Category Archives: இஸ்லாம் ஓர் அறிமுகம்

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 6

பாகம் – 6

அல்லாஹ் உங்களை இட்டு திருப்தியுற வேண்டும்

அந்த வழி இஸ்லாம் ஒன்று மட்டுமே. நாம் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியும் விமோசனமும் பெறுவதற்கு இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை. அதன்படி வாழ்வதே நன்று. எனவே, என் அம்மா! நீங்கள் இம்மதத்தை ஏற்று வாழ்வதைக் காண நான் துடியாய் துடிக்கிறேன், அவாவுறுகிறேன்.

நான் வீட்டிலிருந்த வேளையில் பல முறை இது பற்றி உங்களுக்கு விளக்கிக் கூற முயன்றேன். ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன்’ என்று கூட வேண்டினேன். என்றாலும் நீங்கள் எத்தகைய கவனமும் எடுக்கவில்லை.

உண்மையில், இது தொடர்பாக நான் உங்களிடம் எதுவுமே எதிர்பார்க்க வில்லை. மேலும், எனக்கு உலக வாழ்வு தொடர்பான ஏதேனும் எதிர்பார்ப்போ, ஆசையோ, ஆர்வமோ இல்லை என்பது நீங்களும் அறிந்த விஷயம்.

என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கும் ஆர்வம், ஆசை, வேதனை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக உங்கள் முன் சமர்ப்பிக்கட்டுமா அம்மா?

இதோ கேளுங்கள்:

பத்து மாதங்கள் சுமந்திருந்து என்னைப் பெற்ற என் அன்னை என் உயிரை விடவும் அன்பிற்குரியவர். அவர் என் கண் எதிரிலேயே கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீழ்ந்து வேதனைப் படுவதைக்காண, நான் ஒரு போதும் சகிக்க மாட்டேன். அந்த பயங்கர வேதனையிலிருந்து என் அன்பே உருவான அன்னையை மீட்டெடுப்பது தான் என் ஒரே எண்ணம்!

அம்மா! நீங்கள் இப்பொழுது பின்பற்றும் மதம் உங்களை நரகத்திற்குத்தான் இழுத்துச் செல்லும். அதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளாது இருப்பது துரதிஷ்டமே!

இதை இன்னும் தெளிவாக நீங்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் ஓர் உதாரணத்தின் மூலம் கூறட்டுமா அம்மா.

நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த ரயில் போகும் பாதையில், சற்று தூரத்தில் பாதை தடம் புரண்டிருப்பதை நான் தெளிவாக அறிவேன். அதில் பயணம் செய்யும் ஏராளமான பிரயாணிகள் இதை அறியாது உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாமற் போவதும், இடையில் பாரிய விபத்தொன்று நடக்கப் போவதும், அவர்களுள் பலர் பயங்கரமான முறையில் மரணத்தைச் சந்திக்கப் போகின்றனர் என்பதும் நான் நன்கு அறிந்த விவரங்கள்.

இதேவேளை என்னிடம் ஒரு மோட்டார் வண்டி உண்டு. அதில் பாதுகாப்பாகப் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியும். எனவே, அந்த ரயிலை நிறுத்தும் ஒவ்வொரு இடத்திலும் நான் பதற்றத்துடன் உங்களிடம் ஓடோடி வந்து, ‘அம்மா! இதில் பயணம் செய்வது ஆபத்து, உடனே இறங்கி வந்து என் மோட்டார் வண்டியில் ஏறி அமருங்கள். பாதுகாப்பாக எம் பயணத்தை மேற்கொள்ளலாம்’ என்று அன்போடு அழைக்கின்றேன். மரணத்தைக் கொண்டு வரும் ரயிலிலிருந்து இறங்கி என் வண்டியில் ஏறும்படி நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கின்றேன். எனினும் நீங்கள் என் அழைப்பை ஏற்கிறீர்கள் இல்லையே! என்றாலும் அந்த பயணத்தின் கோர விளைவை உணர்ந்த நான், உங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பேன்.

