இல்லறம் சிறக்க!

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ 

  ‘நோன்பு கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (உங்கள் மனைவியரான) பெண்கள் உங்களுக்கு ஆடையாகவுள்ளனர். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவுள்ளீர்கள்’. (அல்குர்ஆன் 2:187)    

    நோன்பு நோற்பவர்கள் பகல் காலங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது போல் உடலுறவிலும் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். நோன்பு கால இரவுகளில் இவற்றைச் செய்யலாமா என்ற சந்தேகத்திற்கு விடையாகவே இவ்வசனம் அருளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தாம்பத்திய உறவு கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

    இவ்வசனம் நேரடியாகக் கூறுவது இதுதான் என்றாலும் மறைமுகமாக இல்லறவாழ்வு சிறப்பாக அமைவதற்கான சிறந்த அறிவுரையும் இதனுள் அடங்கியுள்ளது.

ஆண்களும் போகப் பொருள் தான்!

    பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.

    அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.

    பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

    ‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.

    ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.

    இல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.

    இந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப் படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.

    மேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

    பகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.

    கணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.

    இந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.

    உதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    பல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.

    ஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.

    ஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.

    அந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.

    அது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.

    இத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.

    மேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.

    உங்கள் கணவர்களிடம் – உங்கள் மனைவியரிடம் – உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.

    வெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.

    மனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.

    ஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.

    அதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.

    அந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.

    எந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.

    பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.

    குடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.

    அணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.

    புத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

    அவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.

    ஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.

    அந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

    எந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.

    கணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.

    இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

    அவர்கள் உங்களுக்கு ஆடை! நீங்கள் அவர்களுக்கு ஆடை! என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.

    மறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.

    இவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.

By admin