Category Archives: குர்ஆன் விளக்கம்

4:19 கட்டாயத் திருமணம்

கட்டாயத் திருமணம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً    

    ‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.

    அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!

    அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)
 

    பெண்களின் உரிமைகள் குறித்து மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் அடங்கியுள்ளன. இம்மூன்று கட்டளைகளையும் இக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்து கொண்டால் பெண்களின் உரிமையைக் காப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.

    முதலாவது கட்டளைக்குள் இரு செய்திகள் அடங்கியுள்ளன. இதன் நேரடியான பொருளைப் பார்க்கும் போது பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை அது கூறுகிறது. இவ்வசனம் எந்த சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் போது மற்றொரு செய்தியையும் சேர்த்துச் சொல்கிறது. எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதன் நேரடியான பொருளையும் எது குறித்து அருளப்பட்டதோ அந்தக் கருத்தையும் அவ்வசனம் சேர்த்துக் கூறுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் முன் இதன் நேரடியான பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

    இஸ்லாம் மார்க்கம் அருளப்படுவதற்கு முன்னால் உலகில் எந்தச் சமுதாயத்திலும் எந்தப் பகுதியிலும் திருமணத்தின் போது பெண்களின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நாகரீக உலகில் கூட பல பகுதிகளில் பெண்களின் சம்மதம் பெறப்படாமல் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்படுவதைக் காண்கிறோம்.

    இருபதாம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றால் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகத் தான் இருந்திருக்கும்.

    இத்தகைய காலகட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மண்ந்து கொள்வது ஹலால் இல்லை. அனுமதி இல்லை என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. இவ்வாறு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் தரப்பிலிருந்து கோரிக்கையோ போராட்டமோ நடத்தப்படாத கால கட்டத்தில் இஸ்லாம் தன்னிச்சையாக – உலகிலேயே முதன் முறையாக – இந்த உரிமையை வழங்குகிறது.

    திருமறைக் குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் இந்த உரிமையை வலிமையுடன் வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

    புகாரியின் மற்றொரு அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என விடையளித்தார்கள்.

    கன்னிப் பெண் தனது சம்மதத்தைத் தெரிவிக்க வெட்கப்படுவாள். அதே சமயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள். பெண்களின் இந்த இயல்பைக் கவனத்தில் கொண்டுதான் கன்னிப் பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

    பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தப் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது.

    இதைவிடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்!

    ‘கணவன் இல்லாதவள் (திருமணம் ஆகாதவள், கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவள், கணவனை இழந்தவள் ஆகிய மூவரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்) தனது பொறுப்பாளனை விட தன் விஷயமாக முடிவு செய்ய அதிக உரிமை படைத்தவளாவாள். கன்னிப் பெண்ணிடமும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    ஒவ்வொரு பெண்ணும் தனது விஷயத்தில் தானே அதிக உரிமை படைத்தவள். பெற்றவர்களை விட அவளே தன் விஷயமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் என்று இருபதாம் கூற்றாண்டில் கூட சொல்ல முடியவில்லை – என்பதை நினைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தறுதலைப் பெண்டிரின் தீய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    இதை விடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உரிமையை எப்படி வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

    ‘அவள் மறந்து விட்டால் அவள் மீது வரம்பு மீறுதல் யாருக்கும் கிடையாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)

    ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாதவருடன் அவரது பெற்றோர் மணமுடித்து வைத்து விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று உலகின் முதன் முதலாகப் பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

    கன்ஸா என்ற விதவைப் பெண்ணை அவரது தந்தை கிதாம் என்பாருக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் கன்ஸாவுக்கு இதில் விருப்பமில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி)

    என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். ‘என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை’ என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ)

    இந்தச் சான்றுகளிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் மக்களை ஒரு உணர்வற்ற பொருளாகக் கருதக் கூடாது. அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு எந்த மணமகனை விரும்பினாலும் அவருடன் மண முடித்து வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்;கிறது. பிடிக்காதவனுடன் வாழ்க்கை நடத்துவதால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும். பெண்கள் வழி தவறிச் செல்லவும் இது பாதையை ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

    விருப்பமில்லாதவனுக்கு ஒரு பெண் முடிக்கப்பட்டால் அவள் சமுதாயப் பெரியவர்களிடம் ஊர் ஜமாஅத்துகளிடம் அதை தெரிவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த திருமணத்தை ரத்துச் செய்து உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமையைப் பெற்றோர் பறிக்கும் போது சமுதாயம் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும்.

    இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் பெண்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    யார் தனக்கு வாழ்க்கைத் துணைவனாக வர வேண்டும் என்பதையும் யார் வரக்கூடாது என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கினாலும் தாமாக ஓடிப்போய் மணந்து கொள்ளக் கூடாது. அந்த உரிமையைப் பெற்றோர் வழியாகவும் அவர்கள் மறுத்தால் பெரியோர்கள், சமுதாய இயக்கம் வழியாகத் தான் பெற வேண்டும்.

    ஏனெனில் பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (இது குறித்து மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கப்படும்.)

    பெண்களை மணந்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்து விட்டு வீதியில் வீசி எறிந்து விட்டு செல்லக்கூடிய மனநிலை தான் பெரும்பாலான ஆண்களுடையது. பொருப்பாளர் முன்னிலையில் அவர் நின்று நடத்தும் போது ஏமாற்றி விடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்வார். இது பெண்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். இதைக் கவனத்தில் கொள்ளாது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட அபலைகள் ஏராளம் உள்ளனர் என்பதைப் பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    பெண்களைக் கட்டாயப் படுத்தி அவர்களுக்கு வாரிசாகுவது ஹலால் இல்லை என்ற ஒற்றை வரியில் இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ளன.

    இவ்வசனம் எந்தச் சமயத்தில் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த வரியில் அடங்கியுள்ள மற்றொரு அறிவுரையையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

    ஒருவர் மரணித்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தார் தான் அவரது மனைவி விஷயத்தில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வந்தனர். கணவனின் உறவினர்கள் விரும்பினால் தாமே அவளை (வலுக்கட்டாயமாக) மணந்து கொள்வர். விருப்பமில்லா விட்டால் அவளுக்கு வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார்கள். அவளது குடும்பத்தினரை விட கணவனின் குடும்பத்தினரே பெண் விஷயத்தில் உரிமை படைத்தவர்கள் என்ற நிலை இருந்தது. இதை மாற்றவே இவ்விசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: புகாரி)

    கணவன் இறந்த பிறகு கூட பெண் கணவனின் உடமையாகத் தான் அன்று கருதப்பட்டாள். அவள் அழகானவளாக இருந்தால் கணவனின் உறவினரில் யாராவது அவளை அவளது சம்மதமின்றி மணந்து கொள்ளலாம். அவள் அழகில்லாதவளாக இருந்து விட்டால் அவளை வேறு யாருக்கும் மணமுடித்து வைக்க மாட்டார்கள். வீட்டிலேயே அடைத்து வைப்பார்கள்.

    இவ்வாறு செய்வதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு மஹர் கொடுக்கும் வழக்கம் அந்த அறியாமைக் காலத்திலும் இருந்து வந்தது.

    மஹராகப் பெற்ற அந்தச் சொத்து அவளுக்கே உரிமையாக இருந்து வந்தது. கணவன் இறந்த பின் அவன் கொடுத்த மஹரைத் திரும்பிப் பெறுவதற்காக கணவனின் குடும்பத்தார் அவளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். அவனது மஹரைத் திருப்பிக் கொடுத்தால் அவளை விட்டு விடுவார்கள். அவள் மஹரைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவள் மரணிக்கும் வரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு அவள் இறந்ததும் அந்தச் சொத்தை தமதாக்கிக் கொள்வார்கள். (அந்த விபரங்கள் அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

    இந்தக் கொடிய வழக்கம் முழுவதையும் அடியோடு தடை செய்யவே இவ்வசனம் அருளப்பட்டது.

    ஒருவன் இறந்த பின் அவனது மனைவியும் அவளது உடைமைகளும் கணவனின் குடும்பத்தாரைச் சேரமாட்டார்கள். அந்தப் பெண் தனது சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் செல்லலாம்.

    கணவன் இறந்து விட்ட காரணத்தினால் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அந்தப் பெண் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாம்.

    கணவன் திருமணத்தின் போது தோட்டத்தையோ நகையையோ, பெரும் தொகையையோ மஹராகக் கொடுத்திருக்கலாம். கணவன் இறந்து விட்டால் அந்தச் சொத்துக்கு மனைவி தான் உரிமையானவளே தவிர கணவனின் குடும்பத்தாருக்கு அதில் முழு அளவுக்கோ, சிறு அளவுக்கோ உரிமை கிடையாது.

    இவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் வழி காட்டுதலாகும். இது இருபதாம் நூற்றாண்டுக்கும் தேவையான இஸ்லாத்தின் போதனையாகும்.

    பெண்ணுரிமை என்று காட்டுக் கூச்சல் போட்டு இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த விரும்புவோர் கூட இன்னும் பெற முடியாத உரிமைகளை இஸ்லாம் எந்தக் கூச்சலும் போடாமலேயே பெண்களுக்கு அளித்துள்ளது என்பதை உணர வேண்டும்.

