‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள், மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர், எனினும் அதனை நீங்கள் உணர மாட்டீர்கள்’. (அல்குர்ஆன் 2:154)

முஸ்லிம்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இதே கருத்தை 3:169 வசனமும் கூறுகின்றது. அந்த வசனத்தையும் பார்ப்போம்.

‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்ற எண்ண வேண்டாம். மாறாக அவர்கள் தன் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’. (அல்குர்ஆன் 3:169,170)

இந்த வசனங்கள் எதற்காக அருளப்பட்டது? சிலரை உயிர் தியாகிகள் என்று முடிவு செய்து அவர்களைக் கொண்டாடுவதற்காகவா? அவர்களை வழிபடுவதற்காகவா? நிச்சயமாக இல்லை.

முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை இறைவன் பாதையில் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது, உயிர் போய்விடுமே என்று அஞ்சி கோழைகளாகக் கூடாது, வீரமிக்கவர்களாக வாழ வேண்டும். அறப்போரில் உயிர் துறப்பது மகத்தான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்று ஆர்வமூட்டவே இவ்வசனங்கள் இறைவனால் அருளப்பட்டன.

இந்த நோக்கத்தை புறந்தள்ளி விட்டு சமாதி வழிபாட்டுக்கு ஆதரவாக இந்த வசனம் அருளப்பட்டதாக முஸ்லிம் சமுதாயம் நம்பி விட்டது. இந்த வசனம் அருளப்பட்ட நோக்கம் இறந்தவர்களைக் கொண்டாடுவதற்காக அல்ல! இறப்பதற்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே என்பதை 3:169 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

‘அல்லாஹ் தன் அருட்கொடையை அவர்களுக்கு வழங்கியதற்காக மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்களுடன் வந்து சேராத (அதாவது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்) மக்களுக்கு, ‘அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ என்று நற்செய்தி கூறுகின்றனர்’. (அல்குர்ஆன் 3:170)

இவ்வுலகில் உயிரைத் தியாகம் செய்யாமல் வாழும் மக்கள் உயிரைத் தியாகம் செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை, பயப்படத் தேவையில்லை என்று இவ்வசனம் ஆர்வமூட்ட வில்லையா?

‘அல்லாஹ்வின் அருட்பேறுகளைக் கொண்டும் விசுவாசிகளின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்றும் அவர்கள் நற்செய்தி கூறுகின்றனர்’. (அல்குர்ஆன் 3:171)

உயிர் தியாகம் செய்பவர்களுக்கு மகத்தான கூலி உண்டு. அவர்களின் தியாகம் வீணாவதில்லை என்று இவ்வசனம் வீரத்தை ஊட்டவில்லையா?

‘அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு காயம் ஏற்பட்ட பின்பும் அல்லாஹ்வின் அழைப்பையும் (அவனது) தூதரின் அழைப்பையும் ஏற்றவர்கள். அவர்களில் (இத்தகைய) நல்லறம் செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டவர்களுக்கு மகத்தான கூலி உண்டு’. (அல்குர்ஆன் 3:172)

முந்தைய போரில் காயமும் துன்பமும் ஏற்பட்ட பிறகும் இறைவனின் கட்டளையை ஏற்று உயிர் தியாகத்துக்கு முன்வந்தவர்கள். இத்தகையோருக்கு மகத்தான கூலி உண்டு என்ற வசனம் துன்பங்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்று சொல்லவில்லையா?

‘இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் நிச்சயமாக மனிதர்கள் உங்களை எதிர்ப்பதற்காக திரண்டுள்ளனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று சிலபேர் அவர்களிடம் கூறிய போது, அவர்களின் விசுவாசம் அதிகமானது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். பொறுப்பாளர்களில் அவன் சிறந்தவன் என்று கூறினார்கள்.’ (அல்குர்ஆன் 3:173)

மனிதக் கூட்டத்திற்கு, பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அஞ்சி கோழைகளாகி விடாமல் உறுதியுடன் அவர்கள் போராடினார்கள் என்பது வீரத்தை ஊட்டும் விதமாக அமைந்திருக்க வில்லையா?

‘இவ்வாறு கூறுவதன் மூலம் ஷைத்தான் தனது நண்பர்களைப் பயமுறுத்துகிறான், நீங்கள் உண்மையான மூமின்களாக இருந்தால் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்! எனக்கே அஞ்சுங்கள்!’. (அல்குர்ஆன் 3:175)

இந்த வசனமும் அதே கருத்தைக் கூறவில்லையா? மேற்கண்ட வசனத்தைத் தொடர்ந்து வரும் இந்த வசனங்கள் யாவுமே முஸ்லிம்கள் அனைவரும் கோழைத்தனத்தை விட்டொழிக்க வேண்டும் என்று போதிக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் நல்லடியார்களை வழிபடுவதற்கான அங்கீகாரமாக இதை முஸ்லிம்கள் கருதியது தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளுக்கு முதல் காரணம்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்ற சொல்லாதீர்கள், அவ்வாறு எண்ணாதீர்கள் என்பது சாவுக்கு அஞ்சக் கூடாது என்ற கருத்திலேயே அருளப்பட்டுள்ளது. துன்பத்தைக் கண்டு கோழைகளாகி விடக் கூடாது என்பதற்காகவே அருளப்பட்டது.

இதே போல் 2:154 வசனத்துக்கு அடுத்த வசனத்தைச் சிந்தித்தாலும் இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

‘ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், உயிர்கள், பொருட்கள், பழங்கள் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலமும் உங்களை நாம் சோதிப்போம். (இவற்றை) சகித்துக் கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் (துவண்டு விடாமல்) நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.’ (2:155,156)

உயிரிழப்பு,பொருளிழப்பு என்பதற்கெல்லாம் கலங்கி விடக் கூடாது என்பதையும், நாமே இறைவனுக்குரியவர்கள், இறைவனிடம் எப்படியும் திரும்பிச் சென்றாக வேண்டியவர்கள், இங்கேயே நிரந்தரமாக இருந்து விடும் வரம் பெற்றவர்கள் இல்லை என்பதையெல்லாம் இவ்வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சமுதாயம் தவறாகப் புரிந்து வைத்திருக்கும் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக எந்தப் போதனையைச் செய்வதற்காக அருளப்பட்டன என்பதை விளக்குகின்றன.

முஸ்லிம் சமுதாயம் வீரத்துடனும் எதையும் இறைவனுக்காக தியாகம் செய்யும் உணர்வுடனும் திகழ வேண்டும் என்பதைப் பல வசனங்களும் நபிமொழிகளும் விளக்குகின்றன.

அவற்றையெல்லாம் இந்த சமுதாயம் அறிந்து கொள்வது அவசியமாகும்.