மாநபி முஹம்மத் (ஸல்) 

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

முஸ்லிம் உலகைத் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என எதிரிகள் சதி வலை பிண்ணி வருகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை முஸ்லிம் உலகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே, திடீர் திடீரென நபி(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப் படுத்தும் கார்ட்டூன்கள், கட்டுரைகள், குறும்படங்கள் என பல வழிகளிலும் சதியெனும் வலையைப் பிண்ணிக் கொண்டேயிருக்கின்றனர்.

இவர்கள் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடும் போதெல்லாம் முஸ்லிம்களும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். உயிர் இழப்புக்களும், பொருள் இழப்புக்களும் இதனால் ஏற்படுகின்றன. இதைப் பார்க்கும் சாதாரண நடுநிலைவாதிகளான மாற்றுச் சமூக சகோதரர்கள் முஸ்லிம்கள் எப்போதும் பிரச்சினைக்குரியவர்கள், பொறுமையில்லாதவர்கள் என்று எண்ணத் தலைப்படுகின்றனர். முறைகேடான ஆர்ப்பாட்டங்களை நாம் ஆதரிக்கவில்லையென்றாலும் பொதுவாகவே ஆர்ப்பாட்டங்களில் நாம் அதிக அக்கறை செலுத்துவதில்லை என்றாலும் இந்த நடுநிலைச் சகோதரர்களுக்காக சில செய்திகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றோம்.

நபி(ஸல்) அவர்களைக் கேலிச்சித்திரம் வரையும் போதெல்லாம் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளார்கள். கேலிச்சித்திரங்களை இன்று பொதுவாக மக்கள் அங்கீகரிக்கும் போது முஸ்லிம்கள் ஏன் இதை இவ்வளவு பாரதூரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம்தானே என நினைக்கின்றார்கள்.

முதலில் முஸ்லிம்கள் கேலிச் சித்திரத்திற்காகத்தான் குமுறுகின்றனர் என்று நினைக்கக் கூடாது. நபி(ஸல்) அவர்களைக் கேலி செய்யாமல் கௌரவப்படுத்தும் விதத்தில் படம் வரைந்தால் கூட முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள்.

உலகுக்கு நல்ல சட்டங்களை வழங்கியவர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் நபி(ஸல்) அவர்களுக்குச் சிலை வடிக்கப்பட்ட போது கூட முஸ்லிம்கள் அதை எதிர்த்து அதை (சிலை வடிப்பதை) நிறுத்தினார்கள். சில வேளை பாடப்புத்தகங்களில் எவ்விதக் குரோதச் சிந்தனைகளும் இல்லாமல் நபியவர்களைக் குறிக்குமுகமாக உருவப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட போது கூட இந்நாட்டு முஸ்லிம்கள் தமது எதிர்ப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தி அதை நீக்கச் செய்துள்ளனர்.

ஏன் என மாற்று சமூகக்காரர்கள் சிந்திக்க வேண்டும். உலகத் தலைவர்களெல்லாம் தமக்கு உருவம் வைக்க வேண்டும், சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது எனக்கு உருவம் வரையாதீர்கள், சிலை வைக்காதீர்கள், எனது மண்ணறையை உயர்த்திவிடாதீர்கள் என போதனை செய்த தலைவர் அவர். அவரது இந்தப் போதனையை சுமார் 1450 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஆரம்பகால முஸ்லிம்கள் முதல் இன்றுவரை வாழும், வாழவிருக்கும் கடைசி முஸ்லிம் வரை கோடான கோடி முஸ்லிம்கள் மதித்து அவருக்கு உருவமோ, சிலையோ வைக்காமல் இருக்கும் போது….

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோடான கோடி மக்கள் பேணி வரும் மரபை ஒரு சிலiர் அதுவும் வேறு சமூகத்தில் இருந்து கொண்டு அதை மீறினால் இதை எப்படி முஸ்லிம்கள் ஏற்பார்கள்! கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மீறுவதை எப்படி அங்கீகரிக்கலாம் எனச் சிந்தித்துப் பாருங்கள். கௌரவப்படுத்தும் விதத்தில் படம் வரைந்தாலே ஏற்காத நிலையில், கேலிச்சித்திரம் வரையலாமா? மதத் தலைவர்கள் கேலி கிண்டலுக்குரியவர்களா? கேலிச்சித்திரம் வரைபவர் கேலி செய்வது எனது உரிமை என்று எப்படிக் கூறுவார். ஒருவரது உரிமை அடுத்தவருக்குப் பாதிப்பையும் பங்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். உன்னை நான் கேலி செய்வேன். அது எனது உரிமை, நீ அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று எப்படிக் கூற முடியும்.

உன்னை நான் கேலி செய்வேன். அது எனது உரிமை என ஒருவர் கூறினால் நான் உன் கன்னத்தில் அடிப்பேன். அது எனது உரிமை என்றுதான் கூற நேரிடும்.
கேலி, கிண்டல் எதில் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதில் இருப்பதில் ஆட்சேபனையில்லை. யார் கேலி செய்யப்படுகின்றாரோ அவர் அதை அங்கீகரிக்க வேண்டும். நான் ஒருவரைக் கேலி செய்கின்றேன். அதில் அவர் கோபம் கொள்கின்றார் என்றால் கேலி செய்பவர் தான் தனது கேலியை நிறுத்த வேண்டுமே தவிர கோபப்படுபவர் அவர் கோபத்தை நிறுத்த வேண்டும் என்று கூற முடியாது.

