அல்லாஹ்வின் அத்தாட்சிகள்  

    குகைவாசிகள் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம். இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.  

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا    

       ‘குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சர்யமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?’ (அல்குர்ஆன் 18:09)

    என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.

    எந்த மனிதனும் வருடக்கணக்கில் உறங்கிட முடியாது. பலநூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான். பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான். பலநூறு நாட்கள் அல்ல. பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.

    இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான். எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.

    மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள். இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள். இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.

    இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வசக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும். நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன். அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளங்குவதற்காகவே ‘நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?’ என்ற கேட்கிறான்.

    வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் – இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று சொல்லத் தக்க குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு நம்ப மறுக்க முடியும்?

    இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவு படுத்திக் காட்டுகிறான்.

    இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.

    ஆனால் இறைவனையும் இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்? இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும் பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.

    இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது. திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

    நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் எற்பட்டது. நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது. அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.

    இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், ‘வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது’ (அல்குர்ஆன் 11:44) என்று கூறுகிறான்.

    மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர். இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது. மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதியச நிகழ்ச்சியை உண்மைப் படுத்தினார்கள்.

    கடலை இரு கூறாகக் கிழித்து மூஸா நபி காப்பாற்றப் பட்டதும், பிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் அழிக்கப்பட்டதும் நாம் அறிந்த வரலாறு. திருக்குர்ஆன் கூறும் போது இவ்வரலாற்றை இறை நம்பிக்கை அற்றவர்களால் நம்ப முடியாது.

    கடல் எப்படிப் பிளந்து வழிவிடும் என்று அவர்கள் வியப்படைவார்கள். இதன் காரணமாகத் தான் கடல் பிளந்த வரலாற்றைக் கூறிய இறைவன் பிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து எதிர் காலத்துக்கு படிப்பினையாக்குவோம் (அல்குர்ஆன் 10:92) என்று கூறுகிறான். இறைவன் பாதுகாத்த அந்த தடயம் – பிர்அவ்னின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த அற்புத நிகழ்ச்சிக்குரிய வரலாற்றைத் தடயமாக அவனது உடல் அமைந்துள்ளது.

    இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறைநம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.

    அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.

    அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.

    அந்த தடயம் என்ன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

By admin