‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தாராளமுடையவன். அனைத்தையும் அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:115)

இஸ்லாமிய வணக்க முறையில் குறை காணும் குறுமதி படைத்தவர்களுக்கு சரியான மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது. அவர்களின் அடிப்படையில்லாத வாதங்களுக்கு உரிய விளக்கமாகவும் இவ்வசனம் திகழ்கின்றது. எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இஸ்லாத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் தனித்தன்மை கொண்டவை. குறிப்பாக, அதன் கடவுட் கொள்கை அறிவுப்பூர்வமாகவும், தெளிவானதாகவும் அமைந்துள்ளது. இந்தத் தெளிவான கடவுட் கொள்கையால் பலரும் ஈர்க்கப்பட்டு வருவதை சகிக்க முடியாதவர்கள் இஸ்லாத்தின் கடவுட் கொள்கையும் தங்களின் கடவுட் கொள்கையும் ஒரே மாதிரியானது தான் என்று காட்டும் முயற்சியில் அவ்வப்போது இறங்கி வருகின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கித் தொழுவதைக் கண்ட இவர்கள், முஸ்லிம்கள் மேற்கு திசையையே வணங்குவதாக முடிவுக்கு வந்தனர். திக்கை வணங்கும் துருக்கர் என்றான் பாரதி என்ற கவிஞன். அவன் வழியில் சினிமாவுக்குப் பாட்டெழுத வந்த ஒருவன் திசை தொழும் துருக்கரும் என் தோழர் எனப் பாடினான்.

இதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? ‘முஸ்லிம்கள் ஒரு கடவுளை வணங்க வில்லை. ஒரு திசையை – மேற்குத் திசையை – வணங்குகின்றனர். கல்லையும், மண்ணையும், இயற்கையையும் வணங்குவது போலவே முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள். அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்’. இதைத் தான் அந்த ஒற்றை வரியில் சொல்ல வருகின்றனர்.

இவர்களின் வாதத்தில் உள்ள பல அறியாமைகளை முதலில் நாம் கண்டு கொள்வோம்.

இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி – மேற்கையே அல்ல – வணங்குவது உண்மை தான். ஆனால் உலகின் வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் கிழக்கு நோக்கியும் வணங்குகின்றனர். இன்னும் சில பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தெற்கு நோக்கியும் மற்றும் சிலர் வடக்கு நோக்கியும் வணங்குகின்றனர்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகிறார்கள் என்றால் வேறு பகுதியில் உள்ளவர்கள் வேறு திசைகளை நோக்கி வணங்குகிறார்களே அது ஏன்? என்று இந்த தேசியக் கவிஞர்கள் சிந்திக்கவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் எத்திசையில் வணங்குகிறார்கள் என்பதை இவர்கள் கண்டதுமில்லை, கேட்டு அறிந்ததும் இல்லை. இநதக் கிணற்றுத் தவளைகள் தான் தேசியக் கவிஞர்கள்!

உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கியே வணங்குகிறார்கள் என்று வைத்துக் கொண்டால்; கூட இவர்களின் கூற்று அறியாமையினால் விளைந்தது தான் என்பதில் ஐயமில்லை.

மேற்குத் திசையில் நின்று கொண்டு ஒரு ஜனாதிபதி, இராணுவ மரியாதையை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். மேற்குத் திசையில் உள்ள ஜனாதிபதிக்கு இராணுவத்தினர் செய்யும் மரியாதை அந்தத் திசைக்குச் செய்யப்பட்ட மரியாதை என்று எந்த அறிவாளியும் கூற மாட்டார். யாருக்குச் செய்யப்படுகின்றதோ அவருக்குரிய மரியாதை என்றே எந்த அறிவாளியும் கருதுவார். இந்த சாதாரண அறிவு கூட இல்லாதவர்கள் தான் இத்தகைய விமர்சனத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் உண்மை நிலை என்ன? ஒருவன் எந்தக் காரியத்தைச் செய்வதென்றாலும் ஏதாவது ஒரு திசையை நோக்கித் தான் செய்ய முடியும். எந்தத் திசையையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. திசையை நோக்குதல் என்பதை தவிர்த்துக் கொள்ளவே முடியாது.

ஒரே இறைவனை வணங்கும் முஸ்லிம்கள் ஆளுக்கொரு திசையில் வணங்கினால் அது ஒரு ஒழுங்குடையதாக ஆகாது. எல்லாவற்றிலும் ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூட ஒரு குறிப்பிட்ட திசைக்கு முக்கியத்துவம் வராமல் பார்த்துக் கொண்டது.

