இறைவனால் வழங்கப்பட்ட சில சட்டங்கள் இறைவனாலேயே மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காண்போம்.

‘நபியே! அறப்போர் செய்ய மூமின்களை நீர் உற்சாகப்படுத்துவீராக! உங்களில் சகிப்புத் தன்மையுடைய இருபது நபர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு பேரை வெல்ல முடியும். உங்களில் நூறுபேர் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெல்ல முடியும்’. (அல்குர்ஆன் 8:65)

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் கொள்கையை ஏற்ற அருமைத் தோழர்களும் மாற்றுக் கருத்துடையவர்களால் துன்புறுத்தப்பட்ட போது, பொறுமையைக் கடைபிடிக்குமாறு ஆரம்பத்தில் இறைவன் கட்டளையிட்டிருந்தான்.

அவர்களின் துன்புறுத்துதல் எல்லை மீறிச் சென்ற போது, மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு மதீனாவுக்கு முஸ்லிம்கள் குடியேறிய பிறகும், அவர்களின் தொல்லைகள் தொடர்ந்த போது அவர்களை எதிர்த்து அறப்போர் புரியுமாறு அல்லாஹ் ஆணையிட்டான். அந்த ஆணையே மேற்கண்ட வசனம்.

இந்த வசனத்தில் எதிரிகளின் படைபலம் பத்து மடங்காகவும், முஸ்லிம்களின் படைபலம் ஒரு மடங்காகவும் இருந்தாலும் அவர்கள் அறப்போர் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அறப்போர் துவங்கிட ‘ஒன்றுக்கு பத்து’ என்பது அளவு கோலாக இங்கே வரையறுக்கப்பட்டது.

எதிரிகளின் எண்ணிக்கை பத்து மடங்கை விட அதிகமாக இருக்கும் போது தான் அறப்போரிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முடியும். அவ்வாறில்லாத போது ஒதுங்கிக் கொண்டால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறியவர்களாவார்கள் என்பதும் இந்த வசனத்திலிருந்து தெரிய வருகின்றது. இந்த வரம்பு பிறகு மாற்றப்பட்டு வேறொரு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

உங்களில் சகிப்புத் தன்மையுடைய இருபது நபர்களிலிந்தால் அவர்கள் இருநூறு நபர்களை வெல்ல முடியும் என்ற வசனம் இறங்கிய போது பத்துக்கு ஒன்று என்ற அளவு பலமிருக்கும் போது பின்வாங்கலாகாது என்பது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டது. பின்னர்

‘இப்போது அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக ஆக்கி விட்டான், நிச்சயமாக உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் விளங்கி இருக்கிறான். உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு நபர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நபர்களை வெல்ல முடியும். உங்களில் ஆயிரம் நபர்களிருந்தால் இரண்டாயிரம் நபர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வெல்ல முடியும். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்’. (8:66) என்ற வசனம் இறங்கியது.

இருநூறுக்கு நூறு என்ற அளவு பலமிருக்கும் போது போரிலிருந்து விலகிக் கொள்ள முடியாது என்று கட்டளையிடப் பட்டது என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் (எண் 4652) இடம் பெற்றுள்ளது. இதே கருத்து புகாரியில் 4653வது ஹதீஸிலும் காணப்படுகின்றது.

8:65 வசனத்தில் கூறப்பட்ட சட்டம் 8:66 வசனம் பின்னர் அருளப்பட்டதன் மூலம் மாற்றப்பட்டுள்ளதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.

மதுபானங்களை படிப்படியாக தடை செய்ததும், பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுததை பதினேழு மாதங்கள் அனுமதித்து விட்டு பிறகு மாற்றியதும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். ஹதீஸ்களிலும் கூட இத்தகைய நிலையை நாம் காண முடியும்.

குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கலாகாது என்று முதலில் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டு பின்னர் அதை மாற்றியதும், கப்ரு ஜியாரத்தை முன்னர் தடை செய்து விட்டு பிறகு ஆண்களுக்கு அதை அனுமதித்ததும், மதுபானங்கள் அருந்துவதற்காக பயன்பட்ட பாத்திரங்களை உடைத்து விடுமாறு கட்டளையிட்டு பின்னர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததும் இதுபோன்ற இன்னும் அனேக சட்டங்களும் இதற்குச் சான்றாக உள்ளன.

மாற்றப்பட்டவைகளைப் பட்டியலிடுவது நமது நோக்கமல்ல. 9:106 வசனத்தின் கருத்து என்ன என்பதை விளக்குவதே நமது நோக்கம். இறைவன் வழங்கிய சட்டத்தை அந்த இறைவனே மாற்றலாம் என்பதுவே அவ்வசனத்தின் கருத்து. அதற்கு சான்றுகளும் பல உள்ளன.

இவ்வாறு மாற்றுவது இறைவனின் அறிவுக்கோ இன்னபிற அவனது பண்புக்கோ எந்த ஒரு குந்தகமும் விளைவிக்காது. அவனது ஞானத்தில் குறைபாடு என்பது அதன் அர்த்தமாகாது. இதை விளக்குவதே இங்கே நோக்கமாகும்.

இஸ்லாத்தின் எதிரிகளால் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு விடையளிக்க இயலாமல் 2:106 வசனத்தின் அர்த்தத்தையே தலைகீழாக சிலர் மாற்றி புது விளக்கம் கொடுப்பதால் இதை விரிவாக விளக்க வேண்டியதாயிற்று.