‘அல்லாஹ் (தனக்கு) ஒரு புதல்வனை ஏற்படுத்திக் கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர். (இத்தகைய பலவீனங்களை விட்டும்) அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கு அடிபணிகின்றன.’ (அல்குர்ஆன் 2:116)

கடவுளுக்கு மனைவியும் மக்களும் இருப்பதாக பல மதங்கள் நம்புகின்றன. சில மதங்கள் இதையே பிரதான கொள்கையாகக் கொண்டுள்ளன. ஏசுவைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவ மதம் நம்புவது அனைவரும் அறிந்ததாகும்.

தங்களின் இந்த நம்பிக்கையைத் தங்களுடன் மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களை விமர்சனம் செய்யும் அவசியம் நமக்கு இல்லை. தங்களின் இந்த நம்பிக்கையை நியாயப்படுத்தி முஸ்லிம்கள் மத்தியிலும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடவுளுக்கு ஒரு மகன் இருக்க முடியும் என்பதற்கான நியாயமான காரணங்களை முன் வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்தால் அதையும் கூட நாம் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்.

ஆனால் அவர்களின் பிரச்சாரம் விஷமத்தனமாக அமைந்துள்ளதால் நாம் அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏசுவை கடவுளின் குமாரர் என்று குர்ஆனே ஒப்புக் கொள்வதாக பிரசுரங்களில் அவர்கள் விஷம் கக்கி வருகின்றனர். எனவே இது பற்றி விரிவாக நாம் அலச வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

ஏசுவை கடவுனின் குமாரர் என்று நிரூபிப்பதென்றால் ஏசுவின் தாயாரை கடவுளின் மனைவி என்று சொல்லியாக வேண்டும். குர்ஆனிலிருந்தே அவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரத்தைக் கேளுங்கள்!

‘அவளுடைய இறைவன் அவளை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவளை அழகிய முறையில் வளரச் செய்தான்.’ (அல்குர்ஆன் 3:37)

‘ஒரு பெண்மணியை கடவுள் ஏற்றுக் கொண்டான் என்றால் தனது மனைவியாக ஏற்றுக் கொண்டான் என்பதே அர்த்தமாகும். மேரி எனும் மர்யமை கடவுளே ஏற்றுக் கொண்டதாக கூறுவதால் ஏசு கடவுளின் குமாரர் என்பதை இஸ்லாமும் ஒப்புக் கொள்கிறது.’ இது அவர்களின் விஷமப் பிரச்சாரம்.

ஏசுவின் தாயாரை இறைவன் ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் கூறுவது உண்மையே. மனைவியாக ஏற்றுக் கொண்டான் என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை. அதற்கு முந்தைய வசனங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.

இம்ரானுடைய மனைவி – அதாவது மேரியின் தாயார் கருவுற்றிருக்கும் போது கருவில் வளரும் குழந்தையை இறைப்பணிக்காக நேர்ச்சை செய்து கொள்கிறார். கருவில் வளர்வது ஆண் குழந்தை என்ற எண்ணத்திலேயே இவ்வாறு நேர்ச்சை செய்கிறார். நேர்ச்சை செய்ததும் இறைப்பணிக்காக ஏற்றுக் கொள்ளுமாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். பெண் குழந்தை பிறந்ததும் சஞ்சலப்படுகிறார். இந்த விபரங்களை இதற்கு முந்தைய வசனங்கள் கூறுகின்றன.

இம்ரானுடைய மனைவி, ‘என் இறைவா! நான் என் வயிற்றில் உள்ளதை உனக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். எனவே என்னிடமிருந்து (அதை) ஏற்பாயாக! நிச்சயமாக நீயே யாவற்றையும் செவியுறுகிறவனாகவும் முற்றும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்’ என்று கூறியதை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 3:35)

அதனை அவள் பெற்றெடுத்த போது, இறைவா பெண்ணாக இதைப் பெற்று விட்டேனே என்றார். (அல்குர்ஆன் 3:36)

இறைப்பணிக்காக தன் குழந்தையை ஏற்றுக் கொள்ளுமாறு மேரியின் தாயார் கேட்டுக் கொண்டதனால் நான் அவளை அப்பணிக்காக ஏற்றுக் கொண்டதாக இறைவன் கூறுகிறான். சாதாரண அறிவு உள்ளவனுக்கும் விளங்கக் கூடிய இந்த உண்மை சில திருச்சபைகளுக்கு விளங்காமல் போனது ஆச்சரியமே.

மேலும் இறைவன் மேரியை ஏற்றுக் கொள்வதாகக் கூறியது மேரியின் பருவ வயதில் அல்ல. மேரி அன்னையாகும் போதும் அல்ல. மாறாக கைக்குழந்தையாக இருக்கும் போது ஏற்றுக் கொண்டதாகவே முந்தைய வசனங்களிலிருந்து அறிகிறோம்.

வேண்டுமென்றே விஷமம் செய்யும் நோக்கத்திலேயே இவர்கள் தரங்கெட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஏசு இறைவனின் வார்த்தையாவார், மேலும் அவனிமிருந்து (தோன்றிய) ஒரு உயிருமாவார்.’ (அல்குர்ஆன் 5:151)

இந்த வசனத்தையும் அவர்கள் தங்களின் விஷமத்தனமாக பிரச்சாரத்துக்கு சான்றாக எடுத்து வைக்கின்றனர். இறைவனது வார்த்தை என்றும் அவனது உயிர் என்றும் கூறப்படுவதால் இறைமகன் என்பதைத் திருக்குர்ஆன் ஒப்புக் கொள்வதாக அவர்கள் குழப்புகின்றனர்.

திட்டமிட்டு வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதற்கு இந்த வசனத்தை அவர்கள் ஆதாரமாகக் காட்டுவதே போதிய சான்றாகும். 5:171 வசனம் கிறித்தவர்களின் முக்கடவுள் கொள்கையை மறுத்து அருள்ப்பட்டதாகும். அதில் பெரும் பகுதியை மறைத்து விட்டு ஒரே ஒரு வரியை மட்டும் வெளியிட்டு அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்ற முயல்கின்றனர்.

‘வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து போகாதீர்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர எதனையும் கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈஸா அல்லாஹ்வின் தூதராவார். மேலும் அவனது வார்த்தையுமாவார். அதை மர்யமின் பால் அவன் சேர்ப்பித்தான். மேலும் அவனிலிருந்து ஒரு உயிராகவும் இருக்கிறார். எனவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். (கர்த்தர், ஏசு, மேரி என்று) மூவர் எனக் கூறாதீர்கள். (இதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். அல்லாஹ்தான் ஒரே கடவுளாவான். அவனுக்கு சந்ததி இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்கள் பூமியிலுள்ள யாவும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்றுக் கொள்ள இறைவன் போதுமானவன்.’ (அல்குர்ஆன் 5:171)

இது தான் முழு வசனமாகும். கடவுளுக்கு மகனில்லை என்று தெளிவாக அறிவிக்கும் பகுதியையும், பிதா, சுதன், பரிசுத்தஆவி எனும் முக்கடவுள் கொள்கையை கண்டிக்கும் பகுதியையும் மறைத்து விட்டு இவர்கள் செய்துள்ள மோசடி மகா மோசமானது.

பொய்யான மார்க்கத்திலிருப்பவர்கள் தங்கள் வேதங்களில் கைவரிசையைக் காட்டியோர் அவர்களின் வேதத்தோடு இதை நிறுத்திக் கொள்வதே அவர்களுக்கு நல்லதாகும்.

இத்தகைய விஷமிகளுக்காகத்தான் தலையில் அடித்தாற் போல் தனக்கு மகன் எவரும் இல்லை என்று ஆரம்பமாக நாம் வெளியிட்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.

அப்படியானால் ஏசு இறைவனின் வார்த்தை என்பதன் பொருள் என்ன, மனிதன் எப்படி உருவாகின்றானோ அதற்கு மாற்றமான முறையில் இறைவனின் கட்டளைப் பிரகாரம் உருவானவர் என்பதே அதன் பொருளாகும். இதைத் திருக்குர்ஆன் மற்றோர் இடத்தில் தெளிவாகக் கூறுகின்றது.

அல்லாஹ்விடத்தில் ஈஸாவுக்கு உதாரணமானது, ஆதமுடைய உதாரணம் போன்றதாகும். அவரை மண்ணிலிருந்து படைத்து ஆகுக என்றான். அவர் ஆகிவிட்டார். (அல்குர்ஆன் 3:59)

இந்த உண்மையை பைபிளும் கூறுகின்றது. ஆதாமையும் கடவுளின் குமாரர் என்று இவர்கள் கூறவில்லையே அது ஏன்? ஏசுவுக்காவது தந்தை தான் இல்லை. அவருக்கு ஒரு தாய் இருந்தார். ஆனால் ஆதாமுக்கோ தாயும் தந்தையும் இருக்க வில்லை. ஒருவர் இறைமகனாக இருக்க முடியும் என்றால் ஆதாமுக்கே அதிக தகுதி இருக்கின்றது.