உலகிலேயே முதன் முதலில் ஒரே இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட கஃபா எனும் ஆலயத்தை அனைவரும் நோக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டது. கஃபாவுக்கு மேற்கே உள்ளவர்கள் கிழக்கு நோக்கியும், கஃபாவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்கு நோக்கியும் தொழுவது இதனால் தான்.

இந்தியா, கஃபாவுக்கு கிழக்கே உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி இறைவனை வணங்குகின்றனர். கஃபாவின் அருகிலே இருப்பவர்கள் கஃபாவை நான்கு திசைகளில் எந்தத் திசையிலிருந்தும் நோக்கித் தொழுவதும் இதே காரணத்தினால் தான். முஸ்லிம்கள் குறிப்பிட்ட எந்தத் திசையையும் வணங்குவதில்லை என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

அப்படியானால், கஃபாவை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று சொல்லலாமா? என்று சிலருக்குத் தோன்றலாம். பல காரணங்களால் அவ்வாறு கருதுவது தவறானதாகும்.

கஃபாவை நோக்கித் தொழும் போது ‘அல்லாஹுஅக்பர்’ அல்லாஹ் பெரியவன் என்று கூறிக்கொண்டு தொழுகின்றனர். கஃபாவை வணங்கவில்லை, அல்லாஹ்வைத் தான் வணங்குகின்றோம் என்று முஸ்லிம்களே தெளிவாக அறிவித்து விட்டபின் கஃபாவை வணங்குவதாகக் கூற முடியாது, இது முதல் காரணம்.

எதையாவது முன்னோக்காமல் எதையும் செய்வது சாத்தியப்படாது என்பதை முதலிலேயே நாம் விளக்கினோம். கஃபாவை விடுத்து வேறு எதனை முன்னோக்குமாறு கூறியிருந்தாலும் அங்கேயும் இந்தக் கேள்வி பிறக்கும். அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் நோக்குங்கள் என்று கூறினால் ஒரு பள்ளியிலேயே ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொள்ளும் ஒழுங்கு கெட்ட நிலை ஏற்படும். எதையாவது முன்னோக்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவே முடியாது என்பது இரண்டாவது காரணம்.

கிழக்கு மேற்கு யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உண்டு. அல்லாஹ் தாராளமுடையவன் என்ற மேற்கண்ட வசனத்தில் தெளிவாக மறுத்துரைத்திருப்பது மூன்றாவது காரணம்.

அதாவது இறைவன் கஃபாவிற்குள்ளேயோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட திசையிலோ இருக்கவில்லை. நீங்கள் எங்கு நோக்கினும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு என்று இறைவன் கூறுவதன் மூலம் கஃபாவை நோக்கி வணங்குவது கஃபாவுக்குள் இறைவன் இருக்கிறான் என்பதற்காக அல்ல. அல்லது கஃபாவே இறைவன் என்பதற்காகவும் அல்ல, என்பதைத் தெளிவாக அறிவிக்கிறான்.

இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை இஸ்லாத்தின் கூற்றிலிருந்து விளங்க வேண்டுமேயல்லாது அவரவரின் சொந்தக் கற்பனையின் படி அதை விளங்குவது முறையானதன்று. இஸ்லாத்திற்கு மட்டுமின்றி எந்த மதத்தின் கருத்தையும் அம்மதத்தின் ஆதார நூலிலிருந்து விளங்குவதே முறையாகும்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி ஒழுங்கு காக்க வேண்டுமென்பதாலும், ஏதேனும் ஒன்றை முன்னோக்குவது தவிர்க்க இயலாத ஒன்று என்ற காரணத்தினாலும், ஒரே இறைவனை வணங்குவதற்காக உலகில் எழுப்பப்பட்ட முதல் ஆலயமாக கஃபா இருப்பதாலும் தான் கஃபாவை முன்னோக்குமாறு இஸ்லாம் கட்டளையிட்டது. அதுவே இறைவன் என்பதற்காகவோ அல்லது அதற்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதற்காகவோ முன்னோக்குவதற்கு கஃபா தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவான முறையில் தெரிவிக்கின்றது.

இதனால் தான் பிரயாணத்தில் செல்லும் போது வாகனம் எத்திசையில் செல்கின்றதோ வாகனத்தில் இருந்து கொண்டு அத்திசையை நோக்கி நபியவர்கள் உபரித் தொழுகைகளைத் தொழுதுள்ளனர். இவையாவும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற ஒரு கடவுளைத் தவிர ஏதேனும் திசையையோ, கட்டடத்தையோ வணங்குவதில்லை, வணங்கவும் மாட்டார்கள், வணங்கவும் கூடாது என்பதை அறிவிக்கின்றன.