அடுத்து, கேலிச்சித்திரம் வரையும் போது கூட அதில் ஓரளவாவது உண்மை இருக்க வேண்டும். உதாரணமாக எதிர்கட்சித் தலைவரைக் கேலிச் சித்திரம் வரைவோர் அவரது கையில் யானைப் பாகனின் அங்குஜத்தை வரைவர். அவரது கட்சிச் சின்னம் யானை என்பதால் இப்படி வரைவோர் JR ஐ வரையும் போது மூக்கைப் பெரிதாக வரைவர். உண்மையில் அவரது மூக்கு சற்று பெரிதுதான். இப்படி ஓரளவு உண்மை இருக்கும். இதை மிகைப்படுத்தி எழுதுவர்.

இவர்கள் நபியவர்களைச் சித்தரிக்கும் போது நபியவர்களின் குண நலன்களுக்கு முரணாக தீவிரவாதியாகவும், பெண் பித்தராகவும் சித்தரிக்கின்றனர். இதை எப்படி முஸ்லிம்கள் தாங்கிக்கொள்ள முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் பலதார மணம் புரிந்துள்ளார்கள். ஆனால் மனைவியரைத் தவிர வேறு எந்தப் பெண்களையும் தொட்டதும் இல்லை. அவரது தீர்க்க தரிசன வாழ்வுக்கு முற்பட்ட வாழ்வில் கூட எந்தப் பெண்ணுடனும் எத்தகைய உறவுகளையும் வைத்திருந்தது கிடையாது. ஆன்மீகத் தலைவர்கள் ஆசி வழங்குவதற்காக தொட்டு ஆசீர்வதிப்பதுண்டு. அதைச் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் போர்களில் ஈடுபட்டுள்ளார்கள். போரில் கூட பெண்கள், சிறுவர்கள், மத குருக்கள் கொல்லப்படக் கூடாது என 1400 ஆண்டுகளுக்கு முன் சட்டம் சொன்னவர் அவர். போர்க்களம் தவிர்ந்த அவருடைய வாழ்வில் அவர் கரடுமுரடாக நடந்து கொண்டதாக யாருக்கும் நிரூபிக்க முடியாது. அவர் எதிரிகளையும் மன்னித்து அதன் மூலமாக அவர்களையும் நண்பர்களாக மாற்றிய வரலாறுகளே அதிகம். இது இப்படியிருக்க அவரை இனவாதியாக வர்ணிப்பதை எப்படி ஏற்க முடியும்?

கேலிச்சித்திரம் வரையும் உரிமை சினிமா எடுக்கும் உரிமை என்ற பெயரில் வரலாற்றையும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையையும் திரித்து எழுத முடியுமா?

கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் முஹம்மத்( ஸல்) அவர்களை ஒரு இறைத் தூதர் என்றும் நீங்கள் நம்பலாம். இறைத்தூதர் இல்லையென்றும் நீங்கள் நம்பலாம். அது உங்கள் சுதந்திரம். ஆனால் அவர் செய்யாததைச் செய்ததாகக் கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. இது முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. அனைத்து மனிதர்கள் விடயத்திலும் இதுதான் அளவுகோள்!

கண்ணியத்திற்குரிய மாற்றுமத நண்பர்களிடம் நான் பணிவாக வேண்டுவது என்னவென்றால் நீங்கள் முஹம்மத் எனும் அம்மனிதரின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவரை நீங்கள் இறைத்தூதர் என்று ஏற்காவிட்டாலும் ஒரு மாமனிதர் என்றே ஏற்பீர்கள்.

பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டுள்ளார்கள். அவர்களை உலகம் போற்றுகின்றது. இவர் பெண் குழந்தைகளைக் கொலை செய்து வந்த சமூகத்தில் பெண்ணுரிமை பேசி ஜாதி, மொழி வேற்றுமைக்கு எதிராகப் போராடுடினார்கள் உண்மையில் அறபு மொழி வெறியில் இருந்த மக்களுக்கு மத்தியில் அறபியைத் தாய்மொழியாகப் பேசிக்கொண்டே அறபுமொழி வெறிக்கு எதிராகப் போராடியவர் இவர்.

சாதி, மொழிக்கு எதிராகப் பேசுபவர். பொதுவாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் உயர் சாதியில் பிறந்து சாதி வேறுபாட்டிற்கு எதிராகப் போராடியவர் நபி(ஸல்). கருப்பினத்தவர்களுக்குச் சாதகமாக கருப்பர்கள் போராடுவார்கள். ஆனால் வெள்ளையராகப் பிறந்து கருப்பர்களுக்காகக் குரல் கொடுத்தவர் முஹம்மத்(ஸல்) அவர்கள்.

மதீனாவில் ஆட்சியாளராக இருக்கும் போது யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து மத சுதந்திரத்தைப் பேணியவர். பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணி சமூக உறவுகளையும் மேம்படச் செய்தவர்.

இவ்வாறு வாழ்வின் எந்தத் துறையை எடுத்து நோக்கினாலும் அவர் சிறந்து விளங்குவார். எனவே, நடுநிலையோடு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்! அவர் ஒரு மாமனிதர், மனிதப் புனிதர் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்! மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடுவதை ஒருபோதும் நல்லுள்ளம் கொண்ட எவரும் அங்கீகரிக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

By admin