குகைவாசிகள் வரலாறு சாராம்சம்    

    சென்ற பாகத்தில் 9 முதல் 26 வரையிலான வசனங்களின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளோம். அதில் ஒன்பதாவது வசனம் கூறுவது என்ன என்பதைக் கடந்த இரண்டு இதழ்களில் அறிந்தோம்.

    இனி இவ்வசனங்கள் அனைத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்கின்ற குகை மற்றும் ஏட்டுக்குரியவர்களின் வரலாறு என்ன என்பதைக் காண்போம்.

    அநியாயக் காரர்களாகவும் பல கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்த ஒரு சமுதாயத்தில் ஏக இறைவனைப் பற்றி அறிந்து அவன் மீது சில இளைஞர்கள் நம்பிக்கை கொண்டனர். இதை 13, 14, 15 ஆகிய மூன்று வசனங்களில் அறியலாம்.

    ஓரிறைக் கொள்கையில் முழு நம்பிக்கை வைத்து அம்மக்கள் மத்தியில் வாழ்வது அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இந்த நம்பிக்கையின் படி வாழ்ந்தால் கொல்லப்பட்டு விடுவோம் என்று அந்த இளைஞர்கள் அஞ்சுகன்றனர். இதை 20 வது வசனத்திலிருந்து அறியலாம்.

    தப்பித்து ஓடி தஞ்சமடைந்ததால் அக்குகையானது மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்யலாம். தப்பித்துச் செல்பவர்கள் இப்படித்தான் அதற்கான இடத்தைத் தேர்வு செய்வது வழக்கம்.

    குகையில் அவர்கள் தஞ்சமடைந்தவுடன் அவர்களைப் பல வருடங்கள் அல்லாஹ் தூங்க வைத்து விடுகின்றான். சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் அது அவர்கள் மீது படாமல் இருக்க இறைவன் ஏற்பாடு செய்கின்றான். மேலும் அவர்களை வலப்புறம் சிறிது நேரமும் இடப்புறம் சிறிது நேரமும் புரட்டிப் போடுகிறான். அவர்கள் ஊரை விட்டு ஓடும் போது, தங்களுடன் ஒரு நாயையும் அழைத்துச் சென்றனர். அந்த நாய் குகையின் வாசலில் நின்று கொள்கின்றது. தப்பித் தவறி யாராவது அவர்களைப் பார்த்து விட்டார்கள் என்றால் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே ஏற்படும். அத்துடன் நாய் நிற்கும் கோலமும் பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தும். இத்தகைய ஏற்பாடுகளைச் செய்து மற்றவர்கள் கண்களில் படாமல் அவர்களை அல்லாஹ் பல வருடங்கள் வைத்து விடுகின்றான். இதை 17, 18, 11 ஆகிய வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    இப்படியே ஆண்டுகள் ஓடுகின்றன. இவர்களது சம காலத்தவர் அனைவரும் மரணித்து விடுகின்றனர். அவ்வூரில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் பிறகு அவர்களை அல்லாஹ் விழிக்கச் செய்கின்றான். இத்தனை ஆண்டுகள் உறங்கினோம் என்பது கூட அவர்களுக்குத் தெரிய வில்லை. ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவாகவே தாங்கள் தூக்கத்தில் இருந்ததாக அவர்கள் நினைக்கின்றனர். விழித்தவுடன் தான் பசியை உணர்கின்றார்கள். ஒருவரை உணவு வாங்கி வருமாறு அனுப்புகின்றார்கள். எந்தச் சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் குகையில் தஞ்சமடைந்தார்களோ அந்தச் சமுதாயம் தான் ஊரில் உள்ளது என்று நினைத்ததால் ஒளிந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் உணவு வாங்கி வருமாறு அவரை அனுப்புகின்றார்கள். மாட்டிக் கொண்டால் கொன்று விடுவார்கள் எனவும் எச்சரித்து அனுப்புகின்றனர். இதை 19, 20 ஆகிய வசனங்களிலிருந்து அறியலாம்.

    இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு இவர்களைப் பற்றி தெரிகின்றது. குகைவாசிகள் அப்போதோ அல்லது அம்மக்களுடன் சில காலம் வாழ்ந்து விட்டோ மரணிக்கின்றார்கள். அவர்கள் மரணித்த பின் அவர்கள் மீது நினைவாலயம் எழுப்புவோம் என்று சிலரும் வழிபாட்டுத்தலம் எழுப்புவோம் என்று சிலரும் வாதிடுகின்றனர். இரண்டாவது கருத்துக்குரியவர்களே அதில் வெற்றி பெறுகின்றனர். அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப்பட்டது. 21 வது வசனத்தில் இதை அறியலாம்.

    குகைவாசிகள் வரலாறு குறித்து நாம் எந்த அளவு அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அந்த விபரங்கள் இவை தாம்.

    குகைவாசிகள் குறித்து யூத சமுதாயத்தினரும் செவி வழியாகக் கேட்டு அறிந்திருந்தனர். அவர்கள் மேலே கூறப்பட்ட அடிப்படையான விஷயங்களை விட்டு விட்டு வேண்டாத சர்ச்சையில் ஈடுபட்டு வந்தனர்.

    அது குறித்து இடையிடையே இறைவன் கண்டிக்கின்றான்.

    அவர்கள் எத்தனை நபர்கள் என்பதும் அத்தகைய வேண்டாத சர்ச்சைகளில் ஒன்றாகும். இத்தனை நபர்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் அது பற்றி பேசலாம். மூவர் எனவும், ஐவர் எனவும், எழுவர் எனவும் அவர்கள் சர்ச்சை செய்தனர்.

    ‘இறைவனே அவர்களின் எண்ணிக்கை குறித்து நன்கறிந்தவன்’ என்று கூறி இந்த சர்ச்சைக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைக்கிறான்.

    தெளிவாகத் தெரிந்த விஷயம் குறித்து தவிர அவர்களிடம் விவாதம் செய்யாதீர் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடுகின்றான்.

    எவரேனும் இந்த எண்ணிக்கை தமக்குத் தெரியும் என்று கூறினால் அந்த விளக்கத்தை அவரிடம் பெற்றுக் கொள்ளாதே! என்றும் கட்டளையிடுகின்றான்.

    இம்மூன்று விஷயங்களும் 22 வது வசனத்தில் இடம் பெற்றுள்ளன.

    ஆனால் எது குறித்து பேசக் கூடாது என்று அல்லாஹ் வாய்ப்பூட்டு போட்டானோ அது குறித்து ஏராளமான விரிவுரையாளர்கள் பெசினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட தம்மை மேதைகளாக எண்ணிக் கொண்டு ஆளுக்கு ஒரு எண்ணிக்கையைக் கூறினார்கள். இதில் இவர்கள் யூதர்களையும் மிஞ்சினார்கள் எனலாம்.

    22 வது வசனத்திலுள்ள ‘சிலரைத் தவிர அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள்’ என்ற வாசகத்தை இவர்கள் பலமாகப் படித்துக் கொண்டார்கள்.

By admin