‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள், மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர், எனினும் அதனை நீங்கள் உணர மாட்டீர்கள்’. (அல்குர்ஆன் 2:154)

இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தை சிந்தித்தால் உயிர் தியாகிகளின் நிலை எவ்வளவு உயர்வானது என்பதையும், உயிரை தியாகம் செய்யும் அவசியம் ஏற்படும் போது, அதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதையும் நாம் அறியலாம்.

‘அல்லாஹவின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்ற எண்ணாதீர்கள். மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர்’ என்ற வசனம் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிம் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவையின் கூடுகளுக்குள் இருக்கும். அவற்றுக்கென அர்ஷில் தொங்கவிடப்பட்ட அலங்கார விளக்குகள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறெல்லாம் சுற்றி வரும் பின்னர் அந்த விளக்குகளில் ஒதுங்கி விடும். அப்போது இறைவன் அவர்களுக்கு காட்சி தந்து, ‘நீங்கள் எதையேனும் விரும்புகிறீர்களா?’ என்று கேட்பான். ‘நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் சுற்றி வரும் போது நாங்கள் எதை விரும்பப் போகிறோம்’ என்று அவர்கள் பதில் கூறுவர். இவ்வாறு மூன்று தடவை இறைவன் அவர்களிடம் கேட்பான். தாங்கள் எதையேனும் கேட்காமல் இறைவன் விட மாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டு, ‘எங்கள் இறைவா! எங்களது உயிர்களை எங்கள் உடல் கூட்டுக்குள் நீ திரும்பத்தர வேண்டும். இன்னொரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும்’ என்று கூறுவார்கள். அவர்களுக்கு தேவை எதுவும் இல்லை என்று இறைவன் அறிந்து அவர்களை விட்டு விடுவான் என்று விளக்கம் அளித்தார்கள்’. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: முஸ்லிம்)

இறைவனுக்காக உயிரை அர்ப்பணம் செய்வதனால் கிடைக்கும் மகத்தான மறுமை பேறையும், உயிர் தியாகிகளேயானாலும் அவர்கள் இவ்வுலகுக்கு இன்னொரு முறை வர முடியாது என்பதையும், அந்த ஹதீஸ் விளக்குவதுடன் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

‘உஹதுப்போரில் உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்ட போது, அவர்களின் உயிர்களை பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் இறைவன் அமைத்து விட்டான். சுவர்க்கத்து நதிகளில் தாகம் தீர்த்து, அதன் கனிகளை உண்பார்கள். அர்ஷின் நிழலில் தொங்கவிடப்பட்ட தங்க விளக்குகளில் ஒதுங்குவார்கள். தங்களுக்குக் கிடைத்த சிறந்த உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் அவர்கள் கண்டு, ‘நாங்கள் சுவர்க்கத்தில் உயிருடன் இருப்பதை நமது சகோதரர்களுக்கு யார் எடுத்துச் சொல்வர்?, (அவ்வாறு சொல்லப்பட்டால்) அவர்கள் உலகப்பற்றிலிருந்து விடுபடுவார்கள். போர் நடக்கும் போது தயங்க மாட்டார்கள்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ், ‘உங்கள் சார்பாக நான் அவர்களுக்கு இதை அறிவிக்கின்றேன்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள் என்ற வசனத்தை அருளினான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சுவர்க்கத்தில், இன்பம் அனுபவித்துக் கொண்டு என்றென்றும் உயிருடன் உள்ளனர் என்பதே இவ்வசனத்தின் விளக்கம் என்பதை இந்த ஹதீஸும் விளக்குகின்றது.

நல்லடியார்களிடம் போய் பிரார்த்தனை செய்யக் கூடியவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக இந்த வசனத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வசனமோ ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் உயர்களை தியாகம் செய்ய வேண்டுமென்று ஆர்வமூட்ட அருளப்பட்டது. அவர்களுக்குக் கிடைத்த பாக்கியங்களை அறிந்து அந்த பாக்கியங்களை அடைவதற்கு முயல வேண்டும் என்பதே இவ்வசனம் அருளப்பட்ட நோக்கமாகும்.

‘உயிரோடு இருக்கிறார்கள்’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு தவறான முடிவுக்கு வருபவர்கள் இந்த வசனத்தை சிந்திக்க வேண்டிய வகையில் சிந்தித்தால், இதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய பொன் மொழிகளை சிந்தித்தால் தங்களின் தவறான முடிவிலிருந்து விலகிக் கொள்வார்கள்.

