எண்ணிலாக் கட்டளைகள்   

    ‘உமது இறைவனின் ஏட்டிலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை ஓதுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனுமில்லை. அவனையன்றி (வேறு) புகலிடத்தை நீர் காண மாட்டீர்’ (அல்குர்ஆன் 18:27)

    இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘அவனது வார்த்தைகள்’ என்ற சொற்றொடருக்கு, அவனது வேதங்கள் என்றும், அவ்வேதங்களுக்கு விளக்கம் எழுதுதல் என்றும் விளங்கிக் கொண்டு சிலர் தவறான வியாக்கியானங்கள் வழங்கி வருவதைக் கடந்த இதழில் கண்டோம்.

    இறைவனின் வார்த்தைகளை மாற்ற முடியாது என்ற சொற்றொடர் 10:64 வசனத்திலும் காணப்படுகிறது.

    ‘அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமை உலகிலும் நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளில் மாற்றுதல் கிடையாது. இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 10:64)

    வேதங்களைத் தான் இச்சொற்றொடர் குறிக்கிறது என்றால் குர்ஆனைத் தவிர எல்லா வேதங்களும் மாற்றப்பட்டு விட்டதே என்பதைச் சிந்தித்தால் இது வேதத்தைக் குறிக்க வில்லை என்பதை விளங்கலாம்.

    66:12 வசனத்தைச் சிந்தித்தால் இறைவனது வார்த்தைகள் என்பது வேறு, வேதங்கள் என்பது வேறு என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    ‘இம்ரானின் மகள் மாயமையும் (நல்லோருக்கு முன்னுதாரணமாக இறைவன் ஆக்கியுள்ளான்.) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். நம்மிடமிருந்து நமது உயிரை அவரில் ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும் வேதங்களையும் உண்மைப்படுத்தினார். கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவராக இருந்தார்’. (அல்குர்ஆன் 66:12)

    மர்யம் அவர்கள் இறைவனது வார்த்தைகளையும் வேதங்களையும் உண்மைப்படுத்தினார் என்று கூறி வேதங்கள் வேறு வார்த்தைகள் வேறு என்று அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.

    ‘அவனது வார்த்தைகள்’ என்ற சொற்றொடர் வேதங்களையோ குர்ஆனையோ குறிக்கவில்லை என்றால் வேறு எதைத் தான் குறிக்கின்றது என்ற விஷயத்துக்கு வருவோம்.

    குர்ஆனில் அவனது வார்த்தைகள் என்ற இடத்தில் ‘கலிமாத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் வார்த்தைகள் என்பது தான். ஆனால் ‘அல்லாஹ்வின் கட்டளைகள்’ என்பது தான் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற கருத்தில் குர்ஆனில் பயன்படுத்தப்படுகின்றது.

    இவ்வுலகில் ஒரு விநாடியில் கோடிக் கணக்கான காரியங்கள் நடைபெறுகின்றன. ஒரு விநாடியில் அத்தனை கட்டளைகளையும் அவன் பிறப்பிக்கின்றான்.

    ஒரு விநாடி நேரத்தில் நீங்கள் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகின்றீர்கள். உங்களிடமிருந்து அனிச்சையாகப் பல்வேறு காரியங்கள் நிகழ்கின்றன.

    உதாரணமாக ஒரு பக்கத்துக்குக் கடிதம் எழுதுகின்றீர்கள் என்றால் அதற்கான கட்டளையும் அவனிடமிருந்தே பிறப்பிக்கப் படுகின்றது. ஒரு பக்கத்தில் 50 வரிகள் எழுதுகின்றீர்கள் என்றால் அதற்கான கட்டளையும் அவனிடமிருந்தே வருகின்றது. 50 வரிகளிலும் நூற்றுக்கணக்கான எழுத்துக்களை எழுதுகின்றீர்கள் என்றால் அதற்கான நூற்றுக்கணக்கான கட்டளைகளும் அடுக்கடுக்காக அவனிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

    ‘வணக்கத்திற்குரியவன்’ என்ற சொல்லை நீங்கள் எழுதுவதற்குள் 12 கட்டளைகள் அவனிடமிருந்து பிறந்து விடுகின்றன. ஒவ்வொரு எழுத்தும் பல புள்ளிகளைக் கொண்டது என்ற அடிப்படையில் அதற்கான கட்டளைகளும் அவனிடமிருந்தே பிறக்கின்றன. சில பேர் எழுதியதைப் பாதி அளவு எழுதிய நிலையில் உயிரை விட்டார்கள் என்றால் அவர்களுக்கான கட்டளை அவ்வளவு தான். ஐம்பது பக்கக் கடிதம் எழுதுவதற்குள் ஆயிரக்கணக்கான கட்டளைகள் அவனிடமிருந்து பிறப்பிக்கப் பட்டு விடுகின்றன.

    ஐம்பது வரிகள் கொண்ட கடிதத்தை நீங்கள் எழுதும் போது உங்கள் கண்களுக்கு நூற்றுக்கணக்கான கட்டளைகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு இடமாக கண் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படா விட்டால் குருடனைப் போல் தான் உங்களால் எழுத முடியும்.

    எழுதும் போது உங்களுக்கு அரிப்பெடுக்கும். அதற்கான கட்டளையும் அவனிடமிருந்தே வருகின்றது. அப்போது நீங்கள் சொறிகின்றீர்கள் என்றால் அதற்கான கட்டளையும் அவனிடமிருந்தே வருகின்றது. எத்தனை தடவை சொறிய வேண்டும் என்ற கட்டளையும் அவனிடமிருந்தே வருகின்றது.

    இதே நேரத்தில் எதையாவது காதால் கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அங்கு வீசும் வாடையை முகர்வீர்கள். தென்றல் உங்கள் மேனியில் ஒவ்வொரு அணுவிலும் பட்டுக் கொண்டே இருக்கும். சாய்வீர்கள். நிமிர்வீர்கள். கால்களைத் தட்டுவீர்கள். கழுத்தில் எறும்பு கடிப்பதை உணர்வீர்கள். இப்படி ஐம்பது வரிக் கடிதம் எழுதுவதற்கு ஆகும் சுமார் பத்து நிமிடங்களில் கோடிக்கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

    உங்களுக்குத் தெரியாமல் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும். எவ்வளவு வேகத்தில் இரத்தத்தை அனுப்ப வேண்டும். இரத்தம் எங்கே செல்ல வேண்டும். வயிற்றுக்குள்ளே உள்ள உணவில் எதை எடுக்க வேண்டும். எதைத் தள்ள வேண்டும் என்பன போன்ற இலட்சக்கணக்கான கட்டளைகள் பத்து நிமிடத்திற்குள் நமக்குத் தெரியாமலேயே நமக்கு இடப்படுகின்றன.

    ஒரு மனிதனின் பத்து நிமிட நேரத்தில் பல்லாயிரம் கோடி கட்டளைகள் அவன் விஷயமாகப் பிறப்பிக்கப் படுகின்றன என்றால் உங்கள் 60 வயது வாழ்க்கையில் உங்களுக்காக மட்டும் பிறப்பிக்கப் பட்ட கட்டளைகளை எழுதவே ஒரு கடல் மை தேவைப்படும்.

    600 கோடி மக்களுக்கும் இடப்படுகின்ற கட்டளைகளை எழுத வேண்டும் என்றால் ஏழு கடல் என்ன? ஏழாயிரம் கடல் மை கூட போதாத ஒன்று தான்.

    மனிதர்கள் மட்டுமின்றி இலட்சோப லட்சம் ஜீவராசிகளுக்கு இடப்படும் கோடானுகோடி கட்டளைகள் ஜீவனில்லாத மரம், செடி, கொடிகளுக்கு இடப்படும் கட்டளைகள் என்று எடுத்துக் கொண்டால் அவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்தில் மட்டும் பிறப்பிக்கப் படுகின்ற கட்டளைகளைக் கூட எழுத முடியாது.

    இது தான் இறைவனின் வார்த்தைகள் என்பதன் பொருளாகும்.

    ஒவ்வொரு பொருளின் ஒவ்வொரு நொடியும் அவன் கட்டளைப்படியே இயங்குகின்றன. முதுகைச் சொறியுங்கள் என்று கட்டளையிடும் அதே நேரத்தில் 600 கோடி மக்களின் கைகளுக்கும் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் அவனிடமிருந்து பிறக்கின்றன.

    அவன் அனைத்துப் பொருட்களுடன் ஒவ்வொரு விநாடியும் தொடர்பில் இருக்கின்றான் என்று அவனது வல்லமையைப் பறை சாற்றுவதற்காகவே அவனது வார்த்தைகளை, கட்டளைகளை எழுதி முடியாது என்கின்றான்.

    இப்போது ஒவ்வொரு வசனமாகப் பார்ப்போம்.

    ‘அவனது கட்டளைகளை மாற்றுபவன் இல்லை’ என்று 18:27, 10:64, 6:115 ஆகிய வசனங்களில் கூறப்படுவதற்கு என் கட்டை விரலால் காதைச் சொறியுமாறு அவன் கட்டளையிட்டால் வேறு கட்டளை போட்டு அதை எவனும் தடுக்க முடியாது என்பது பொருள்.

    18:109, 31:127 ஆகிய வசனங்களில், ‘அவனது கட்டளைகளை எழுதி முடியாது’ என்பதும் இதைத் தான் கூறுகின்றன.

    66:22 வசனத்தில் ‘அவனது வேதங்களையும் அவனது கட்டளைகளையும் உண்மைப் படுத்தினார்’ என்று கூறப்படுகின்றது. ஆண் துணையில்லாமல் இறைவனால் குழந்தையை உருவாக்க முடியும் என்ற அற்புதமான கட்டளைகள் உட்பட அனைத்தையும் மர்யம் நம்பினார் என்று பொருள்.

    2:124 வசனத்தில் ‘இப்ராஹீமை தனது கட்டளைகளால் சோதித்தான்’ என்று கூறப்படுவது நிச்சயம் வேதங்களைக் குறிக்காது. மகனைப் பலி கொடு! மனைவி மக்களை பாலைவனத்தில் கொண்டு போய் விடு! கஃபாவை கட்டு என்பன போன்ற பல கட்டளைகள் மூலம் சோதித்தான் என்பது அதன் பொருள்.

    6:34 வசனத்திலும் இதே கருத்து தான் கொள்ள வேண்டும்.

    (நபியே!) உமக்கு முன்னர் (சென்ற) தூதர்கள் பொய்யரெனக் கருதப் பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும் தொல்லை படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வாhத்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது. (அல்குர்ஆன் 6:34)

    இறைத் தூதர்களுக்கு இறுதி வெற்றி என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளை பிறந்தவுடன் அதை வேறு விதமாக மாற்றி எவராலும் எழுத முடியவில்லை. அவர்களின் பண பலமும் படை பலமும் இந்தக் கட்டளையின் முன்னர் நிற்க முடிய வில்லை.

    42:24 வசனத்தில் தனது கட்டளைகளால் சத்தியத்தை வெற்றி பெறச் செய்தான் என்பதும் அது குறித்து அவன் பிறப்பிக்கும் கட்டளைகளையே குறிக்கின்றது.

    7:158 வசனத்தில் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்புவதாகக் கூறுவதும் அவனது கட்டளைக்கு எதிராக மறுகட்டளை யாராலும் பிறப்பிக்க முடியாது என்ற கருத்தில் தான்.

    8:7 வசனத்தில் பத்ரு வெற்றியைப் பற்றிக் கூறும் போது ‘தனது கட்டளைகளால் சத்தியத்தை மேலோங்கச் செய்வான்’ என்று கூறுவதும் வேதத்தைக் குறிக்காது.

    ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றார் என்பதும் மன்னிப்பு தேடும் படியும், அதற்கான சொற்களையும் உள்ளடக்கிய கட்டளைகளையே குறிக்கின்றது.

By admin