    முஸ்லிம் பெற்றோர்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் இத்தகைய விமர்சனத்திற்கு இடமளிக்காமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அப்படியே வழங்க வேண்டும். இதை மறுத்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் செய்யத் தூண்டக் கூடாது.

    அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவை பாலிய வயதிலேயே திருமணம் செய்தது ஏன் என்பதையும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியில் கூறப்படும் இனிய நல்லறத்தின் முழு இலக்கணத்தையும் அடுத்து பார்ப்போம்.

3:128 உஹதுப் போர் படிப்பினைகள்

உஹதுப் போர் படிப்பினைகள்

 لَيْسَ لَكَ مِنَ الأَمْرِشَيْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَـهُمْ فَإِنَّـهُمْ ظلِمُوْنَ   

‘(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை, அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம், – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதன் காரணமாக.’ (அல்குர்ஆன் – ஆல இம்ரான் 3: 128)

    இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்ட வசனமாகும்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்படுகிறது. அவர்களின் நெற்றியில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களின் முகமெங்கும் இரத்தக்கரை படிந்திருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதற்காகவே இந்த வசனம் இறங்கியது.

அந்த வார்த்தை என்னவெனில்,

 كَيْفَ تُفْلِحُ قَوْمٌ فَعَلُوْا هذَا بِنَبِيِّهِمْ  

அவர்களின் நபியை இவ்வாறு செய்தவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? 

  وَهُوَ يَدْعُوْهُمْ إِلَى رَبِّـهِمْ عَزَّ وَجَلَّ  

 

அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறார்.

    அதாவது இந்த நபியின் பல்லை உடைத்து, நெற்றியிலும் காயத்தை ஏற்படுத்தி முகமெங்கெங்கும் இரத்தக்கரை ஏற்படுத்திய மக்காவிலிருந்து வந்திருக்கும் எதிரிப்படையினர் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும், அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி அவ்வாறு சொல்லக் கூடாது என்று நபிக்கு கட்டளையிடுகிறான்.

    ஒரு பக்கம் முஸ்லிம்களின் படை, மறுபக்கம் நிராகரிப்பவர்களின் படை இவற்றில் எந்தப்படையை வெற்றி கொள்ள வைப்பது?, எந்தப் படையை தோல்வியுறச் செய்வது? என்ற அதிகாரமெல்லாம் அல்லாஹ்வாகிய எனக்குரியது. இந்த எனது அதிகாரத்தில் நீர் தலையிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களை கடுமையாக கண்டிக்கிறான்.

    அதனால் தான், ‘நபியே! இவ்விஷயத்தில் உமக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் கொடியோராக இருப்பதால் அவர்களை அவன் மன்னிக்கவும் செய்யலாம், அல்லது தண்டிக்கவும் செய்யலாம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

    இந்த வசனத்தின் மூலம் இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்வது சாலச் சிறந்ததாக இருக்கும்.

    இந்த இறைவேதம் அல்குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால், அல்லது நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கற்பனையில் உதித்தவையாக இருந்திருந்தால், அல்லது அல்லாஹ் இறக்கிய வசனங்களை மறைப்பவர்களாக இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்த வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றிருக்காது.

    பொதுவாகவே மனிதன் தனது கௌரவத்தை பாதிக்கக் கூடிய விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கக்கூடியவனாகவே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் தவறு செய்கிறார்கள், அதை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான், அந்த வசனங்களும் அல்குர்ஆனில் இடம் பெற்றிருப்பதே இது இறைவனிடமிருந்து வந்த வேதம் என்பதற்குரிய மிகப்பெரிய சான்றாகும்.

    இன்னொரு விஷயத்தையும் நாம் விளங்கிக் கொள்வோம்.

    நபி (ஸல்) அவர்கள் வேண்டுமென்றே தவறு செய்யக்கூடியவர்கள் அல்லர். தவறில்லாத விஷயத்தை செய்யும் போது, மறுபுறம் தவறு போல் தோன்றும் விஷயத்தில் கூட, இஸ்லாம் மிகத் தெளிவாக இருக்கும், அதை பூசி மறைக்காமல், நெளிந்து கொடுக்காமல், வளைந்து கொடுக்காமல் நேருக்கு நேராக சொல்லும்.

    அல்லாஹ் திருமறையில், ‘முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள்’ என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் கூட இந்த வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கக் கூடும். அதே நேரத்தில் வேறொரு கோணத்தில் தவறு இருப்பது போல் தோன்றுவதால் அல்லாஹ் அதை கண்டிக்கிறான்.

    இஸ்லாம் ஓர் இறைமார்க்கம் என்பதற்கு இது ஒரு ஆதாரமாகும்.

    அல்லாஹ் தனது அதிகாரத்தை எவருக்கும் பங்கு வைத்து கொடுக்க மாட்டான் என்பதற்கு இந்த வசனம் தெளிவான சான்றாகும். அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தனது அதிகாரத்தை பங்கு வைத்து கொடுக்க வில்லை என்பதை இந்த வசனம் விளக்கமாக சொல்கிறது.

    இந்த உலகத்தில் ஜனாதிபதிக்கு தெரியாமலேயே, அவரது உதவியாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், பிரதம மந்திரி, முதலமைச்சர் போன்றோரின் உதவியாளர்கள் அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்வதையும் நாம் சர்வசாதாரணமாக பார்த்து வருகிறோம்.

    ஆனால் அல்லாஹ்வின் அதிகாரத்தை இந்த உலகில் பிறந்த எந்த மனிதரும், கடுகளவு கூட பயன்படுத்தவும் கூடாது, தவறாக பயன்படுத்தி இறைவனுக்கு இழுக்கு ஏற்படுத்தி விடவும் கூடாது. இதற்கான நிறுத்தல் புள்ளி தான் இந்த வசனமாகும்.

    இருந்தும் கூட, தான் ஒரு கடவுளின் அவதாரம் என்று மக்களை ஏமாற்றும் பேர்வழிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள் மனிதராக பிறந்தார் என்று மற்றொரு கூட்டமும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வசனம் இவை இரண்டையும் மறுக்கிறது.

    நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர் பத்ருப் போர், அதில் மிகச் சிறிய முஸ்லிம் படையினர் அவர்களை விட பல மடங்கு பெரிய நிராகரிப்போரின் படையை வெற்றி கொண்டார்கள்.

    ஆனால் உஹதுப் போரில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு கூட பலத்த காயங்கள் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி கூட பரவியது.

    எல்லாவற்றுக்கும் நபித்தோழர்கள் நபிகளாரின் கட்டளையை பின்பற்றத் தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

    மலைக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பு எறியும் வீரர்கள், வெற்றி அடைந்து விட்டோம் என்று எண்ணி தனது நிலையிலிருந்து கீழே இறங்கியது தான், புறமுதுகிட்டு ஓடிய நிராகரிப்பாளர்கள் திரும்பி வந்து மறுதாக்குதல் தொடுக்க காரணமாக இருந்தது, அதுவே தோல்விக்கும் காரணமாக இருந்தது.

    தீயவர்களை மன்னிக்கவும் தண்டிக்கவும் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இருப்பது போன்று, வெற்றியை கொடுப்பதும் தோல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது என்பது தான் உஹதுப் போர் நமக்கு உணர்த்தும் பாடமாகும். 

2:223 தாம்பத்திய உறவு

தாம்பத்திய உறவு

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ  

       ‘உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!’ (அல்குர்ஆன் 2:223)

    திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.

இன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி தாம்பத்திய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகின்றனர்.

சில மாதங்களில் தம்பதியரை வலுக்கட்டாயமாகப் பிரித்து வைத்து ரசிக்கின்ற கொடுமையையும் நாம் கண்டு வருகிறோம். அந்தக் கால கட்டத்தில் ஆண்களில் பலர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் அது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
இத்தகையோரின் மூட நம்பிக்கைகளைக் களைவதாகக் கூறிக் கொண்டு எழுதப்படும் நூல்களும் விளக்கங்களும் கேட்பதற்கே காதுகள் கூசும் அளவுக்கு ஆபாசமாக அமைந்துள்ளன.

ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.

ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.

பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.

விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.

தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ‘உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்’ என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.

அதைச் செய்யலாம். இதைச் செய்யலாம். அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் பட்டியல் போட்டு, கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமாறு இவ்வாசகம் இருக்க வில்லை. மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வேண்டாம் என்று இதற்கு மந்தைய வசனம் கூறியதை கடந்த மாதம் அறிந்தோம். மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறிகிறோம்.

இவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோ, அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன். அது கூடாது இது கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அந்தத் தடைகளைக் கவனத்தில் கொள்ள முடியாத நேரம் அது. எந்தத் தடையும் கட்டுப்பாடும் அர்த்தமற்றதாகத் தான் அமையும். இதனால் பாவம் செய்து விட்டோமோ என்ற உறுத்தல் தான் மிஞ்சும்.

படைத்தவனுக்கு இதெல்லாம் தெரியும் என்பதால் தாம்பத்தியத்தில் அனைத்தையுமே – அனைத்தையும் தான் – அனுமதிக்கிறான்.

அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகில் மனிதன் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கூட இவ்வசனம் தக்க தீர்வைக் கூறுகிறது.

