்லை. எனவே இந்த மார்க்கத்தில் நான் என்னை இணைத்து நான் எல்லோராலும் நேசிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இதோ இந்த ரமளான் மாதம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாதம்.

எனவே தான் இப்போதே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். என்னிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல புதிய தகவல்கள் உள்ளன. அது பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குகிறது. நானோ ஆதரவற்றவள். சொந்த – பந்தமில்லாத எனக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.

இந்துச் சமய மக்கள் விக்கிரகங்களைக் கடவுள்களாகக் கருதி வழிபாடு செய்கின்றனர். அவை பக்தர்களைத் தண்டிக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்வோ பாவங்களை மன்னிப்பவன். எனவே மன்னிக்கின்ற இறைவன் தான் எனக்கு வேண்டும் - என்று குறிப்பிட்ட எழுத்தாளர் கமலாதாஸ், இந்த முடிவைப் பற்றி நீண்ட காலமாக தாம் சிந்தித்து வந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுவதாவது:

இந்து மதக் கோட்பாட்டின்படி நான் இறந்து போன பின்பு அடுத்த தலைமுறையில் காகமாகவோ மற்ற விலங்காகவோ பிறப்பேன் என்றெல்லாம் எனது சந்ததிகள் கருதுவதை நான் விரும்பவில்லை. மேலும் இந்த ரமளான் மாதம்தான் நான் இஸ்லாத்தை தழுவியதைப் பிரகடனப்படுத்த வேண்டிய பொருத்தமான மாதமாகும். எனவே நான் இஸ்லாத்தை தழுவியதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருங்கள்! நான் நீண்ட காலமாக எந்த மதத்திலும் பிடிப்பில்லாமல் இருந்தேன். நான் எது வரை இவ்வாறு இலட்சியமற்றவளாக இருக்க முடியும்?

டாக்டர் கமலாதாஸ், மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து மலையாளத்தில் எழுத விரும்புகிறார். ஆங்கிலத்தில் எழுதும் போது தமது புதிய பெயரான 'ஸுரையா'வை பயன்படுத்துகிறார்.

இவரது பெற்றோர்கள் பிரபலமானவர்கள். தந்தை எஃப்.எம்.நாயர் மலையாள தினசரியான மாதருபூமி பத்திரிக்கையில் முன்னாள் ஆசிரியராவார். தாயார் நாலபாட்டு பாலாமணி அம்மா மலையாள மொழியில் எழுத்தாளராகவும் கவிஞராகவும் பிரபலமானவர்.

உங்களைப் பற்றி மக்கள் விமர்சித்தால் உன்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு ஸுரையா பதில் கூறும் போது, 'இது என்னுடைய சுயவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட முடிவாகும். இதில் யாருடைய தலையீட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. நான் எனது அறையிலிருந்த அனைத்து விக்ரகங்களையும் எடுத்து இந்துக்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களிடமிருந்து நான் பெற்றது வேதனைகள் மற்றும் கேவலமான விமர்சனங்களையும் தான்.

ஆனால் இப்போதோ நான் புதிதாக பிறந்தவளாக இருக்கின்றேன். குர்ஆனின் சில பாகங்களை நான் மனனம் செய்துள்ளேன். அவற்றை எனது கவிதைகளில் வடித்துள்ளேன். சில இஸ்லாமிய சிந்தனையாளர்களின் உதவியுடன் இஸ்லாத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தும் வருகின்றேன்' என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய பூர்வீக ஊரான நாலபாட்டைப் பற்றி அதன் தோற்றம் வித்தியாசமாக மனதில் தோன்றுவதாக ஓர் எழுத்தாளர் கூறிய போது, 'அங்கு எனது வீட்டுக்கருகில் ஒரு பள்ளிவாசலை நான் உருவாக்குவேன். அப்போது அங்கிருந்து வரும் முஅத்தினின் பாங்கோசையை நீர் கேட்பீர், அப்போது அந்த ஊரைப்பற்றி உமது உள்ளத்தில் உதித்த தோற்றம் மாறும்' எனக் கூறினார் ஸுரையா.

இன்று டாக்டர் ஸுரையா, இஸ்லாமிய அழைப்பு சம்பந்தமான பிரசுரங்களிலும் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தின் தனித்துவங்களையும் பெருமைகளையும் விவரிக்கிறார்.

குறிப்பாக இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கியிருக்கும் உரிமைகள், பாதுகாப்புகள் கண்ணியங்கள் ஆகியவற்றைப் பெண்களுக்கு எடுத்துக் கூறி பெண்களை இஸ்லாத்தில் இணையச் செய்து புரட்சி செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் கமலா ஸுரையா.

(குறிப்பு: டாக்டர் கமலா ஸுரையா அவர்கள் மே 31, 2009 ஞாயிற்றுக் கிழமை சுவாசக் கோளாறு காரணமாக வஃபாத்தானார். அவரின் மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோமாக!)

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்