‘அவர்கள் உயிரோடு உள்ளனர்’ என்று இறைவன் கூறி விட்டு, ‘தம் இறைவனிடம்’ (இன்த ரப்பிஹிம்) எனவும் கூறுகிறான். அதாவது அவர்கள் உயிரோடு உள்ளனர் என்றால் உங்களிடத்தில் உயிரோடு இல்லை. மாறாக இறைவனைப் பொருத்த வரை அவர்கள் உயிரோடு உள்ளனர். ‘தம் இறைவனித்தில்’ என்று இறைவன் கூறுவதை இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

மற்றொரு வசனத்தில், ‘அவர்கள் உயிருடன் உள்ளனர், எனினும் அதை நீங்கள் உணர மாட்டீர்கள்’ என்றும் இறைவன் கூறுகிறான். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அர்த்தத்தில் அவர்கள் உயிரோடு இருந்தால் நாம் அதனை உணர முடியும். நீங்கள் உணர மாட்டீர்கள் என்று சேர்த்துக் கூறியதன் மூலம் அவர்கள் நாம் புரிந்து வைத்திருக்கின்ற அர்த்தத்தில் உயிருடன் இல்லை என்று உணரலாம். இதையும் அவர்கள் சிந்திக்கத் தவிறி விட்டனர்.

‘மனித உடலுடன் அவர்கள் உயிருடன் இல்லை, அவர்களின் உயிர்கள் பறவை வடிவில் சுவர்க்கத்தில் சுற்றித்திரிகின்றன’ என்று நபியவர்கள் விளக்கியதன் மூலம் எந்த விதமாக உயிருடன் உள்ளனர் என்பது தெளிவாகின்றது. இதையும அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சுவர்க்கத்தில் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கியங்களை இவ்வுலகுக்குச் சொல்ல அவர்கள் விரும்புகிறார்கள். யார் சொல்ல முடியும் என்று நம்பிக்கையிழந்து கூறுகிறார்கள். ஒரு செய்தியைச் சொல்வதற்காகக் கூட இவ்வுலகத்துடன் அவர்களால் நேரடியாக எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள இயலவில்லை! இவ்வுலகத்துடன் அவர்களால் நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது என்பதையும் சிந்திக்க தவறி விட்டனர்.

இவர்கள் சுவர்க்கத்தில் உயிருடன் உள்ளனர் என்று நபி (ஸல்) விளக்கம் தருகின்றனர். சுவர்க்கத்தில் நுழைந்தவர்கள் அதை விட்டும் தங்கள் கவனத்தை திருப்ப மாட்டார்கள் (அல்குர்ஆன் 18:108) என்று அல்லாஹ் கூறுகிறான். சுவர்க்கத்து இன்பத்தில் லயித்திருப்பவர்கள் எப்படி நமது கோரிக்கைகளை செவிமடுப்பார்கள் என்பதையும் சிந்திக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் எதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லவில்லையோ அதற்கு இந்த வசனத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வசனம் வலியுறுத்தும் வீரம், தியாகம், இறை வழியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த வசனத்திலிருந்து இந்த சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் உணர்கிறார்களில்லை.

இந்த வசனத்தின் விளக்கமாக நபியவர்கள் உயிர் தியாகம் செய்வது பற்றி வலியுறுத்திய ஹதீஸ்களை இத்தகையவர்களுக்கு முன் வைக்கிறோம்.

‘என்மீது கொண்ட நம்பிக்கை, என் தூதர்களை உண்மைப் படுத்துவது ஆகிய இரண்டு காரணங்களுக்காக யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால், அவர் வெற்றிப் பொருட்களுடன் திரும்புவார் அல்லது அவர சுவர்க்கத்தில் நான் நுழையச் செய்கிறேன் என்று அல்லாஹ் பொறுப்பேற்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் பாதையில் நான் கொல்லப்பட்டு, பின்னர் மீண்டும் உயிரளிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, மீண்டும் உயிரளிக்கப்பட்டு, பின்னரும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிரளிக்கப்பட்டு, பிறகு கொல்லப்படுவதை நான் விரும்புகிறேன் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் பாதையில் தனது குதிரையின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு, திடுக்கத்தையோ, அடக்குமுறையையோ செவியுற்று உடன் அதன் முதுகில் ஏறி பறந்து சென்று மரணமே ஏற்படும் என்ற நிலையிலும் கொல்லப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்பவன் மனிதர்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும் என்பதும் நபி மொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்த பாதங்களை நரக நெருப்பு தீண்டாது – நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

சுவர்க்கத்தில் நுழையும் எவரும் இப்பூமியில் உள்ள அனைத்தையும் அவருக்கு வழங்குவதாக இருந்தாலும் இப்பூமிக்கு வர விரும்ப மாட்டார். உயிர் தியாகி (ஷஹீத்) மட்டும் அதற்குக் கிடைக்கும் மதிப்பை உணர்ந்து விட்டதால் இவ்வுலகுக்குத் திரும்ப வந்து பத்து தடவை கொல்லப்படுவதை விரும்புவார் – நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இப்படி ஏராளமான ஹதீஸ்கள் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்பதை, சமுதாயத்தையும், மார்க்கத்தையும் காப்பதற்காக போராடுவதை வலியுறுத்துகின்றன. இவ்வாறு ஆர்வமூட்டும் வசனங்களே, அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற வசனங்கள்.

இதை உணர்ந்து அல்லாஹ்வின் அறப்போர் செய்ய முன்வருபவர்களே இந்த வசனங்களை சரியாகப் புரிந்து கொண்டவர்கள். அவர்களே இவ்வசனங்களுக்கு செயல் வடிவம் தந்தவர்கள். இத்தகைய தியாகத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோமாக.