இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

தம்மாம் முழு இரவு இஸ்லாமிய கருத்தரங்கம்

தம்மாம். 04.09.2009

தம்மாம் மாநகரின் மையப்பகுதியான மஸ்ஜித் ரையானை அடுத்து அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான இப்தார் பந்தலில் 03.09.2009 வியாழக்கிழமை அன்று முழு இரவு இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் பேசும் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோர்

ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நோன்பு திறக்கக்கூடிய அளவிற்கு தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இப்தார் பந்தலில் மொழிவாரியாக தனித்தனி பந்தல்கள் அமைக்கப்பட்டு அவரவர்களின் மொழியில் நோன்பு திறக்கும் நேரத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் ரமளான் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முழு இரவு இஸ்லாமிய கருத்தரங்கம் நிகழ்ச்சியை இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தமிழ் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சி சரியாக இரவு 10:30 மணிக்கு ஆரம்பமானது. இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

முதல் அமர்வுக்கு மவ்லவி உவைஸ் பாகவி தலைமை தாங்கினார். தம்மாம் இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் மையத்தின் மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் குர்ஆனும் சுன்னாவும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து அல்கோபர் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

மவ்லவி உவைஸ் பாகவி

மவ்லவி நூஹ் மஹ்ளரி

மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

கேள்வி பதில் நிகழ்ச்சியை பொறியாளர் ஜக்கரிய்யா அவர்கள் திறம்பட நடத்தினார்கள், அவர்களுக்கு உறுதுணையாக சகோ.அப்துல் காதர் மற்றும் சகோ.ஜாஹிர் ஹுஸைன் இருந்தார்கள். கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகளும் வழங்கப்பட்டன. கேள்விகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து கேட்கப்பட்டன.

பொறியாளர் ஜக்கரிய்யா

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கல்ஃப் கம்பெனியின் சார்பாக தேநீர் வினியோகிக்கப்பட்டது.

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மேலாளர் அஷ்ஷேக் டாக்டர் அப்துல் வாஹித் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து கூடியிருந்த மக்களிடையே சிற்றுரையாற்றினார். தனது உரையில் தமிழ் பிரிவின் செயல்பாட்டை வெகுவாக புகழ்ந்தார். அதனை மவ்லவி மன்ஸுர் மதனி அவர்கள் தமிழாக்கம் செய்தார்கள்.

அஷ்ஷேக் டாக்டர் அப்துல் வாஹித்

இரண்டாம் அமர்வுக்கு தம்மாம் கலாச்சார மையத்தின் மவ்லவி அப்துல் அஜீஸ் மதனி தலைமை தாங்கினார். ஜுபைல் தஃவா நிலையத்தின் மவ்லவி ரிஸ்கான் மதனி அவர்கள் ரமளான் நம்மிடம் எதிர் பார்ப்பது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து தம்மாம் கலாச்சார மையத்தின் மவ்லவி மன்ஸுர் மதனி அவர்கள் இஸ்லாத்தில் பொருளியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மவ்லவி அப்துல் அஜீஸ்

மவ்லவி ரிஸ்கான் மதனி

மவ்லவி மன்ஸுர் மதனி

கேள்வி பதில் நிகழ்ச்சியில் சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகளையும் கலந்து கொண்டோரில் 20 பேர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகளையும் தம்மாம் தஃவா கமிட்டியின் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் வழங்கினார்.

பொறியாளர் ஷபியுல்லாஹ்கான்

நிகழ்ச்சி சரியாக 3:00 மணிக்கு நிறைவுக்கு வந்தது. உடனடியாக சஹர் உணவு பரிமாறப்பட்டது. மிகக்குறுகிய நேரத்தில் வந்திருந்த அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது. தம்மாம் தமிழ் தஃவா கமிட்டியைச் சார்ந்த சகோதரர்கள் நிகழ்ச்சி முழுவதும் பம்பரமாக சுழன்று அவையோரின் தேவைக்கு ஏற்ப வசதிகள் செய்து கொடுத்ததுடன் அவ்வப்போது குடிநீர் தேநீர் போன்றவற்றை பரிமாறினர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தவர்களாக எஞ்சியுள்ள ரமளான் காலத்தை முறையாக பயன்படுத்த திட்டமிட்டவர்களாக அனைவரும் கலைந்து சென்றனர்.

நமது செய்தியாளர்
அபூஅன்ஸாரி

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்