பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை என்ன?

 وما كان الله لِيُضِيعَ إِيمَانَكُمْ

விளக்கம்: முந்தைய கிப்லாவான பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை பற்றித்தான் 2:143 வது வசனம் இறக்கப்பட்டதாக பராவு (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.

40 حدثنا عَمْرُو بن خَالِدٍ قال حدثنا زُهَيْرٌ قال حدثنا أبو إِسْحَاقَ عن الْبَرَاءِ أَنَّ النبي (ص) كان أَوَّلَ ما قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ على أَجْدَادِهِ أو قال أَخْوَالِهِ من الْأَنْصَارِ وَأَنَّهُ صلى قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا أو سَبْعَةَ عَشَرَ شَهْرًا وكان يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ وَأَنَّهُ صلى أَوَّلَ صَلَاةٍ صَلَّاهَا صَلَاةَ الْعَصْرِ وَصَلَّى معه قَوْمٌ فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صلى معه فَمَرَّ على أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ فقال أَشْهَدُ بِاللَّهِ لقد صَلَّيْتُ مع رسول اللَّهِ (ص) قِبَلَ مَكَّةَ فَدَارُوا كما هُمْ قِبَلَ الْبَيْتِ وَكَانَتْ الْيَهُودُ قد أَعْجَبَهُمْ إِذْ كان يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ وَأَهْلُ الْكِتَابِ فلما وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ أَنْكَرُوا ذلك قال زُهَيْرٌ حدثنا أبو إِسْحَاقَ عن الْبَرَاءِ في حَدِيثِهِ هذا أَنَّهُ مَاتَ على الْقِبْلَةِ قبل أَنْ تُحَوَّلَ رِجَالٌ وَقُتِلُوا فلم نَدْرِ ما نَقُولُ فِيهِمْ فَأَنْزَلَ الله تَعَالَى ( وما كان الله لِيُضِيعَ إِيمَانَكُمْ )

பராவு (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வமிசா வழியினர்களி) டத்திலோ அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வமிசா வழியினர்களி) டத்திலோ தங்கி இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பதினாறு மாதங்களோ அல்லது பதினேழு மாதங்களோ பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஃபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

(அதற்கேற்ப அல்லாஹ்வின் கட்டளையும் வந்தது) (கஃபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை ஒரு அஸருடைய தொழுகையாகும். (அப்போது) அவர்களுடன் சிலரும் சேர்ந்து தொழுதனர். நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒரு மனிதர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களைத் தாண்டிச் செல்லும் போது (அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்ததைப் பார்த்த அவர்),

‘நான் இறைவன் மீது சாட்சியாக மக்காவை முன்னோக்கி நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுது விட்டு வருகிறேன்’ என்று சொன்னார். அவர்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையில் இருந்தவாறே கஃபா ஆலயத்தை நோக்கி திரும்பிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர் (களான கிருஸ்தவர்) களுக்கும் மகிழ்ச்சியானதாகவே இருந்து வந்தது.

(தொழுகையில்) தனது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் திரும்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்து விட்டனர்’ என பராவு (ரலி) அறிவிக்கிறார்கள்.

வேறொரு அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்து விட்டனர். சிலர் கொல்லப்பட்டு விட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாக இருந்தோம்.

அப்போது தான்,

‘(நீங்கள் பைத்துல் முகத்தலை நோக்கித் தொழுத) உங்கள் ஈமானை அல்லாஹ் (நன்மை ஏதுமின்றி) வீணாக்கி விட மாட்டான்’ (2:143) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இறக்கினான்.

(நூல்: புகாரி 40)

By admin