அம்மா! அந்த அழிவின் விளிம்பிற்குப் போகுமுன் ரயிலிலிருந்து இறங்கி, என் மோட்டார் வண்டியில் ஏறிக் கொண்டால் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சுகமாக போய் சேர முடியும். இல்லையாயின், நீங்களும் மற்ற பிரயாணிகளுடன் சேர்ந்து கோர அழிவைத்தான் சந்திக்க போகிறீர்கள். அந்தக் கடைசி கட்டத்தில் நீங்கள், ‘அந்தோ! என் மகன் விடுத்த அழைப்பை ஏற்றிருந்தால்.. அவனது மோட்டார் வண்டியில் ஏறியிருந்தால்..’ என கைசேதப்பட்டு, அழுது புரண்டு பிரலாபிப்பீர்கள். அது காலம் கடந்து விட்ட பரிதாப நிலை அல்லவா!

நீங்கள், நான் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாம் எனும் வாகனத்தில் வந்தமர்ந்து பயணத்தை ஆரம்பித்தால், நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு எத்தகைய இடையூறும் இன்றி பத்திரமாகப் போய்ச் சேர முடியும் என்பதில் ஐயமே இல்லை.

என்னுயிர்த் தாயே!

இவை என் உள்ளத்தில் உதித்த சில கருத்துக்கள், உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை நன்றாக சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களை மிகச் சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்ளச் செய்வானாக!

‘நீங்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் அல்லாஹ் உங்களை இட்டு திருப்தியுற வேண்டும். அவனுடைய சுவன செல்வங்களுக்கு நீங்கள் உரித்துடையவராக வேண்டும்’ என நான் இருகரம் ஏந்தி வல்லோனிடம் பிரார்த்தனை புரிகின்றேன்.

நான் எழுதியவை பற்றி நன்கு சிந்தித்து பதில் எழுதுவீர்கள் என திடமாக நம்புகின்றேன். அதோடு, என் குற்றங் குறைகளை மன்னிப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றேன்.

இவ்வண்ணம்,

பணிவன்புள்ள மகன்,

நஸீம் காஜி
(முன்னாள் ஹேம்குமார் அகர்வால்)

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 5

பாகம் – 5

நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் விமோசனம் பெற வேண்டும்

அன்புத் தாயே!

எம்மைப் படைத்த அல்லாஹ்வும், அவன் தூதரும் எமக்கு எவற்றைச் செய்யும் படி கட்டளை இட்டுள்ளார்களோ, அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுச் செய்வதற்கு, நான் திடமனம் கொண்டுள்ளதாக முன்னரே கூறிவிட்டேன். பெற்றோரைப் பற்றிய இறையாணைகள் எவையோ அவற்றின்படி அவர்களிடம் நடந்து கொள்வேன். அந்த இறையாணைகள் என்னென்ன என்பதை நான் உங்களுக்கு நன்கு விளக்கிக் கூறியுள்ளேன். அவற்றிற்கமைய என் வாழ்நாள் முழுவதும் அமையும் என உறுதியாகக் கூற விழைகின்றேன்.

இவற்றைப் படித்து விட்டு நன்கு சிந்தியுங்கள் அம்மா. அப்பொழுது, ‘என் மகன் சொல்வதெல்லாம் உண்மைதான்!’ என்று உங்கள் உள்ளுணர்வுகள் உணர்த்துமாயின், எத்தகைய ஐயமுமின்றி கீழ்காணும் முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.

‘என் மகனை மௌலானா தவறான வழியில் இட்டுச் சென்றார் என நான் நினைத்தது தவறு, அவன் எனது மகனல்ல எனக் கூறியதும் தவறு. மாறாக, மௌலானா என் மகனை சரியான மகனாக ஆக்கினார். அவர் என் மகனை தவறான வழியில் இட்டுச் செல்லவில்லை. மாறாக, வாழ்வுக்கான நேரிய வழியைக் காட்டினார். ‘இவன் உங்களது ஒரு மகனாக இருக்க மாட்டான்’ என அன்று சோதிடர் கூறியது பொய், தவறு’.

ஆமாம் தாயே! நான் கூறியது உண்மை என நீங்கள் விளங்கிக் கொண்டால் மேற்காணும் முடிவுகளுக்கே வருவீர்கள் – இது உறுதி.

கருணையே உருவான அம்மா!

நீங்கள் உறுதியாக நம்புங்கள். நான் என்றென்றும் உங்கள் மகனாகவே இருப்பேன். எப்பொழுதும் நான் உங்களுக்குச் சொந்தமாவேன். எனவே, உங்கள் உள்ளத்தில் வேர்பிடித்து வாட்டும் வேதனைகளையும் அச்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள்.

மனித சமுதாயத்திற்கு நேரான வழியைக் காட்டும் உண்மையான மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே. இது அனைத்தும் அறிந்த அல்லாஹ்வால் அருளப் பெற்றது. மனித வாழ்வுக்கு அவசியமான, அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய அம்சங்கள், நீதி நெறிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. ஒரு வேதம் சத்தியமானதா அல்லது அசத்தியமானதா என்பதை அறிந்து கொள்ள, அந்த வேதத்தின் ஒரு அம்சத்தை மட்டும் ஆய்வுக்குட்படுத்துவது போதுமானது.

இங்கு பெற்றோர் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் என்ன என்பதை சுருக்கமாக உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை திறந்த மனதுடன் படிக்கும் நீங்கள், இஸ்லாம் எவ்வளவு சிறப்பான மதமென்று, வாழ்க்கை முறையென்று விளங்கிக் கொள்வீர்கள். இது போன்ற பூரணத்துவமும் தெளிவானதுமான மற்றொரு மதம் உண்டா என்றால், ‘நிச்சயமாக இத்தகைய விளக்கம் நிறைந்த, நீதி வழி சார்ந்த மற்றொரு மதம் இல்லை!’ என்பது உங்கள் முடிவாக இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

இது போலவே வாழ்வின் ஒவ்வொரு துறைக்குமான நீதிநெறி முறைகள் இஸ்லாத்தில் இருக்கின்றன. அவை மனித சமுதாயத்திற்கு எப்பொழுதும் நேர்வழியைக் காட்டி நிற்கும்.

என் அன்புத் தாயே!

நீங்கள் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள். அவை ஒன்றிரண்டா? உங்கள் கருவறையில் என்னை சில மாதங்கள் சுமந்திருந்தீர்கள். எனக்காக நீண்ட கால வேதனைகளை சகித்துக் கொண்டீர்கள். நான் இவ்வுலக ஒளியைக் காணும் போது வெறுமனே ஒரு சதைக்கட்டி தான். அப்போது நான் சக்தியேயில்லாது பலவீனமாக இருந்தேன். எனினும், நீங்கள் இந்த சதைக் கட்டியை, உங்கள் உடல் வலுவைத் தியாகம் செய்து, இரத்தத்தை அமுதாக்கித் ஊட்டி, தாலாட்டி, உவகையோடு, அவசியமான அத்தனையையும் தந்து கவனித்தீர்கள். நான் ஓரளவு வளர்ந்து வந்த போது என் கல்விக்கான ஆக்கப் பணிகளைச் செய்தீர்கள். நான் அறிவு பெற வேண்டும். நல்லதொரு மனிதனாக வாழ வேண்டும் என்ற மட்டில்லா ஆசையோடு என்னவெல்லாமோ செய்தீர்கள்.

நான் நோயுற்ற போது நீங்கள் பொறுமை இழந்து காணப்பட்டீர்கள். என் கண்களில் நீர் வடிந்தால், உங்கள் இதயத்தில் இரத்தம் பீரிட்டு வருவதைப் போன்ற உணர்வைப் பெற்றீர்கள். ஊன், உறக்கம் இல்லாது காலத்தையும் சிரமத்தையும் எனக்காக அர்ப்பணித்தீர்கள். இவ்வாறு அன்போடு அரவணைத்து என்னை ஊட்டி வளர்த்த அன்னை நீங்கள். உங்கள் உணவை எனக்குத் தந்து நான் உண்பதைப் பசியுடன் பார்த்திருந்து பரவசம் அடைந்த அம்மா நீங்கள். எனக்கு அழகும் கவர்ச்சியும் நிறைந்த உடைகளை அணிவித்து அழகு பார்த்த நீங்களோ அலுக்கான பழைய உடைகளை அணிந்தீர்கள்.

உண்மையில், நீங்கள் எனக்காக தியாகம் செய்த உங்கள் பொன்னான காலமும் சிரமமும் அற்ப சொற்பமானவை அல்ல. அவற்றை என் நாவினால் மொழிந்து முடித்துவிட முடியாது. இவற்றுக்காக நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? நான் என்னதான் உங்களுக்குப் பணிவிடைகள் புரிந்தாலும், விழுந்து விழுந்து கவனித்தாலும் உங்கள் தன்னலமற்ற தியாகங்களுக்கு எதிரில் அவை மிக அற்பமானவையே!