குழந்தையில்லாத பெண்கள் கணவன் அல்லாத மற்றவனின் உயிரணுவைக் கருவறையில் செலுத்தும் முறை பரவிவருகிறது. உங்கள் மனைவியர் உங்களது விளைநிலம் தான். நீங்கள் தான் பயிரிட வேண்டும். வேறு எவரும் அதில் பயிரிட முடியாது என்று தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.

விவாகரத்து செய்து விட்டு வேறு கணவனை மணந்து அவனது விளைநிலமாக மாறி அவனது கருவைச் சுமக்கலாமே தவிர ஒருவனது விளைநிலமாக இருந்து கொண்டு மற்றவனின் கருவைச் சுமக்க முடியாது என்பதற்கு இவ்வசனம் தெளிவான ஆதாரமாக உள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட எண்ணுவோருக்கு இதில் எச்சரிக்கை உள்ளது. உங்கள் விளைநிலங்களில் – அதாவது மனைவியரிடத்தில் – மட்டும் தான் பயிரிடலாமே தவிர மாற்றாரின் விளைநிலத்திலோ அல்லது உங்களுக்கு உரிமையில்லாத நிலத்திலோ பயிரிட முடியாது என்பதும் இதனுள் அடங்கிக் கிடக்கிறது.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவ்வசனத்தையும் இதற்கு முந்தைய வசனத்தையும் சிந்தித்தார்களானால் தாம்பத்திய வாழ்வு குறித்து எவரிடமும் எந்த விளக்கமும் கேட்கத் தேவையில்லை. இவ்வசனங்கள் மட்டுமே எல்லா சந்தேகங்களையும் நீக்குவதை உணர்வார்கள்.

2:222 பெண் என்றால் கேவலமா?

பெண் என்றால் கேவலமா?

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ  

  ‘(நபியே!) உம்மிடம் மாதவிடாய் பற்றி அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஓர் தொல்லையாகும். மாதவிடாயின் போது பெண்களிடமிருந்து (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை (உடலுறவுக்காக) அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் திருந்துவோரை விரும்புகிறான், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்’ என்று (நபியே!) கூறுவீராக’. (அல்குர்ஆன் 2:222)

    ஆண் பெண் இருபாலரிடையே உடற்கூறு ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான வேறுபாடாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைக் குறிப்பிடலாம்.

    மாதவிடாய் வெளிப்படும் போது தான், சிறுமி என்ற நிலையிலிருந்து பெண் என்ற நிலையை ஒருத்தி அடைகிறாள். பெண்மையின் மற்றொரு சிறப்பம்சமான தாய்மை ஏற்படுவதற்கான தகுதியையும் மாதவிடாய் தான் தீர்மானிக்கிறது.

    உடற்கூறு ரீதியான இந்த வேறுபாட்டைக் காரணம் காட்டி உலகில் உள்ள எல்லா மதத்தினரும் பெண்களை மிகவும் இழிவாக நடத்துகின்றனர். பெண்கள் கூட இத்தகைய இழிவை ஏற்றுக் கொள்கின்றனர்.

    மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் புழக்கடையில் ஒதுக்கப்படுகின்றனர். அந்த நாட்களில் பயன்படுத்தப் படுவதற்கென்று பாத்திரங்கள் கூட தனியாக வைத்துக் கொள்கின்றனர்.

    அவர்களைத் தொடுவதும் கூட தீட்டாகக் கருதப்படுகின்றது. அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் உண்பதும் பருகுவதும் கிடையாது.

    அப்பெண்களை அவர்களின் அழகை அனுபவிக்கின்ற கணவர்கள் கூட பெண்களை இந்த நாட்களில் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.

    இயல்பிலேயே பெண்கள் மட்டரகமானவர்கள் என்று சித்தரிப்பது தான் இவர்களது நோக்கமாகும்.

    இந்த நிலைமை 20 ஆம் நூற்றாண்டில் கூட முழுமையாக மாறவில்லை. சில குடும்பங்களில் அந்த நிலை மாறியுள்ளது என்றாலும் இத்தனை நூற்றாண்டுகள் இதற்குத் தேவைப்பட்டுள்ளது.

    1400 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் வெறும் போகப் பொருட்களாக மட்டுமே கருதப்பட்டு வந்த காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதலை இஸ்லாம் ஏற்படுத்தியது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் யூத சமுதாயத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவார்கள். உண்ணும் போதும் பருகும் போதும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான். இவ்வசனம் அருளப்பட்ட பின் உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்! வீடுகளில் அவர்ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அபூதாவூது

    விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்ற காலத்தில் கூட சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஒரு மாற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அன்றைக்கே செய்து காட்டியுள்ளனர்.

    மாதவிடாய் என்பது கடவுனின் சாபத்தின் அடையாளம் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடு என்ற மூடநம்பிக்கை நிலவிய அன்றைய காலத்தில் அந்தப் புரட்சியை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

    நபிகள் நாயகத்தின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது அவர்கள் படுக்கையிலிருந்து ஒதுங்கினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு ஒரே போர்வையில் உம்மு ஸலமா (ரலி) அவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். அதை உம்மு ஸலமா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். (புகாரி)

    எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என் மீது சாய்ந்து கொண்டதுண்டு என அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)

    பள்ளிவாசலில் நபி (ஸல்) (இஃதிகாப்) தங்கியிருக்கும் போது எனது வீட்டுக்குள் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் அவர்களின் தலையைக் கழுவி விடுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)

    பள்ளியில் இருந்த விரிப்பை கைநீட்டி எடுத்துத் தருமாறு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டனர் எனக்கு மாதவிடாய் என்று நான் கூறினேன். மாதவிடாய் உன் கையில இல்லையே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்

    மாதவிடாய் நேரத்தில் தம்மனைவி கடித்த இறைச்சியை அதே இடத்தில் கடித்து நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளனர். (நூல்: முஸ்லிம்)

    பள்ளிவாசலில் தங்கக் கூடாது! தொழக்கூடாது! நோன்பு நோற்கக் கூடாது. கஃபா ஆலயத்தில் தவாபு செய்யக் கூடாது என்பதைத் தவிர மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் ஏனைய பெண்கள் போல் நடந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

    இருபதாம் நூற்றாண்டில் கூட துணிவாகச் சொல்ல முடியாத முழுமையாக நடை முறைப்படுத்த முடியாத ஒரு புரட்சிகரமான கருத்தை அன்றைக்கு நபி (ஸல்) அவர்கள் சர்வ சாதாரணமாக விளக்கி விட்டார்கள்.

    உலகத்தைப் பற்றியோ சமுதாய பழக்கவழக்கங்கள் பற்றியோ அவர்கள் கவலைப்பட வில்லை.

    இயற்கையான ஒரு உபாதையின் காரணமாகப் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படும் கொடுமையை மட்டுமே அவர்கள் கவனத்தில் கொண்டார்கள்.

    எந்த உரிமைக்காக இன்றுவரை பெண்கள் போராட வேண்டியுள்ளதோ – போராடியும் பெற முடியவில்லையோ அத்தகைய உரிமைகளை எவ்விதப் போராட்டமும் இன்றி நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு வழங்கி விட்டனர்.

    பெண்ணுரிமைக்குப் போராடுவோர் அவர்கள் கேட்கின்ற உரிமைகள் பலவற்றை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளதை உணரட்டும்! முஸ்லிம் பெண்களும் தங்களுக்குக் கிடைத்துள்ள அந்த கண்ணியத்தைப் புரிந்து கொள்ளட்டும்.

2:221 இனக் கவர்ச்சியை வெல்லும் வழி!

இனக் கவர்ச்சியை வெல்லும் வழி!

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلاَ تُنكِحُواْ الْمُشِرِكِينَ حَتَّى يُؤْمِنُواْ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُوْلَـئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللّهُ يَدْعُوَ إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونََّ 

  ‘இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை – அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்! இறை நம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!

    உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் ஈமான் கொள்ளும் வரை – மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!

    (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்’. (அல்குர்ஆன் 2:221)

    மனித வாழ்க்கையில் திருமணம் இருபாலாருக்கும் அவசியமான ஒன்றாகும். திருமணத்தின் மூலம் தான் வாழ்க்கையே நிறைவடைகிறது எனலாம்.

    வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்தனையோ அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும் பருவ வயதையடைந்தவர்கள் வெறும் புறக்கவர்ச்சியில் மயங்கி எதிர்கால மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றனர்.

    மோகம் முற்றியிருக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணையின் கோபமும் கூட கவர்ச்சிகரமானதாகத் தோற்றமளிக்கும். சில மாதங்களில் எதார்த்த நிலைக்கு வந்த பிறகு தான் எத்தனை விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை உறைக்கும் வாழ்க்கை முழுவதும் நரகமாகி விட்டதை அப்போது தான் உணர்வார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தொலைத்த பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.

    குறிப்பாக பெண்கள் இத்தகைய இனக்கவர்ச்சிக்கு வசப்பட்டுவிட்டால் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படுகின்றனர். சிவப்பு விளக்குப் பகுதியில் கூட விற்கப்படுகின்றனர்.

