இறைவனின் வார்த்தைகள்    

    ‘உமது இறைவனின் ஏட்டிலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை ஓதுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனுமில்லை. அவனையன்றி (வேறு) புகலிடத்தை நீர் காண மாட்டீர்’ (அல்குர்ஆன் 18:27)

    குகைவாசிகள் வரலாற்றில் நாம் படிப்பினை பெறத் தேவையானவற்றைக் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளை பிறப்பிக்கின்றான்.

    உமது இறைவனிடமிருந்து வரும் செய்திகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் இந்தக் கட்டளையின் சாரம்.

    இந்த வசனத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதி ‘அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை’ என்பது தான். அதிலும் குறிப்பாக ‘அவனது வார்த்தைகள்’ என்ற சொற்றொடர் தான் பலராலும் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றது.

    அந்தச் சொற்றொடர் திருக்குர்ஆனில் 13 இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘அவனது வார்த்தைகள்’ என்பது திருக்குர்ஆனையே குறிக்கின்றது என்று சிலர் கருதிக் கொண்டு அளிக்கின்ற விளக்கம் குழப்பத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

    இந்தச் சொற்றொடர்களை எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு இதே அத்தியாயத்தின் 109 வது வசனத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    ‘எனது இறைவனின் வார்த்தைகளை எழுதிட கடல் மையாக ஆக்கப்பட்டாலும் எனது இறைவனின் வார்த்தைகளுக்கு முன் கடல் முடிந்து விடும். இது (இக்கடல்) போன்றதைக் துணைக்கு நாம் கொண்டு வந்தாலும் சரியே!’ (அல்குர்ஆன் 18:109)

    அதாவது குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதப் புகுந்தால் கடல் முழுவதும் மையாக ஆக்கப்பட்டு அத்துடன் இன்னொரு கடலளவு மை உதவிக்குக் கொண்டு வரப்பட்டாலும் விளக்கம் எழுதி முடியாது என்று இவர்கள் விளக்கம் கூறுகினறனர்.

    இதை இன்னும் வலிமையுடன் இன்னொரு வசனமும் குறிப்பிடுகின்றது.

    ‘இந்தப் பூமியில் மரங்கள் யாவும் எழுது கோலாகவும், இக்கடல் தன்னுடன் ஏழு கடல்களைத் துணைக்கு கொண்டு வந்தாலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் முடியாது. அல்லாஹ் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன் 31:27)

    குர்ஆன் கூறும் வழியில் நடப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நடப்போம் என்று நாம் அழைக்கும் போது அதற்கு எதிராக இவ்விரு வசனங்களையும் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.

    குர்ஆன் என்ன சாதாரணமாக விளங்கக் கூடியதா? இப்போதுள்ள கடல் போல் ஏழு கடல்கள் மையாக ஆக்கப்பட்டாலும் விளக்கம் எழுதி முடியாது என்று அல்லாஹ் கூறும் போது உங்களுக்கு எப்படி குர்ஆன் விளங்கும்? என்று கேட்கின்றனர்.

    குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக ஆக்கியுள்ளோம் என 19:97, 44:58, 54:17, 54:22, 54:32, 54:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. மனிதன் நல்வழி பெறுவதற்காகவே குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறும் போது குர்ஆன் என்றால் காத தூரம் ஓட்டம் எடுக்கும் அளவுக்கு இறைவன் பயம் காட்டுவானா? என்று சிந்தித்திருந்தால் ‘இறைவனின் வார்த்தைகள்’ என்பது குர்ஆனைக் குறித்துச் சொல்லப்பட்டதல்ல என்பதை விளங்கியிருப்பார்கள்.

    குர்ஆனுக்கு விளக்கம் தருவதற்காகத் தானே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் விளக்கங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவர்களின் விளக்கங்களை ஒன்று திரட்டி, திரும்பத் திரும்பக் கூறப்படுவதைக் கழித்து விட்டுப் பார்த்தால் இக்குர்ஆனைப் போல் மூன்று அல்லது நான்கு மடங்குகளில் அடங்கி விடும். அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சரியாக விளங்கவில்லையா? என்று சிந்தித்துப் பார்த்திருந்தால் ‘இறைவனின் வாhத்தைகள்’ என்பது குர்ஆனைக் குறித்துக் கூறப்பட்டவை அல்ல என்று புரிந்து கொண்டிருப்பார்கள்.

    ஏழு கடல் அளவுக்கு மை இருந்தாலும் குர்ஆனுக்கு விளக்கம் எழுத முடியாது என்றால் அந்த விளக்கம் மனிதனுக்கு எந்த வழியில் கிடைக்கும்? என்று சிந்தித்திருந்தால் ‘இறைவனின் வார்த்தைகள்’ என்பது குர்ஆனைக் குறித்து கூறப்படவில்லை என விளங்கியிருப்பார்கள்.
ஒரு மாணவன் வருடம் முழுவதும் அவனது பாடங்களை எழுத 50 மி.லி மை போதுமானதாக உள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்களை இதில் எழுதி விடுகின்றான். அப்படியானால் ஒரு கடல் அளவு மையால் எழுதி அவற்றை அடுக்கிக் கொண்டே போனால் சந்திர மண்டலத்தைக் கூட எட்டி விடும். ஏழு கடல் மை என்றால் கற்பனை செய்து கொள்ளலாம். சந்திர மண்டலத்தை எட்டி விடும் அளவுக்கு விளக்கத்தை எழுதும் நிலையில் ஒருவன் பேசினால் அந்தப் பேச்சில் அவ்வளவு குழப்பம் இருக்கின்றது என்று பொருள்.

    சந்திர மண்டலம் தொடும் அளவுக்குள்ள விளக்கவுரையைப் படித்து முடிக்க நூஹ் நபியின் வயதைப் போல் இன்னும் லட்சம் மடங்கு வாழ்நாள் தேவைப்படும். பல லட்சம் வருடங்கள் வாசித்து விளங்க வேண்டியதை 60 வயது வாழ்நாள் பெற்றுவனுக்கு அளிப்பதில் என்ன பயன்? என்று சிந்தித்திருந்தால் தாங்கள் எத்தகைய விபரீதமான கருத்தைக் கூறுகின்றோம் என்பதை விளங்கியிருப்பார்கள்.

    அவர்கள் ஆதாரமாகக் காட்டும் இரண்டு வசனங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் இத்தகைய விபரீதமான கருத்துக்கு வந்திருக்க மாட்டார்கள்.

    அவ்விரு வசனங்களிலும் இறைவனின் வார்த்தைகளை எழுத முடியாது என்று தான் கூறப்பட்டுள்ளது. வார்த்தைகளின் விளக்கவுரை எனக் கூறப்படவில்லை. விளக்கவுரை என்பது இவர்களாகக் கற்பனை செய்து கொண்டதாகும். இறைவனின் வார்த்தைகளைத் தான் எழுத முடியாது என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் குர்ஆனை நாம் எழுதுவதாக இருந்தால் 50 மி.லி மையில் எழுதி விடலாம். எனவே இவ்வசனங்கள் குர்ஆனைக் குறிப்பிடவேயில்லை என்று அவர்கள் விளங்கியிருப்பார்கள்.

    குர்ஆன் இறைவனிடமிருந்து வந்தால் ‘இறைவனின் வார்த்தைகள்’ என்பது குர்ஆனைத் தான் குறிக்கின்றது என்று நினைத்து விட்டனர். இந்த நினைப்பின் அடிப்படையில் பார்த்தால் தவராத், இஞ்சீல், சபூர் மற்றும் பெயர் கூறப்படாத ஏராளமான வேதங்களை அருளினான். அவையும் குhஆனைப் போலவே இறைவனின் வார்த்தைகள் தாம். எனவே எல்லா வேதங்களையும் இச்சொல் குறிக்கின்றது என்று சிலர் வியாக்கியானம் தருவார்கள்.

    மேலே எடுத்துக் காட்டியுள்ள 18:27 வசனம் இந்த விளக்கமும் தவறு என்று கூறுகின்றது. ‘அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை’ என்று இவ்வசனம் கூறுகின்றது. ஆனால் குர்ஆனைத் தவிர அனைத்து வேதங்களையும் மாற்றி விட்டனர். இவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் இறைவன் கூறியதற்கு மாற்றமாக நடந்து விட்டது என்ற நிலை ஏற்படும்.

    ‘இறைவனின் வார்த்தைகள்’ என்ற சொற்றொடர் இடம் பெறும் எல்லா வசனங்களையும் சேர்த்து ஆய்வு செய்திருந்தால் அத்தகைய குழப்பமான முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.

By admin