பெற்ற தாயைக் கவனிக்கும் படியும், அவருக்கு உதவி ஒத்தாசை புரியும் படியும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள் எனக்கு இவ்வுலகில் நல்வாழ்வு பெற்றுத் தந்தீர்கள். உங்களுக்கு பணிவிடை புரிவதும் உதவி ஒத்தாசை புரிவதும் என் நீங்காக் கடமை. அந்த வகையில் என் மிக உயர்ந்த விருப்பம் என்னவெனில், என்றும் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் விமோசனம் பெற வேண்டும் என்பது தான். எந்த வழியில் சென்றால் அந்த விமோசனம் கிடைக்குமோ அந்த வழியை உங்களுக்குக் காட்டித் தருவது என் கடமை.

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 3

பாகம் – 3

உங்கள் தந்தையின் பெயர் சொல்லி அழைக்காதீர்கள்

அன்புத் தாயே!

அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதைக் கவனித்தீர்களா? தாயையோ தந்தையையோ அடித்துத் துன்புறுத்துவது, மிகவும் வெறுக்கத்தக்க முறையில் பேசுவது என்பன, எப்படிப் போனாலும், அவர்களுடைய மனதுக்கு வருத்தத்தைத் தரும் மிகச் சிறிய சொல்லொன்றைக்கூட பேச வேண்டாம் என்பது இறைவன் இடும் கட்டளையாகும்.

‘சில வேளை உங்களுக்குத் திருப்தியைத் தராத ஏதேனும் சொற்கள் உங்கள் பெற்றோரின் நாவிலிருந்து வெளிப்பட்டால் கூட நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறின்றி அவர்களைக் கோபமுறச் செய்யாதீர்கள். எப்பொழுதும் அவர்கள் திருப்தியுடன் இருக்க வழி செய்யுங்கள்’ என்பன போன்ற கட்டளைகளும் இறைவனிடத்திலிருந்து வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:

‘அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் தங்கி இருக்கிறது, அதுபோல, அல்லாஹ்வின் கோபம் தந்தையின் வெறுப்பில் தங்கியிருக்கின்றது’.

அன்பே உருவான தந்தைக்குக் கீழ்படிந்து, அவரது சொற்படி நடந்து, அவருக்குத் திருப்தியை அளித்தால் அல்லாஹ்வும் திருப்தியுறுவான். தந்தைக்குக் கீழ்படியாது, அவரது அன்புக் கட்டளைகளைப் புறக்கணித்து, தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டால் அவருக்குக் கோபமும் வேறுப்பும் ஏற்படும். அது அல்லாஹ்வின் வெறுப்பைத் தேடித் தரலாம்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

‘யாரேனும் ஒருவர் தனது பெற்றோருக்குப் பணிவிடை புரிந்தால் அவருக்கு ஈருலக நன்மைகள் கிடைக்கும், பெற்றோருக்கு உதவுவதால் அவரது ஆயுள் நீடிக்கும், உணவில் அபிவிருத்தி ஏற்படும்’.

இதிலிருந்து பெற்றோருக்குப் பணிவிடைப் புரிந்து வருவது எத்தகைய பாரிய பொறுப்பு என்பதை நாம் உணரலாம். அவர்களை மிகுந்த இரக்கத்துடன் பார்ப்பதும், உதவி ஒத்தாசை புரிந்து இன்புறச் செய்வதும் பிள்ளைகளின் கடமையாகும்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்:

‘பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் ஏதேனும் பணியொன்றினை ஆரம்பிக்கும் பொழுது, அது எத்தகையதாயினும் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுடன் இணக்கமாக இருப்பீர்களாயின், அது உங்களுக்கான சுவனவாசலைத் திறந்து கொள்வதற்கான ஓர் அம்சமாக இருக்கும்’.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததாவது:

‘ஒருவர் மனப்பூர்வமாக பெற்றோருக்கு பணிந்து நடந்தால், அவருக்காக சுவனவாசல் திறந்திருக்கும், பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தராது பணிவின்றி நடப்போர் நரகுக்குச் செல்லத் தயாராக வேண்டும்’.

‘பெற்றோருடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களை அவமரியாதையாகவோ நிந்தனையாகவோ பேசாதீர்கள். அவர்கள் எதிரில் மிகுந்த பணிவன்புடன் கண்ணியமாக காரியமாற்றுங்கள். அவர்கள் மத்தியில் நீங்கள் பெரிய மனிதராகப் பார்க்காதீர்கள்’ என்பன இறைமறை வடித்துத் தரும் இனிய கருத்துக்கள்.

