அல்குர்ஆன் 2:106 வசனத்தில் ஒரு கட்டத்தில் இறைவன் விதித்த சட்டத்தை அந்த இறைவனே பிறிதொரு கட்டத்தில் மாற்றுவான் என்று கூறப்படுவதையும் அவ்வாறு மாற்றுவது இறைத் தன்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவனால் மாற்றப்பட்ட பல சட்டங்கள் காணக் கிடைக்கின்றன. ஹதீஸ்களிலும் இந்த நிலையைக் காண முடிகிறது.

உதாரணத்துக்காக அந்த நிலையில் அமைந்த சில வசனங்களைக் காண்போம்.

‘விசுவாசிகளே! நீங்கள் பயபக்தி உடையோராகும் பொருட்டு, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்களில் அது கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யாரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் வேறு நாட்களில் (நோற்று) கணக்கிடுதல் வேண்டும். இதற்கு சக்தி பெற்றவர்கள் மீது (நோன்புக்கு பகரமாக) ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம். யார் (ஏழைக்கு உணவளிப்பதில்) தாராளமாக நடக்கின்றாரோ அது அவருக்கு நல்லதாகும். நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் 2:184)

இந்த வசனத்தில் நோன்பை கடமையாக்கிய இறைவன் நோன்பு வைக்க சக்தி பெற்றவர்கள் நோன்பு வைக்காமல் ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்று கூறுகிறான். ‘இதற்கு சக்தி பெற்றவர்கள் மீது’ என்ற வாசகத்திலிருந்து இதை விளங்கலாம். நோன்பு வைப்பவர்கள் நோன்பு நோற்கலாம். அல்லது அதற்கு ஈடாக ஒரு ஏழைக்கு உணவளிப்பவர்கள் உணவளிக்கலாம்.

ஆயினும், நோன்பு நோற்பதே இவ்விரண்டில் உயர்ந்த நிலை என்றும் இவ்வசனத்தில் கூறுகிறான்.

எதுவுமே இறைவேதத்தில் இறைவனால் மாற்றப்பட வில்லை என்ற கருத்துடையோரின் வாதப்படி இவ்வசனமும் மாற்றப்பட வில்லை என்று ஆகும். இன்றைக்கும் நோன்பு வைக்கும் அளவுக்கு திடமும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் நோன்பு நோற்காமல் அதற்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று கூற வேண்டும். அந்தக் கருத்துடையவர்களே அவ்வாறு கூறுவது கிடையாது.

‘உங்களில் யார் அந்த (ரமளான்) மாதத்தை அடைகிறாரோ அதில் அவர் நோன்பு நோற்றாக வேண்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்’. (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டளையிடப்படுகின்றது.

நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அதற்கு ஈடாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாகாது என்ற கருத்தும் இதில் உணரப்படுகின்றது.

ஒரு இறைவசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவதற்கு வெறும் அனுமானம் மட்டும் போதுமானதாகாது. ஏனெனில் இந்த வசனம் அந்த வசனத்தை மாற்றி விட்டது என்று நாம் கூறும் போது, அந்த வசனம் ஏன் இந்த வசனத்தை மாற்றியிருக்க முடியாது என்று கேள்வி எழலாம். அல்லது இரண்டுமே மாற்றப்படவில்லை என்று கூறி இரண்டையும் இணைத்து புது விளக்கம் கூறலாம்.

ஒரு வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவதானால் சரித்திர ரீதியான சான்றுகளை முன் வைக்க வேண்டும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் கூறும் தகவல்களை முன் வைக்க வேண்டும். இந்த வசனங்களைப் பொருத்தவரை அத்தகைய சரித்திர சான்றுகளை நாம் காண முடிகின்றது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட (2:184) வசனத்தில் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற பகுதியை ஓதிக் காட்டி இது மாற்றப்பட்டு விட்டது என்று கூறினார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

2:185 வசனம் அருளப்படும் வரையில் விரும்பியவர்கள் நோன்பு நோற்றனர். விரும்பியவர்கள் ஒரு ஏழைக்கு உணவளித்தனர் என்று பல நபித்தோழர்கள் அறிவிப்பதாக இப்னு அபீலைலா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்கள் நோன்பு வைக்க சக்தி பெற்றவர்களும் கூட ஒரு நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளித்து நோன்பை விட்டு விடலாம் என்ற நிலை முன்னர் அமுலில் இருந்ததை அறிவிக்கின்றன.

இந்த வசனம் மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளது பற்றியும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்வது பொருத்தமானதாகும்.

சக்தி பெற்றவர்கள் மீது என்று மொழி பெயர்க்கப்படும் இடத்தில் ‘யுதீகூனஹு’ என்ற பதம் இடம் பெற்றுள்ளது. சக்தி பெற்றவர்கள் மீது என்பதே இதன் பொருளாகும். இப்படித்தான் அனைவரும் இநதப் பதத்தை உச்சரித்துள்ளனர். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுதீகூன’ என்பதை ‘யுதவ்விகூன’ என்று ஓதினார்கள். மிகுந்த சிரமத்துடன் செய்பவர்கள் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு அவர்கள் ஓதி விட்டு இது மாற்றப்படவில்லை, கிழவன், கிழவி ஆகியோரைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்கள் (புகாரி)

மற்றவர்கள் ஓதியதிலிருந்து வித்தியாசமாக அவர்கள் ஓதிய காரணத்தால் மிகுந்த சிரமத்துடன் நோன்பை நோற்கின்ற வயோதிகர்கள் இன்றைக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்று புரிந்து கொண்டார்கள். அதன் காரணமாகவே மாற்றப்படவில்லை என்றும் கூறினார்கள்.

எனவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை வைத்து அந்த வசனம் மாற்றப்பட வில்லை என்று கருத முடியாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களும் கூட ஒரு ஏழைக்கு உணவளித்து வந்துள்ளதாக பல நபித்தோழர்கள் குறிப்பிடுவது பொய்யாக இருக்க முடியாது.

புரிந்து கொள்வதில் சில நபித்தோழர்கள் தவறு செய்யலாம். நிச்சயமாக எந்த நபித்தோழரும் மார்க்க விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார்கள்.

இந்த அடிப்படையில் நாம் விளங்க முயன்றால் 2:184 வசனத்தின் குறிப்பிட்ட அந்தப் பகுதி அதற்கடுத்த வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது என்பதை ஐயத்திற்கிடமின்றி விளங்கலாம்.