    இந்த இனக்கவர்ச்சியில் மயங்காமல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி? இதை வென்றெடுக்கும் வழி என்ன?
இதைத் தான் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

    இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்ற எண்ணம்தான் எப்படியாவது இந்த உலகத்தை அனுபவித்துவிடத் தூண்டுகிறது. சிந்தனைக்குத் திரை போடுகிறது.

    இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழியும். அழிந்த பின் அனைவரும் இறைவன் முன்பாக நிறுத்தப்படுவோம். அவரவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ பெறுவார்கள் என்பதை யார் உறுதியுடன் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த இனக்கவர்ச்சியை வெல்ல முடியும்.

    இந்த நம்பிக்கையையூட்டி நமது சந்ததிகளை வளர்ப்பதால் மட்டுமே இந்த விபரீத முடிவிலிருந்து அவர்களைத் தடுக்க முடியும்.

    குறிப்பாக முஸ்லிம்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களைத் தமது வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்யக் கூடாது. அவர்கள் எவ்வளவு தான் கவர்ச்சி மிக்கவர்களாக இருந்தாலும் சரி என்று இவ்வசனம் வலியுறுத்துகிறது.

    மேலும் இறைநம்பிக்கையுள்ளவன் அடிமையாக இருந்தாலும் கூட பல தெய்வ நம்பிக்கையுடையவனை விட – அவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளவனாக இருந்தாலும் சிறந்தவனாவான் எனவும் இவ்வசனம் கூறுகிறது.

    அழகுக்காக, பாரம்பர்யத்துக்காக, செல்வத்துக்காக, மார்க்கத்துக்காக பெண்கள் மணமுடிக்கப்படுகின்றனர். நீ மார்க்கப்பற்றை முன்வைத்து மணந்து வெற்றி பெறு! என்ற நபிமொழி கூட இதற்கு விளக்கமாகத் தான் அமைந்துள்ளது.

    வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் போது ஏகத்துவக் கொள்கையில் நம்பிக்கை உள்ளதா என்பது மட்டுமே நம் கவனத்துக்கு வர வேண்டும்.

    இது எப்போது சாத்தியமாகும்? எப்படிச் சாத்தியமாகும்? பணத்தை விடவும் அழகைவிடவும் மார்க்கத்தை முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் தன்மை நம்மிடம் எப்போது ஏற்படும்.

    அதைத் தான் இவ்வசனம் விளக்குகிறது.

    ‘அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ சொர்க்கத்தின் பாலும் மன்னிப்பின்பாலும் உங்களை அழைக்கிறான்’ என இவ்வசனம் கூறுகிறது.

    பல தெய்வ நம்பிக்கையுடையவர்களை முஸ்லிமல்லாதவர்களை – மணக்க விருப்பம் ஏற்பட்டால் அவர்கள் நம்மை நரகத்தின் பால் அழைக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

    அவர்களை மணப்பதின் மூலமும், பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மார்க்கத்தையே விட்டுக் கொடுப்பதன் மூலமும் நாமும் நரகத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணரக் கூடியவர்கள் இத்தகைய விபரீதமான முடிவுக்கு வரமாட்டார்கள்.

    மறுமை வாழ்வைப் பற்றிய அச்சம் தான் யூசுப் நபியைக் காப்பாற்றியது. எந்தக் கவர்ச்சியும் அவரை மயக்க முடியவில்லை. எனவே மறுமை வாழ்க்கையின் மீது இளம் தலைமுறைக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் இரு உலக வாழ்க்கையையும் பாதுகாப்போம்.

2:187 இல்லறம் சிறக்க!

இல்லறம் சிறக்க!

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ 

  ‘நோன்பு கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (உங்கள் மனைவியரான) பெண்கள் உங்களுக்கு ஆடையாகவுள்ளனர். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவுள்ளீர்கள்’. (அல்குர்ஆன் 2:187)    

    நோன்பு நோற்பவர்கள் பகல் காலங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது போல் உடலுறவிலும் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். நோன்பு கால இரவுகளில் இவற்றைச் செய்யலாமா என்ற சந்தேகத்திற்கு விடையாகவே இவ்வசனம் அருளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தாம்பத்திய உறவு கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

    இவ்வசனம் நேரடியாகக் கூறுவது இதுதான் என்றாலும் மறைமுகமாக இல்லறவாழ்வு சிறப்பாக அமைவதற்கான சிறந்த அறிவுரையும் இதனுள் அடங்கியுள்ளது.

ஆண்களும் போகப் பொருள் தான்!

    பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.

    அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.

    பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

    ‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.

    ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.

    இல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.

    இந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப் படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.

    மேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

    பகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.

    கணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.

    இந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.

    உதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    பல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.

    ஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.

    ஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.

    அந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.

    அது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.

    இத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.

    மேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.

    உங்கள் கணவர்களிடம் – உங்கள் மனைவியரிடம் – உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.

    வெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.

    மனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.

    ஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.

    அதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.

    அந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.

    எந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.

    பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.

    குடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.

    அணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.

    புத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

    அவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.

    ஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.

    அந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

    எந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.

    கணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.

    இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

    அவர்கள் உங்களுக்கு ஆடை! நீங்கள் அவர்களுக்கு ஆடை! என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.

    மறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.

    இவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.

2:159 சத்தியத்தை மறைக்காதீர்

சத்தியத்தை மறைக்காதீர்

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَـئِكَ يَلعَنُهُمُ اللّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونٌٌَ

 ‘இவ்வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். சபிக்கக் கூடியவர்களும் சபிக்கின்றனர். (மறைத்தக் குற்றத்திற்காக) மன்னிப்புக் கோரித் திருந்தி (மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. இவர்களின் மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மன்னித்து அருள் புரிபவன்.’ (அல்குர்ஆன் 2:159,160)

    மனித சமுதாயம் நேர் வழி பெறுவதற்காக இறைவன் ஏராளமான நபிமார்களை இவ்வுலகுக்கு அனுப்பி, அவர்களுக்கு வேதத்தையும் வழங்கினான். அந்த நபிமார்களின் போதனைகளையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் கற்றறிந்த மக்கள் – அதாவது மார்க்க அறிஞர்கள் – சாதாரண மக்களிடமிருந்து அவற்றை மறைத்ததால் தான் அடுத்தடுத்து நபிமார்களை அனுப்பும் அவசியம் ஏற்பட்டது. இதனால் தான் மக்கள் நேரான வழியிலிருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலைமை இந்தச் சமுதாயத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கற்றறிந்த மக்களுக்கு இங்கே கடும் எச்சரிக்கை செய்கிறான் இறைவன். சத்தியத்தை மறைப்பதற்கு இவர்கள் கற்பிக்கும் நியாயங்களையும் இறைவன் நிராகரிக்கின்றான். இவ்வசனங்கள் மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் கவனமாகச் சிந்திக்க வேண்டிய, அடிக்கடி நினைவு கூர வேண்டியவையாகும்.

    மார்க்கத்தை மறைக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமன்று, நாங்கள் அனைத்தையும் சொல்லி விடத் தயாராகவே இருக்கிறோம். ஆனாலும் மக்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள இயலாது. இதன் காரணமாகவே மக்கள் எவற்றைப் புரிந்து கொள்வார்களோ அவற்றை மட்டும் மக்களுக்குச் சொல்கிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்தும் அறிஞர்கள் பலரை நாம் காண்கிறோம்.

    இவர்களின் இந்த சமாதானம் சில மனிதர்களைத் திருப்திப் படுத்தப் பயன்படலாம். இறைவன் முன்னிலையில் எடுபடாது.

    உலகில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நல்ல சிந்தனையாளர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சராசரி மனிதனால் புரிந்து கொள்ள இயலாது. இது உண்மை தான், அதே நேரத்தில் எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களும் உள்ளன. அவற்றைப் பேரறிஞன் எப்படிப் புரிந்து கொள்வானோ அது போலவே அடி முட்டாளும் புரிந்து கொள்வான். இப்படிப்பட்ட விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

    தாய், தந்தை மற்றும் உறவினர்களை அறிந்து கொள்ளுதல், நிறங்களை வகைப்படுத்தி அறிந்து கொள்ளுதல், எளிமையான கணக்குகளை அறிந்து கொள்ளுதல் போன்று ஆயிரமாயிரம் விஷயங்களை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்கின்றனர்.
அல்லாஹ்வுடைய மார்க்கம் – வேதம் – அறிவாளிகள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களைப் போன்றதா? அல்லது அனைவரும் புரிந்துக் கொள்ளக் கூடிய விஷயங்களைப் போன்றதா?

    நாம் மக்களுக்காகத் தெளிவுபடுத்திய பின்னர் என்று இறைவன் கூறுவதன் மூலம் அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விஷயங்களைப் போன்றதாகவே மார்க்கத்தையும் தந்திருப்பதாக அவன் கூறுகின்றான்.

    இது அனைத்து மக்களுக்கும் உரியது. இது தெளிவானது. என்னால் தெளிவு படுத்தப்பட்டது என்று இந்தச் சொற்றொடர் மூலம் இறைவன் விளக்குகின்றான்.