நபி (ஸல்) அவர்களின் நண்பர்களுள் ஒருவரான கீர்த்திமிக்க ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது நண்பர்களை விளித்துக் கூறினார்கள்:

‘உங்கள் தாயுடன் மிகப் பணிவுடன் பேசுவதும், அவருடைய உணவுத் தேவையைக் கவனிப்பதும், உங்களுக்குச் சுவனத்தை சொந்தமாக்கி விடும். ஆனால், ஒரு நிபந்தனை – நீங்கள் பாவச் செயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்’.

நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு முக்கிய நண்பரான ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘நீங்கள் உங்கள் தந்தையின் பெயர் சொல்லி அழைக்காதீர்கள், அவருக்கு முன் நடக்காதீர்கள், அவர் அமருமுன் அமராதீர்கள்’.

நபி (ஸல்) அவர்கள் பெற்றோர் மீது கருணை காட்டுவதன் அவசியம் பற்றி வெகுவாக எடுத்துரைத்துள்ளார்கள். அதே போல மற்றும் பலரும் பல்வேறு கட்டங்களில் பெற்றோருக்குக் கண்ணியம் அளித்தல், கருணை காட்டல், அவர்கள் மீது இரக்கம் கொள்ளுதல் பற்றி கூறிய கருத்துக்கள் ஏராளமுண்டு.

‘நல்ல பிள்ளைகள் தம் பெற்றோரை நிறைந்த அன்புடன் நோக்குவதும் கூட பரிபூரணமான ஹஜ் ஒன்றை செய்த நன்மையை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுத்தர வல்லதாக உள்ளது. ஒருவரின் சொத்து சுகம் என்பவற்றின் மூல சொந்தக்காரர்கள் அவரின் பெற்றோர் ஆவார்கள்’ என்பன இஸ்லாம் முன்வைக்கும் இதமான கருத்துக்களாகும்.

மனிதன் தனது சொத்து செல்வங்களைப் பல வழிகளில் செலவு செய்கிறான். அந்த செல்வங்கள் அனைத்திற்கும் மூலச் சொந்தக்காரர்கள் பெற்றோரே. எனவே, அவற்றின் மூலம் முதலில் பெற்றோரின் தேவைகளே கவனிக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்துத்தான் மற்றவைகள் தொடர்பான செலவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பெற்றோருக்காக திறந்த மனதுடன் ஆர்வத்துடனும் செலவழித்தல் அவசியம், அதில் கஞ்சத்தனம் வரவே கூடாது.

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 4

 
பாகம் – 4

நீங்களும் நீங்கள் பெற்றுள்ள செல்வமும் ஆகிய
எல்லாமே உங்கள் தந்தைக்குரியன

என்னுயிர் அம்மா!

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி ஒன்றினைக் கேளுங்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து,

‘யா ரசூலுல்லாஹ்! என் தந்தை நினைக்கும் பொழுதெல்லாம் வந்து எனது செல்வத்திலிருந்து எடுத்துச் செல்கின்றார்!’ என்று முறையிட்டார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரது
தந்தையை அழைத்து வரும் படி பணித்தார்கள். சற்று நேரத்தில் அவரது தந்தை அழைத்து வரப்பட்டார். ஊன்று கோலின் உதவியுடன் வந்த அவர் முதிய வயதை உடையவர்.

அவர் வந்தவுடன் அவரது மகனின் முறையீடு பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள்.
அப்பொழுது அந்த முதியவர்:

யாரசூலுல்லாஹ்! ஒரு காலத்தில் எனது இந்த மகன் அனாதரவாக, எத்தகைய உதவிக்கும் வழியின்றி இருந்தார். அப்பொழுது நான் நல்ல சரீர சுகத்துடனும் செல்வத்துடனும் இருந்தேன். என் செல்வத்திலிருந்து இவருக்கு உதவி ஒத்தாசைப் புரிவதை நான்
தடுத்துக் கொள்ளவில்லை. இன்று இவர் ஒரு செல்வந்தர். எனினும், இவர் தனது செல்வத்தின் மூலம் எனக்கு உதவுவதிலிருந்து என்னை ஒதுக்கி வைக்கின்றார்’ என்று வேதனை ததும்ப, தன் பரிதாப நிலையை விவரித்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கலங்கி விட்டன. அவர்கள் அந்த வயோதிபரின் மகனை விளித்து:

