தப்ஸீர்களின் கைவரிசை    

    ‘சிலரைத் தவிர அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள்’ என்று இறைவன் கூறுகிறான்.

    அந்தச் சிலரில் நானும் ஒருவன் என்று சில நபித்தோழர்கள் குறிப்பிட்டதாக சிலர் கதை கட்டியுள்ளனர். அவர்கள் கூறியதாக பலவிதமான எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

    ஆளுக்கு ஒரு எண்ணிக்கை கூறியதாக இவர்கள் இட்டுக் கட்டுவதிலிருந்து அந்த எண்ணிக்கை எந்த நபித்தோழருக்கும் தெரியவில்லை என்பதை அவர்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலருக்கு அந்த எண்ணிக்கை தெரியும் என்றிருந்தால் அனைவரும் எண்ணிக்கையைத் தான் கூறியிருக்க வேண்டும்.

    ‘சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள்’ என்ற வசனத்தில் குறிப்பிடப்படும் சிலரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இல்லை. அவர்களையே இது பற்றி பேசக்கூடாது என்று இறைவன் கூறிவிடுகின்றான்.

    அவ்வாறிருக்க வஹீயின் தொடர்பு இல்லாத நபித் தோழர்களோ மற்றவர்களோ அந்தச் சிலரில் எவ்வாறு இருக்க முடியும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்க வில்லை.

    அவர்களது இறைவனே அவர்களது எண்ணிக்கையை அறிவான் என்று மட்டும் இறைவன் கூற வேண்டியது தானே! சிலரைத் தவிர அறிய மாட்டார்கள் என்று கூற வேண்டியது தானே! சிலரைத் தவிர அறிய மாட்டார்கள் என்று கூறி ஏன் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்.

    காரணத்தோடு தான் அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். அல்லாஹ் மட்டும் தான் அவர்களின் எண்ணிக்கையை அறிவான் என்று கூறியிருந்தால் அது பொய்யாகவே போய் விடும். அல்லாஹ்வைத் தவிர வேறு சிலரும் நிச்சயம் அவர்களின் எண்ணிக்கையை அறிவார்கள்.

    குகைவாசிகள் எழுப்பப்பட்ட போது எந்த மக்களைச் சந்தித்தார்களோ – எந்த மக்கள் அவர்களின் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்களோ அவர்கள் நிச்சயமாக குகைவாசிகளின் எண்ணிக்கையை அறிவார்கள். நேரடியாக குகைவாசிகளைப் பார்த்த பிறகு அவர்களின் எண்ணிக்கையை அறியவில்லை என்று கூற முடியாது.

    சிலரைத் தவிர அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுவது இவர்களைக் குறிப்பிடுவதற்காகத் தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தத் தர்க்கமும் செய்ய வேண்டாம் என்று இறைவன் கட்டளையிடுவதால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு – வாழ்ந்தவர்களில் எவருக்கும் – அந்த எண்ணிக்கை தெரியாது என அறியலாம்.

    நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த யாருக்கேனும் அந்த எண்ணிக்கை தெரியும் என்றிருந்தால் அது பற்றி தர்க்கம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்க முடியாது.

    இந்தச் சாதாரண உண்மையைக் கூட அறியாமல் அந்தச் சிலர் நான் தான் என்று நபித்தோழர்கள் கூறியதாகக் குறிப்பிட்டு குழப்பி விட்டார்கள்.

    நபித் தோழர்களில் யாரும் இவ்வாறு கூறியதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் சான்றும் இல்லை.

    எனவே அவர்களின் எண்ணிக்கை குறித்து யார் பேசினாலும் என்ன சமாதானம் கூறினாலும் அவர்கள் அதிகப் பிரசங்கிகளே தவிர திருக்குர்ஆனின் விரிவுரையாளர்கள் அல்லர்.

    குகைவாசிகளின் மன உறுதியில் தான் நமக்குப் படிப்பினை உள்ளதே தவிர எண்ணிக்கையில் அல்ல என்பதை நாம் எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும்.

    குகையில் அவர்கள் எவ்வளவு காலம் உறக்க நிலையில் இருந்தனர்? இந்த வேண்டாத சர்ச்சையிலும் சிலர் இறங்கினார்கள்.

    சிலர் முன்னூறு வருடங்கள் என்றனர். முன்னூற்று ஒன்பது என்று சிலர் கூறினார்கள். 25 வது வசனத்தில் இதை அல்லாஹ் கூறுகிறான்.

    சில மேதாவிகள் இரண்டையும் சேர்த்து புது விளக்கம் தந்தனர். சந்திரக் கணக்கின் படி 309 வருடங்களும் சூரிய கணக்கின் படி 300 வருடங்களும் என்று யூதர்களின் இந்தக் கூற்றுக்கு தப்ஸீர் என்ற பெயரில் வியாக்கியானம் செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை குறித்தும் பேசாதிருக்க வேண்டும் என்பது தான் இறைவனின் கட்டளை. 26 வது வசனத்தில் எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள் என்பதை அல்லாஹ் தான் அறிவான் எனக் கூறுவீராக என்று நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் கட்டளையிட்டு விட்டான்.

    எவ்வளவு காலம் அவர்கள் தங்கினார்கள் என்பதைக் கூறும் போதும் சிலர் அறிவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்தச் சிலர் யார் என்பதையும் சேர்த்துக் கூறுகின்றான்.

    ‘அவர்கள் தங்கிய காலத்தை சரியாக அறிந்தவர்கள் யார் என்பதைத் தெளிவு படுத்துவதற்காக பின்னர் அவர்களை நாம் எழுப்பினோம்’. (அல்குர்ஆன் 18:12)

    அவர்கள் எழுப்பப்பட்டது அவர்கள் தங்கிய காலத்தை அறிந்து கொள்வதற்காக என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் எழுப்பப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தான் இது சாத்தியமாகும்.

    எப்போது ஊரை விட்டுப் போனார்கள் என்பதை குகைவாசிகளிடம் விசாரித்து அவர்கள் தங்கியிருந்த காலத்தை அம்மக்கள் முடிவு செய்ய இயலும். எனவே தான் அவர்களை எழுப்பி அவர்கள் தங்கிய காலத்தை அறியச் செய்தோம் என்று இறைவன் கூறுகின்றான்.

    குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவர்கள் தங்கியிருந்த காலம் எவ்வளவு என்பது தெரியுமா? நிச்சயமாக தெரியாது. அது பற்றிப் பேசும் உரிமையும் கிடையாது.

    ஆயினும் ஓரிரு ஆண்டுகள் அல்ல என்று வேண்டுமானால் திட்டவட்டமாகக் கூறலாம். 11 வது வசனம் பல வருடங்கள் என்று தான் கூறுகின்றது.

    பத்து இருபது ஆண்டுகள் அல்ல என்று வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் இவர்கள் திரும்பி எழுப்பப்படும் போது வேறு சமுதாயத்தைத் தான் பார்க்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இதற்கு ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகலாம். இந்த அளவுக்கு மட்டும் சிந்திக்க வாசக அமைப்பில் இடம் உள்ளது. எத்தனை வருடங்கள் என்று திட்டமிட்டுக்கூறக் கூடாது. தெரியாது என்றே கூற வேண்டும்.

    குகைவாசிகள் இன்றளவும் உயிருடன் உள்ளனர். கியாமத் நாளின் போது எழுந்து வருவார்கள் என்ற கட்டுக் கதையும் சமுதாயத்தில் நிலவுகின்றது.

    அவர்கள் மீது – அவர்களுக்கு மேல் ஒரு வழிபாட்டுத் தலம் எழுப்பப்பட்டு விட்டது என்பதிலிருந்து அவர்கள் அப்போதே மரணித்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    இந்த வரலாறு குறித்து இன்னும் பல மவ்ட்டீகக் கருத்துக்களும் நிலவுகின்றன.

By admin