‘இறைவனது உயிராகவும் இருக்கிறார்’ என்பதன் பொருள் என்ன? இறைவனுக்கு சொந்தமான உயிர் என்பதே இதன் பொருளாகும். இறைவனின் ஒருபகுதி என்பது இதன் பொருளன்று.

ஆதமை நான் உருவாக்கி எனது உயிரிலிருந்து அவரில் ஊதும் போது நீங்கள் ஸஜ்தாவில் விழுங்கள் (அல்குர்ஆன் 15:39)

ஏசுவுக்குப் பயன்படுத்திய அதே ரூஹ் என்ற பதத்தையே இங்கேயும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். ஆதாமும் கடவுனின் மூத்த குமாரர் என்று கிறித்தவர்கள் சொல்வதில்லையே அது ஏன்? விளக்குவார்களா?

இத்தகைய விஷமப் பிரச்சாரம் செய்யப்படும் என்பதை முன்னமே அறிந்து வைத்துள்ள இறைவன் மிகத் தெளிவாக தனக்கு மகனில்லை என்று பல இடங்களில் பிரகடனம் செய்து விட்டான்.

2:116 வசனம் இத்தகைய தெளிவான பிரகடனங்களில் ஒன்றாகும். அனைத்தும் அவனுக்கு உடமையாக இருக்கும் போது அவனுக்கு எப்படி மகனிருக்க முடியும் என்று இங்கே வினவுகிறான்.

அவனுக்கு எப்படி மகனிருக்க முடியும்? அவனுக்கு மனைவியும் கிடையாதே? அனைத்தையும் அவனே படைத்துள்ளான். (6:101) ஏசு உட்பட அனைவரும் அவனால் படைக்கப்பட்டவர்கள் எனும் போது ஏசு மட்டும் இறைமகனாக எப்படி ஆக முடியும்?

அவர்கள் இறைவனுக்கு சந்ததியைக் கற்பனை செய்து கொண்டார்கள். இறைவனுக்கு சந்ததியை ஏற்படுத்திக் கொள்ள எந்த தேவையுமில்லை. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைவரும் அவனிடம் அடிமைகளாகவே வந்தாக வேண்டும் என்று (19:88) இல் கூறுகிறான்.

அழிவும் மரணமும் யாருக்கு உள்ளதோ, யாருக்கு பலவீனம் உள்ளதோ அவருக்குத் தான் வாரிசு தேவை. முதிர்வயதில் ஒத்துழைக்க சந்ததி தேவை. என்றும் நிலைத்திருக்கக் கூடிய எந்தவித பலவீனமும் இல்லாத கடவுளுக்கு சந்ததி அவசியமில்லை என்பதை விளக்குவதுடன் அனைவரும் தனது அடிமைகளே எனவும் தெளிவாக அறிவிக்கிறான். பெற்ற பிள்ளையை எவரேனும் தனது அடிமை என்று கூறுவார்களா?

‘மஸீஹ் (எனும் ஏசு) அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதற்கு மறுக்க வில்லை’ (அல்குர்ஆன் 4:172)

மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும் மற்றும் பூமியில் உள்ள அனைவரையும் இறைவன் அழிக்க நாடிவிட்டால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவேனும் (காப்பாற்ற) உரிமை படைத்தவர் யார்? (அல்குர்ஆன் 5:17)

ஏசுவை மறுமை நாளில் நிறுத்தி விசாரிக்க விருப்பதாகவும் இறைவன் (5:116) இல் கூறுகிறான்.

இவையாவும் ஏசு ஒரு நல்லடியார், இறைத்தூதர் என்பதைத் தான் கூறுகின்றன. கர்த்தரின் குமாரர் என்பதைத் தெளிவாக மறுக்கின்றன. இஸ்லாத்தின் இந்தத் தெளிவான கொள்கையை அப்பாவி முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர். கிறித்தவர்களின் தரங்கெட்ட விஷமப் பிரச்சாரம் எந்த முஸ்லிமிடமும் எடுபடாது என்பதை அவர்கள் உணர்வார்களா?