‘நீங்களும் நீங்கள் பெற்றுள்ள செல்வமும் ஆகிய எல்லாமே உங்கள் தந்தைக்குரியன!’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றிலிருந்து நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், மனிதனின் சொத்து, செல்வம், திறமைகள் என்பனவெல்லாம் பெற்றோரின் பெரும் தியாகத்தின் விளைவுகளே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இதன்படி பிள்ளைகளும் அவர்களது செல்வங்களும் அவர்களின் தந்தைக்குரியன. எனவே தந்தையின் சொற்படியே அவர்கள் செயற்பட வேண்டும். அவர்களது செல்வத்தைத் தந்தை அனுபவிப்பதை ஒருபோதும் தடுக்கக் கூடாது. அது மிகவும் தகாத செயலாகும். மேலும், பெற்றோருக்கு நன்மை நாடி பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் வெகுவாகக் கூறியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர்
தாழ்த்துவீராக. மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும்  அவர்களிரு வருக்கும் கிருபை  செய்வாயாக!’ என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!’ (அல்குர்ஆன் 17:24)

என் அகம் நிறைந்த அம்மா!

ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர். எமக்காக எப்பொழுதும்
தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய
முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா!

அல்குர்ஆனும் நபிகளார் அறவுரைகளும் இது பற்றிய மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.

‘தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக
சிறப்பானது’! என ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,

‘யா ரசூலுல்லாஹ்! நான் அடிபணிந்து நிற்பதற்கும் மற்றவர்களை விடவும் சிறப்பானவராகக் கருதுவதற்கும் உரியவர் யார்?’ எனக் கேட்டார்.

‘உங்கள் தாய்!’ என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.

‘அதன் பின் யார்?’ அவர் மீண்டும் கேட்டார்.

‘உங்கள் தாய்!’ மீண்டும் அதே பதில் வந்தது.

‘அதன் பின் யார்?’ வந்தவர் மீண்டும் கேட்டார்.

‘உங்கள் தாய் தான்!’ நபி (ஸல்) அவர்கள் நாவிலிருந்து பதில் வந்தது. நான்காவது முறையாக, ‘அடுத்தவர் யார்?’ எனக் கேட்ட பொழுது, ‘உங்கள் தந்தை!’ என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

‘தாயின் பாதத்தடியில் சேயின் சுவனம் உண்டு!’

என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு
அன்புடன் பணிவிடை செய்து, அவரை மிக நல்ல முறையில் கவனித்து வந்தால் உங்களுக்கு
சுவன பாக்கியம் கிட்டும் என்பது இதன் கருத்து. இத்தகைய எண்ணற்ற போதனைகள்
தாய்க்குப் பணிவிடை செய்வதை பெரும் கடமை எனக் கூறி நிற்கின்றன.

பெற்றோரில் ஒருவரோ இருவருமோ மரணித்து விட்டால், அவர்களுக்காக இறைவனிடம்
பிரார்த்தனைப் புரிய வேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்களுக்கு மறுவுலக இன்பங்கள் கிட்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும் என்பது இறைத்தூதரின் இதயம் நிறைந்த கட்டளை.

பெற்றோருக்கு கண்ணியமளித்து, மிகுந்த கீழ்படிதலுடன் நடந்து, அவர்கள் வயது
முதிர்ந்து விட்டால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பணிவிடை புரிவதை
அல்லாஹ் போற்றியுள்ளான். அப்படி நடந்து கொள்வதைக் கட்டாயப்படுத்தியுள்ளான்.

ஆனால் ஒரு முக்கிய விஷயம்:

அல்லாஹ் தடுத்துள்ள, ‘செய்யக் கூடாது’ என விலக்கியுள்ள எதையும் தமது அன்புப்
பெற்றோர் செய்யும் படி பணித்தால், அவற்றைச் செய்யக் கூடாது. அப்படியானவற்றைத்
தவிர்த்து நடக்க வேண்டும் என்பது தான் இறை கட்டளை.

பெற்றோராயினும் தவறான, (இஸ்லாத்திற்கு) முரணான செயல் ஒன்றைச் செய்யும் படி
வேண்டினால் எப்படிச் செய்வது, எனினும் அவர்களது (இஸ்லாத்திற்கு முரணில்லாத)
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. இதை நாம் விளங்கிக் கொள்ள
வேண்டும்.