    இது தெளிவாக இருக்கும் போது – இறைவனால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கும் போது – அனைத்து மக்களுக்காகவும் இது தெளிவு படுத்தப் பட்டிருக்கும் போது – மக்கள் விளங்க மாட்டார்கள் என்று கூறக் கூடியவர்கள் இறைவனுக்குப் புரிய வைக்க முடியவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இறைவன் தெளிவுபடுத்தியவைகளில் தெளிவில்லாதவைகளும் உள்ளன என்றும் இவர்கள் கூற வருகின்றனர்.

    மார்க்கத்தில் பல விஷயங்களை மறைப்பதற்கு இவர்கள் கூறும் சமாதானம் இறைவனின் புரிய வைக்கும் ஆற்றலையே சந்தேகிக்க வைக்கிறது என்பதை இவர்கள் உணரவில்லை.

    ‘இந்தக் குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கியிருக்கிறோம்.’ (54 : 17)

    ‘இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா!’ (4 : 82)

    என்ற வசனங்களும் இங்கே நினைவு கூரப்பட வேண்டியவையாகும்.

    உலக விஷயங்களில் அதுவும் மிகச் சில விஷயங்களில் வேண்டுமானால் இவர்களின் சமாதானம் எடுபட முடியும். மார்க்க விஷயத்தில் சிறிதும் பொருந்தாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

    நாங்கள் சத்தியத்தைச் சொல்லி விடத் தயாராகவே இருக்கிறோம். மக்கள் அவற்றை ஏற்காமல் எதிர்ப்பார்கள். இதனால் அவர்களின் கண்டனத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதற்காகவே சில உண்மைகளை நாங்கள் சொல்லத் தயங்குகிறோம் என்று கூறக்கூடியவர்களும் உள்ளனர்.

    இந்தச் சமாதானமும் இறைவன் முன்னிலையில் எடுபடாது. மக்கள் எதிர்ப்பார்கள் என்பது உண்மையே. அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. அதற்காக உண்மையைச் சொல்லத் தயங்குவது கூடாது.

    சொந்த விஷயங்களில் வேண்டுமானால் சில விஷயங்களை அது ஏற்படுத்தும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு விட்டு விடலாம். விட்டுக் கொடுக்கலாம். மார்க்கம் எவருக்கும் தனியுடைமையாக்கப் பட்டதன்று. அது இறைவனுக்குச் சொந்தமானது. நாம் அருளிய நேர்வழியை நாம் தெளிவுபடுத்தி பின் என்ற வசனத்தின் மூலம் மார்க்கம் எவருக்கும் உரிமையானதன்று என்று தெளிவாக இறைவன் அறிவித்து விடுகின்றான்.

    இவர்களுக்கு மட்டும் உரிமையில்லாத – அனைத்து மக்களுக்கும் பொதுவான – ஒன்றை மறைப்பது எந்த வகையில் நியாயம்?

    மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்று தெரிந்தே தான் அல்லாஹ் அனைத்து விஷயங்களையும் கூறியிருக்கிறான். இல்லையென்றால் மக்களின் எதிர்ப்பே வர முடியாத விஷயங்களை மட்டும் சொல்லியிருப்பான். இதையும் அவர்கள் உணர வேண்டும்.

    மக்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரும் என்று அஞ்சக் கூடிய இவர்கள் ‘அல்லாஹ் அவர்களைச் சபிக்கிறான். யாருடைய சாபத்துக்கு இறைவனிடத்தில் மதிப்பிருக்கிறதோ அவர்களும் சபிக்கிறார்கள்.’ என்ற இறைவனின் எச்சரிக்கை பற்றிக் கவலைப் படவில்லை.

    மனிதர்களின் ஏச்சுக்களால் அதுவும் சத்தியத்தை ஏற்க மறுக்கும் மனிதர்களின் ஏச்சுக்களால் எதுவும் ஏற்படப் போவதில்லை. இவர்களின் ஏச்சுகளுக்கு அஞ்சி அல்லாஹ்வின் சாபத்தை இவர்கள் தேடிக் கொள்கிறார்கள் – நல்ல மனிதர்களின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள்.

    இறைவனின் சாபத்திற்கு ஆளாகி விட்டால் மறுமை வாழ்க்கை பாழாகி விடும் என்பதை இவர்கள் உணரவில்லை.

    சத்தியத்தை மறைக்காமல் எடுத்துச் சொல்வதால் ஏற்படும் சிரமங்கள் சாதாரணமானவை. மறைப்பதால் மறுமையில் ஏற்படும் சிரமங்கள் மனிதனால் தாங்க முடியாதவை என்பதை உணரக் கூடியவர்கள் – மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் – இந்தச் சமாதானங்களைக் கூறமாட்டார்கள்.

    இவர்கள் எந்த மக்கள் மத்தியில் சில்லரை (?) விஷயங்களைக் கூறத் தயங்குகிறார்களோ அதை விட மோசமான மக்களைக் குர்ஆன் ஆரம்பத்தில் சந்தித்தது. இறை தூதரவர்கள் இவர்களை விடவும் மோசமான மக்களுக்குத் தான் போதனை செய்தார்கள்.

    படுமோசமான மக்களை நாம் சந்திக்கிறோமே! இவர்களிடம் பெரிய விஷயங்களை மட்டும் கூறுவோம் என்று நபியவர்கள் இருக்கவில்லை. நபியவர்களை விடவும் தங்களை அறிவாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் போலும்.

    இவர்கள் சின்ன விஷயம் என்று தள்ளுபடி செய்யும் விஷயங்கள் எவரது கற்பனையிலும் உதித்தவை அல்ல. அப்படி இருக்குமானால் இவர்கள் விரும்பியதை மறைக்கலாம்.

    ஆனால் இவர்கள் சின்ன விஷயங்கள் என்று கூறக்கூடியவையும் குர்ஆனில் உள்ளவை தான். நபிவழியில் உள்ளவை தான்.

    அல்லாஹ்வும் அவனது தூதரும் எல்லா மக்களுக்கும் சொன்ன விஷயங்களில் சின்னவை பெரியவை என்று பாகுபடுத்தி ஒரு பகுதியை மக்கள் மத்தியில் சென்று விடாமல் தடுக்க இவர்கள் எங்கிருந்து அதிகாரம் பெற்றனர்?

    மனிதர்களில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்று சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தவர்கள் அனைத்தையும் ஏற்பார்கள். சின்னதையும் ஏற்பார்கள். பெரியதையும் ஏற்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நம்முடைய தூதர் தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள். தடுத்ததை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். எதையும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் மனிதர்களில் உள்ளனர். அவர்கள் சின்ன விஷயங்களை மட்டுமின்றிப் பெரிய விஷயங்களையும் கூட ஏற்க மாட்டார்கள்.

    பெரிய விஷயங்களை அனைவரும் ஏற்றபின் சின்ன விஷயங்களைச் சொல்லலாம் என்றால் ஒரு காலத்திலும் அனைவரும் ஏற்கப் போவதில்லை. அதனால் இவர்கள் ஒரு காலத்திலும் சின்ன விஷயங்களைச் சொல்லப் போவதுமில்லை. கியாம நாள் வரையிலும் பெரிய விஷயங்கள் என்று இவர்கள் கருதுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். மார்க்கத்தின் கணிசமான பகுதி கடைசி வரை மக்களைச் சென்றடையாமலே இருக்கும் நிலையைத் தான் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய விஷயத்தை உணர்ந்து கொண்டவர்கள் இத்தகைய வாதத்தை எழுப்ப மாட்டார்கள்.

    சத்தியத்தை மறைப்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் எந்தச் சமாதானமும் இறைவனிடம் எடுபடாது.

    மக்கள் ஏற்கமாட்டார்கள். பக்குவப்படவில்லை. சின்ன விஷயங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்றெல்லாம் இஸ்லாம் தோன்றிய காலத்தில் நபியவர்கள் சிந்தித்தால் அதில் நியாயமிருக்கும். ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் மக்கள் பக்குவப்படவில்லை என்றால், 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சின்ன விஷயங்களைச் சொல்லக் காலம் கனியவில்லை என்றால் எப்போது தான் சொல்வார்கள்? இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்காக காத்திருக்கிறார்கள்?

    எல்லாத் தவறுகளையும் மன்னிப்புக் கேட்டு விட்டாலே மன்னிக்கக் கூடிய இறைவன் இந்த குற்றத்தை மன்னிப்பதற்குக் கூடுதலான நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றை நிறைவேற்றாமல் இறைவனின் மன்னிப்பைப் பெற முடியாது.

    ‘பாவ மன்னிப்புக் கேட்டு திருந்தி, மறைத்தவற்றைத் தெளிவுபடுத்தியவர்களைத் தவிர’ (குர்ஆன் 2:160) என்று இறைவன் கூறுகிறான்.

    வெறும் மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. மாறாக மன்னிப்பும் கேட்க வேண்டும். தாங்கள் கூறிய சமாதானங்கள் தவறானவை என்பதை உணர்ந்து திருந்தவும் வேண்டும். அத்துடன் இதுவரை மறைத்தவற்றை எல்லாம் மக்களுக்குத் தெளிவு படுத்தவும் வேண்டும். இல்லையெனில் இறைவனின் சாபத்திற்குரியவர்களாகவே அவர்கள் நீடிக்க வேண்டி வரும்.

    ‘இந்த இரு வசனங்களும் இல்லையானால் உங்களுக்கு எதனையும் நான் அறிவித்திருக்க மாட்டேன்’ என்று அபுஹூரைரா (ரலி) கூறியதையும் (புகாரி, முஸ்லிம்) ‘யாரேனும் கல்வி சம்பந்தமாகக் கேட்கப்படும் போது விளக்கம் கூறாமல் மறைத்தால் கியாமத் நாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்கள்’ என்ற நபியவர்களின் எச்சரிக்கையையும் (அபுதாவுது, திர்மிதி) இவர்களின் சிந்தனைக்கு வைக்கிறோம்.
மேற்கண்ட நபிமொழியின்படி, மார்க்கத்தில் எந்த ஒன்றையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

 

2:178 பாவம் ஓரிடம்! பழி வேறிடம்!

பாவம் ஓரிடம்! பழி வேறிடம்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى

 ‘நம்பிக்கையாளர்களே! கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)’. (அல்குர்ஆன் 2:178)   

    நபிகள் நாயகம் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்;டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.

    அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.

    அதே போல் அடிமையாக இல்லதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

    அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.

    இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.

    அடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.

    இந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.

    இவ்வசனத்தின் துவக்கமே ‘கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமை’ என்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.

    பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.

    அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர்.

    ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ‘ஆம்’ என்பது போல் சைகை செய்தார். உடனே நபி (ஸல்) கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி

    யாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: திர்மிதீ

    இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.

    ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.

    இதே போல் கணவர்களாலும் இளம் மனைவிகள் கொல்லப்படுகின்றனர். ஸ்டவ் வெடித்துச் செத்ததாக பைல்கள் குளோஸ் செய்யப்படுகின்றன. குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது என்ற கோட்பாட்டின் படி அக்கொலையாளிகள் மீது பெரும்பாலும் வழக்குப் பதிவதில்லை. கணவனின் உயிர், மனைவியின் உயிரை விடச் சிறந்தது என்று கருதுகிறார்கள். இத்தகைய போக்கையும் இவ்வசனம் கண்டிக்கிறது.

    ஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனின் இவ்வசனத்தை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

2:158 நினைவுச் சின்னங்கள்

நினைவுச் சின்னங்கள்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللّهَ شَاكِرٌ عَلِيمٌ

‘நிச்சயமாக ஸபா, மர்வா (எனும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாகும். யார் இந்த ஆலயத்தில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறாரோ அவர் அவ்விருமலைகளையும் சுற்றுவது தவறில்லை.’ (அல்குர்ஆன் 2:158)

    ஸபா, மர்வா எனும் இரண்டு மலைகளை புனிதச் சின்னங்கள் என்று இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். இது போல் வேறு வசனங்களில் கஃபா ஆலயத்தையும், அதை ஒட்டி அமைந்துள்ள மகாமே இப்ராஹிமையும், அதைச் சுற்றியுள்ள மஸ்ஜிதுல் ஹராமையும் புனிதமானவையாக இறைவன் அறிவித்துள்ளான்.

    ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்களும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் அவற்றின் புனிதத்தை மதிக்கும் வகையில் இறைவனின் கட்டளைப் பிரகாரம் கஃபாவைத் தவாப் செய்கின்றனர். மகாமே இப்ராஹிம் எனுமிடத்தில் தொழுகின்றனர். ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடுகின்றனர். இந்த வகையில் இந்த வசனத்தை இந்தச் சமுதாயம் சரியாகவே புரிந்து வைத்திருக்கின்றது. இது பற்றி மேலதிகமாக விளக்கம் எதுவும் தேவையில்லை.

    இந்த வசனம் கூறக்கூடியது இதுதான் என்பதை அறிந்த பின்னரும் ஒரு சிலர் தங்களின் தவறான கொள்கைகளுக்கு இந்த வசனத்தைச் சான்றாக்கிட முயல்கின்றனர். அவர்களுக்காக நாம் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. முதலில் அவர்கள் கூறக்கூடியது என்ன என்பதைப் பார்ப்போம்.

    இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் பிரகாரம் தம் மனைவி ஹாஜராவையும், மழலை மைந்தன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டுச் சென்றனர். மழலை, தாகத்தால் தவித்தபோது ஸபா மலையிலும் மர்வா மலையிலும் ஏறி தண்ணீர் தென்படுகிறதா என்று ஹாஜரா அவர்கள் மாறி மாறி இருமலைகளுக்கிடையே ஓடலானார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

    அல்லாஹ்வின் நல்லடியார்களான இப்ராஹிம் (அலை) இஸ்மாயீல் (அலை), ஹாஜரா அம்மையார் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களை இறைவன் புனிதப் படுத்தியுள்ளான். இதிலிருந்து நல்லடியார்களுடன் தொடர்புடைய இடங்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை புனிதப் பொருட்களாகின்றன என்பது தெரிய வருகின்றது.

    இதனடிப்படையில் பெரியார்கள் வாழ்ந்த இடங்கள், பிறந்த இடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களை நினைவு கூர்வதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள், கொடி மரங்கள், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள், அந்த அடக்கத்தலங்கள் மீது போர்த்தப்பட்ட போர்வைகள் போன்றவை புனிதமிக்கதாக – பரக்கத் நிறைந்ததாக அமைந்து விடுகின்றன என்பது இவர்களின் வாதம்.

    இவர்களின் வாதம் சரியானதுதானா? இவர்கள் புரிந்து கொண்டது போல் இதற்குப் பொருள் கொள்ள இடமிருக்கிறதா? இதைத்தான் நாம் விபரமாக விளக்கவேண்டியுள்ளது.

    கஃபா ஆலயமும், ஸபா மர்வாவும், மகாமே இப்ராஹீமும் புனிதமானவை என்பதில் சந்தேகமில்லை. நல்லடியார்களுடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் அவை புனிதம் அடைந்தனவா? நிச்சயமாக இல்லை.

    அப்படி இருக்குமானால் இப்ராஹிம் (அலை) அவர்கள் பிறந்த இடம், நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட பின்பும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அவர்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு இத்தகைய புனிதம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுடன் சம்பந்தப்பட்ட ஓரிரண்டு இடங்கள் மட்டுமே புனிதம் வழங்கப்பட்டுள்ளன.

    அவர்களுக்கு முன்பும், அவர்களுக்குப் பின்பும் எத்தனையோ நபிமார்கள் வந்துள்ளனர். அந்த நபிமார்களுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எத்தனையோ இருந்திருக்கும். அவற்றுக்கும் புனிதத்தன்மை ஏதும் வழங்கப்படவில்லை.

    நல்லடியார்களுடன் தொடர்புடைய பொருட்கள் புனிதம் பெறும் என்பது கிடையாது. மாறாக, இறைவன் எவற்றுக்கு புனிதம் வழங்கியுள்ளானோ, இறைத்தூதர்கள் எவற்றுக்கு புனிதம் இருப்பதாக அறிவித்துள்ளார்களோ அவை மட்டுமே புனிதம் பெறும் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.

    ஒன்றைப் புனிதப்படுத்தவும், புனிதப்படுத்தாமலிருக்கவும் அதிகாரம் படைத்தவன் இறைவன். அவன் எவற்றுக்கு வேண்டுமானாலும் புனிதத்தை வழங்கலாம். அது அவனது தனியதிகாரத்தின் பாற்பட்டது. அவன் சில இடங்களைப் புனிதப்படுத்தியதால் நான் வேறு சில இடங்களைப் புனிதப்படுத்துவேன் என்று புறப்படுவது அவனுடன் போட்டியிடுவதாகும்.

    இறைவன் சொன்னதைச் செய்வது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. இறைவன் செய்ததைச் செய்வேன் என்பது கடவுள் தன்மையில் பங்கு கேட்பதன் வெளிப்பாடு என்பதை இவர்கள் உணரவில்லை. அதனால் தான் அல்லாஹ் சில இடங்களைப் புனிதப்படுத்தியதால் நான் வேறு சில இடங்களைப் புனிதப்படுத்தப் போகிறேன் என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.

    ‘அவன் செய்வது பற்றி அவனிடம் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் (செய்வது பற்றி அவர்கள்) தாம் கேள்வி கேட்கப்படுவார்கள்.’ (அல்குர்ஆன் 21:23)

    தான் செய்வதை மற்றவர்கள் செய்ய முடியாது என்பதை இங்கே இறைவன் தெளிவுபடக் கூறுகிறான்.

    இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள மற்றுமொரு நிகழ்ச்சியையும் நாம் நினைவு கூறலாம்.

    நபி (ஸல்) அவர்கள் ஹூதைபியா ஆண்டின் போது தம் தூதராக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்குள் அனுப்பி வைத்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பி வரத் தாமதம் ஏற்பட்டதால் உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டு விட்டார்களோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. தூதர்களைக் கொல்லக்கூடாது என்ற மரபை மீறி மக்கத்துக் காபிர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றிருந்தால் அதற்குப் பதிலடி தரவும் கடைசி வரை போரிடவும் நபி (ஸல்) அவர்கள் தம்முடன் வந்த தோழர்களிடம் பைஅத் (உறுதிமொழி) பெற்றார்கள். இந்த உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களை இறைவன் பெரிதும் புகழ்ந்துரைக்கிறான். அவர்களைத் தான் பொருந்திக் கொண்டதாகவும் பிரகடனம் செய்கிறான். உஸ்மான் (ரலி) அவர்கள் உயிருடன் திரும்பி வந்ததால் போர் எதுவும் நிகழவில்லை என்பது தனி விஷயம்.

    ‘அந்த மரத்தடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த மூமின்களை அல்லாஹ் நிச்சயமாக பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளத்தில் உள்ள (ஈமானிய உறுதியை) அவன் அறிந்து வைத்துள்ளான். அவர்கள் மீது அமைதியைப் பொழிந்தான். சமீபத்தில் (கிடைக்கும்) வெற்றியையும் அவர்களுக்குப் பரிசாக வழங்கினான்.’ (அல்குர்ஆன் 48:18)

    நல்லடியார்களுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் புனிதமடைகின்றன என்பது உண்மையானால் இந்த மரத்தடி அதற்கு அதிக அருகதை பெற்றிருக்கிறது.

    ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் அம்மரத்தினடியில் அமர்ந்துள்ளார்கள். தங்கள் உயிரையே அர்ப்பணித்ததாக தம் தோழர்களிடம் அம்மரத்தினடியில் உறுதிமொழி பெற்றார்கள். உறுதிமொழி எடுத்த அத்தனை தோழர்களின் உள்ளமும் பரிசுத்தமானதாக அமைந்திருந்தது. அந்த இடத்தில் வைத்து எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் காரணமாக அல்லாஹ்வின் திருப்தி அவர்களுக்குக் கிடைத்தது. இவ்வளவு சிறப்புக்குரிய அம்மரத்தடியை நபித்தோழர்கள் புனிதப்படுத்தினார்கள்? அதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றிப் பாதுகாத்தார்களா? அந்த இடத்தைப் பார்ப்பதாலோ, தொடுவதாலோ அங்கே வந்து தங்குவதாலோ பாக்கியம் பெறுவோம் என்று நம்பினார்களா? நிச்சயமாக இல்லை. அதை ஒரு மரமாகக் கருதினார்களேயன்றி அதற்கு எந்த மதிப்பையும் அந்த நல்லவர்கள் வழங்கவில்லை. அல்லாஹ்வோ அவனது தூதரோ அதன் புனிதம் பற்றி ஏதும் சொல்லாததால் அதைச் சாதாரணமான மரமாக மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.

    அந்த மரம் பற்றி நபித்தோழர்கள் கொண்டிருந்த அபிப்ராயம் எவ்வாறு இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்திகின்றது.

    நான் ஹஜ்ஜுச் செய்வதற்காகப் புறப்பட்டேன். அப்போது ஓரிடத்தில் ஒரு கூட்டத்தினர் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். இது என்ன தொழுமிடம்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இந்த மரத்தினடியில் தான் நபி (ஸல்) அவர்கள் (பைஅதுர்ரிள்வான் எனும்) அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற உறுதிமொழியை எடுத்தனர் என்று கூறினார்கள். நான் ஸயீத் பின் முஸய்யப் அவர்களிடம் சென்று இந்தச் செய்தியைக் கூறினேன். அதற்கவர்கள் என் தந்தை (முஸய்யப்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த உறுதிமொழி எடுத்தவர்களில் ஒருவராவார். என் தந்தை இது பற்றிக் கூறியதாவது: அதற்கடுத்த வருடம் நாங்கள் புறப்பட்டு வந்தபோது அம்மரம் இருந்த இடத்தை நாங்கள் அறியவில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் எங்களுக்கு வழியில்லை என்றார்கள். இதை ஸயீத் பின் முஸய்யப் அவர்கள் கூறிவிட்டு நபித்தோழர்கள் அறியாததை நீங்கள் அறிந்து விட்டீர்களா? அவர்களை விட (இதுபற்றி) நீங்கள் அதிகம் அறிந்தவர்களா என்ன? என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் நூல்: புகாரி

    நபி (ஸல்) அவர்கள் அந்த இடம் புனிதமானது என்று அறிவித்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு நபித்தோழர்கள் மறந்திருக்க இயலுமா? நபி (ஸல்) அவர்களும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால் நபித்தோழர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

    நபித்தோழர்களில் சிலர் அறியாமை காரணமாக தங்களுக்கு என்று புனிதமான மரம் ஒன்று வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார்கள். அந்த விருப்பத்தை நபியவர்கள் கண்டித்தார்களே தவிர அவர்களின் கோரிக்கைப் பிரகாரம் எம்மரத்துக்கும் புனிதம் வழங்கவில்லை.

    நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் சென்றார்கள். வழியில் ஒரு இலந்தை மரம் காபிர்களால் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. அங்கே காபிர்கள் தங்குவார்கள். தங்கள் ஆயுதங்களை அங்கே தொங்கவிடுவார்கள். தாது அன்வாத் என்று அம்மரம் குறிப்பிடப்பட்டது. நாங்கள் பசுமையான ஒரு இலந்தை மரத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் தாது அன்வாத் (எனும் புனித மரத்தை) ஏற்படுத்துங்களேன் என்று கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தினர் அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துங்கள் என்று கேட்டார்களே அதுபோல் நீங்கள் கேட்கிறீர்கள். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறையை ஒவ்வொன்றாக நீங்கள் பின்பற்ற முயல்கிறீர்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுவாகித் (ரலி) நூல்: அஹ்மத்

    எப்பொருளும், எந்த இடமும் புனிதம் அடையாது. இறைவன் புனிதப்படுத்திய இடங்கள் மாத்திரமே புனிதமடையும் என்று நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பெற்றதன் காரணமாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மரத்தைக் கூட அவர்களால் மறக்க முடிந்தது.

    ‘தூர்’ மலையைப் பற்றி அறிவோம். அம்மலைக்கருகில் தான் மூஸா நபி வரவழைக்கப்பட்டு இறைவனுடன் உரையாடினார்கள். தவ்ராத் வேதத்தையும் அவ்விடத்திலேயே அவர்கள் பெற்றார்கள். இறைவனுடன் உரையாடிய இடம் எவ்வளவு புனிதமானதாக இருக்க வேண்டும். அதன் புனிதத் தன்மை பற்றி அல்லாஹ் அறிவிக்காததால் நபித்தோழர்களும் அதற்கு புனிதம் எதையும் வழங்கவில்லை.

    பஸ்ரா பின் அபீபஸ்ரா அவர்களை நான் சந்தித்து எங்கிருந்து வருகிறீர் என்று கேட்டேன். அதற்கவர் தூர் மலையிலிருந்து என்றார். நீர் அங்கே புறப்படும் முன் உம்மை நான் சந்தித்திருந்தால் உம்மைப் போகவிட்டிருக்கமாட்டேன். ஏனெனில் மூன்று பள்ளிவாயில்கள் தவிர (வேறு இடங்களுக்குப் புனிதம் கருதி அதிக நன்மையை நாடி) பயணம் செல்லக்கூடாது என்று நபியவர்;கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிடுகிறார்கள். (அஹ்மத்)

    புனிதமானது என்று கருதிட அத்தனைத் தகுதிகளும் உள்ளதாக நமக்குத் தோன்றினால் கூட நபியவர்களிடம் பாடம் பெற்றவர்கள் அவ்வாறு கருதிடவில்லை. இறைவனோ இறைத்தூதரோ அறிவிக்காமல் எதுவும் புனிதமடையாது என்று அவர்கள் நம்பினார்கள்.

    சமாதிகளையும், கொடிமரங்களையும், சந்தனக் கூடுகளையும், புனிதமானவையாகக் கருதுவோர் இதனைச் சிந்திக்க வேண்டும். மூஸா (அலை) அவர்களின் சமுதாயம் நடந்தது போல் நடந்திடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டும்.

 

2:114 இறையில்லங்களைப் பாழாக்குவோர்

இறையில்லங்களைப் பாழாக்குவோர்

وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

 ‘இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.’ (அல்குர்ஆன் 2:114)

    சராசரி அறிவு படைத்தவருக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. மேலதிகமாக விரிவுரையோ விளக்கமோ தேவையில்லாத அளவுக்கு மிகவும் தெளிவாக அமைந்துள்ளது இவ்வசனம். ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே இவ்வசனத்திற்குக் கூட விளக்கம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழாண்டுக் காலம் மதரஸாக்களில் படித்த மவ்லவிகளில் பலர் மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே பறைசாற்றிக் கொள்வோர் தமிழகத்துப் பள்ளிகள் தோறும் ‘நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ, தொழ வைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு தீன்(?) பணி செய்து வருகின்றனர்.

    அல்லாஹ்வுடைய தெளிவான இந்த ஒரு வசனத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்க அறிஞர்களாம்! புரிந்தாலும் இறைவனைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றி அவனது பள்ளியைப் பாழாக்குவோர் மார்க்கத்தின் காவலர்களாம்!

    மனிதர்கள் செய்யும் கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்குத் தடை விதிப்பதாகும்.

    அல்லாஹ்வின் பள்ளிவாசலில் எவருக்கும் கூடுதலான உரிமை கிடையாது. எந்த நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். இறைவனைத் துதிக்கலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம். துதிக்கலாம். உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

    மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியைச் செய்து வரும் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டுள்ள தமிழகத்து மவ்லவிகளும் இந்தக் கொடுமைக்குத் துணை போகின்ற காட்சியையும் பார்க்கின்றோம்.

    இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு இந்த வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது! ஒரு எச்சரிக்கை அல்ல! நான்கு எச்சரிக்கைகள்!
    1. உலகிலேயே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
    2. இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்குப் பயந்து பயந்து செல்லும் நிலை உருவாகும்.
    3. இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
    4. மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.

    மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும், இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.

    தொழுகையாளியைத் தடுப்பவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமான அவனது இல்லத்தை தங்கள் சொந்த உடைமை போன்று கருதுவதால் அவர்களுக்கு எதிராக இறைவனே போர்ப் பிரகடனம் செய்கிறான். மற்றோர் இடத்தில் இதைத் தெளிவாக இறைவன் அறிவிக்கிறான். அதுவும் இறைவன் அருளிய முதலாவது அத்தியாயத்திலேயே இவ்வாறு பிரகடனம் செய்கிறான்.

    ‘தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.’ (அல் குர்ஆன் 96: 9-18)

    பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்குத் தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!
நீ உன் சபையினரை – உனது ரவுடிப் பட்டாளத்தை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா! நானும் எனது நரகக் காவலாளிகளை அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாத கொடுமைக்காரர்கள் இவர்கள்.

    தொழுபனுக்கு தடை விதிக்கின்றார்களே! தடுக்கப்பட்டவன் குடிக்கிறான் என்பதற்காகவா? சாராயக் கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா? சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா? வட்டிக் கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா? ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா? பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை.

    யாரைத் தடுக்கிறார்கள்? இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை – வரதட்சணை கூடாது என்பவனை – வீண் விரயமும், ஆடம்பரமும் கூடாது என்று கூறுபவனை – குர்ஆன் போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை – இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக் கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள்.

    இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இன்றைய சூழ்நிலைக்காக இறங்கியது போல் தோன்றவில்லையா?

    ‘பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்’ (அல் குர்ஆன் 72:18)

    அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளில் இறைவனல்லாத பெரியார்களுக்கு மவ்லூது ஓதி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த வசனத்தின் கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

    ‘நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது’ என்று எழுதி வைக்கும் மூடர்கள், அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்குத் தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே நான்கு மத்ஹபுகளும் கூறுகின்றன.

    இவ்வாறு எழுதி வைத்ததன் மூலம் நான்கு மத்ஹபுகளையும் ஒரு சேரப் புறக்கணித்தவர்கள் இவர்கள். இந்தத் தடை முதன் முதலாகத் தடுப்பவர்களையே கட்டுப்படுத்தும். ஏனென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் மாற்றமாக தொழுபவர்களைத் தடுக்கின்றனர்.

    இவ்வாறு எழுதி வைக்கிறோமே! நாம் வக்காலத்து வாங்கும் மத்ஹபுகளில் இதற்கு அனுமதி உண்டா? என்ற ஞானமும் அற்ற ஞான சூன்யங்கள் இவர்கள். நான்கு இமாம்களில் எந்த இமாமாவது இவ்வாறு கூறியதாக அவர்களால் காட்ட முடியாது. மத்ஹபைப் பின்பற்றுவதும் இவர்களின் நோக்கமல்ல என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை.

    கத்தம், பாத்தியா, தாயத்து, தட்டு என்று மக்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கு ஆபத்து என்பதனால் தான் இந்தக் கூப்பாடு! நேரடியாக இதைக் கூறமுடியாதவர்கள் மத்ஹபின் காவலர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்!

    உண்மையில் மத்ஹபைப் பின்பற்றுவது இவர்களின் நோக்கமென்றால், மத்ஹபைக் காப்பது இவர்களின் இலட்சியம் என்றால் மத்ஹபின் தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு எழுதி வைக்கத் துணிந்தது ஏன்? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

    தமிழகத்தின் தாய்க்கல்லூரி என்று இந்த மவ்லவிகள் மதிக்கின்ற பாக்கியாத் அரபிக் கல்லூரியின் பத்வாவை – தமிழக ஜமாஅதுல் உலமா சபைத் தலைவராகவும் செயலாளராகவும் பணிபுரிந்த கலீலுர் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது ‘ரஹ்மத்’ ஜூன் 88 மாத இதழில் வெளியிட்ட ஒரு பத்வாவை – அப்படியே இவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    வேலூர் அஃலா ஹஜரத் அவர்களின் ஃபத்வா
    சவால்: ஒருவர் தன்னை அஹ்லே ஹதீஸ் என்று கூறிக் கொள்கிறார். நான்கு மத்ஹபுகளில் எதனையும் தக்லீத் செய்வதில்லை. ஆனால் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர் என்றோ வஹ்ஹாபி என்றோ அவரை யாரும் கூறினால் அதிருப்திப்படுகிறார். எனவே இவரை காபிர் என்பதா? முஸ்லிம் என்பதா? அவர் ஹனஃபிகளின் நிர்வாகத்திலிருக்கும் மஸ்ஜிதில் வந்து தொழுக விரும்புகிறார். ஹனஃபி இமாமைப் பின் தொடர்ந்து தொழுவதிலும் அவருக்கு விருப்பமே. ஆனால் ஆமின் இரைந்து கூறுகிறார். ரஃப்வுல்யதைன் (தொழுகையில் கைகளை உயர்த்துதல்) செய்கிறார். ஹனபிகள் அவர் மஸ்ஜிதிற்கு வந்து பின் தொடர்ந்து தொழுவதை ஆட்சேபிக்கிறார்கள். எனவே அவர் மஸ்ஜிதிற்கு வந்து தொழுவதைத் தடுப்பது கூடுமா? கூடாதா? அவர் இரைந்து ஆமீன் கூறுவதால் ஹனபி இமாமின் தொழுகை அல்லது ஜமாஅத் ஃபஸாதாகி விடுமா? அல்லவா?

    ஜவாப்:அக்கீதா கிதாபுகளில் எழுதப் பட்டிருப்பது போல் தீனின் முக்கிய அம்சங்களை நம்பியிருப்பவர் முஸ்லிம் ஆவார். சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் படி நம்பிக்கை கொண்டிருப்பவர் ஸன்னி முஸ்லிம் ஆவார். நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றியிருப்பவர் முஸ்லிமும் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவருமாவார். தீனின் முக்கிய அம்சங்களை நம்புவதுடன் சுன்னத்து வல்ஜமாஅத்தின் கொள்கைகளையும் நம்பியிருக்கும் ஒருவர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவராயிருப்பின் அவரும் சுன்னத் வல்ஜமாஅத்தில் சேர்ந்தவராக கருதப்படுகிறார். ஆயினும் அவர் முஸ்லிமாகவும் அஹ்லே கிப்லாவாகவும் இருப்பதால் அவர் மஸ்ஜிதிற்கு வருவதையும் சுன்னத்து ஜமாஅத்தினரைப் பின் தொடர்ந்து தொழுவதையும் தடுப்பது ஜாயிஸாயில்லை. இத்தகையோர்களை எழுபத்தி இரண்டு பிரிவோரில் எவருமே பின் தொடர்வதால் இமாம் முக்கதியின் தொழுகை முறிந்து விடுவதில்லை. வல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.
எழுதியவர்: அப்துல் வஹ்ஹாப் கானல்லா ஹுலஹு

    இந்த ஃபத்வா மத்ஹபை நம்பியவர்கள் வழங்கிய – தமிழகத்தின் தாய்க்கல்லூரி என இவர்களே போற்றுகின்ற பாக்கியாத் வழங்கிய – ஃபத்வாவாகும். இதைக் கூட இன்றைய மவ்லவிமார்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் சமுதாயம் இவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும்.

    தங்களின் புரோகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த மவ்லவிமார்கள் தவறான வழிகாட்டும் போதும், தொழுகையாளிகளைத் தடுக்குமாறு தூண்டும் போதும் அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நிற்கின்ற நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் இறைவனது இந்த எச்சரிக்கை;கு உரியவர்கள் தாம். இவர்களின் துணையின்றி மவ்லவிமார்கள் இத்தகைய அக்கிரமத்தை அரங்கேற்ற முடியாது என்பதால் முதல் குற்றவாளிகளே இவர்கள் தாம்.

    சவூதி அரேபியா போன்ற நாடுகளில் எந்த மத்ஹபையும் பின்பற்றுவதில்லை. அவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் கஃபா ஆலயம் உள்ளது. சவூதி அரசாங்கம் ‘மத்ஹப்வாதிகள் கஃபாவுக்கு வரக்கூடாது, ஹஜ் செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று உத்தரவு போடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்த மவ்லவிமார்கள் என்ன செய்வார்கள். 96:9, 2:114 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டி சவூதி ஆட்சியாளரை நார்நாராகக் கிழித்திருப்பார்கள். இப்போது மட்டும் இந்த இருவசனங்களும் இவர்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களே இந்த அக்கிரமத்தை அரங்கேற்றும் போது மட்டும் இந்த வசனங்களை மறந்து விடுகின்றனர்.

    இறையச்சமுள்ள மவ்லவிகள் இந்த அக்கிரமத்தைச் செய்யமாட்டார்கள். இறையச்சமுள்ள மக்கள் இந்த அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டார்கள் என்று நம்புகிறோம்.