
‘அல்லாஹ்வையன்றி (அவனுக்கு) நிகரானவர்களைக் கற்பனை செய்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிக்கிறார்கள். (ஆயினும்) விசுவாசம் கொண்டவர்கள் அல்லாஹ்வை (அதை விடவும்) அதிகமாக நேசிக்கிறார்கள். (இவ்வாறு) அக்கிரமம் புரிந்தோர் (அல்லாஹ்வின்) வேதனையைக் காணும் போது எல்லா வல்லமையும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், நிச்சயமாக இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் அறிந்து கொள்வார்களானால் (இவ்வாறு இறைவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்). (அல்குர்ஆன் 2:165)
‘அந்த நேரத்தில் பின்பற்றப்பட்டவர்கள் பின்பற்றியவர்களை விட்டும் விலகிக் கொள்வார்கள். வேதனையை நேரடியாகவும் காண்பார்கள். (அவர்களிடையே இருந்து வந்த) உறவுகளும் முறிந்து விடும்’. (அல்குர்ஆன் 2:166)
‘பின்பற்றிய மக்கள், எங்களுக்கு (உலகுக்கு) திரும்பச் செல்லுதல் இருக்குமானால் எங்களை விட்டும் இவர்கள் விலகிக் கொண்டது போல் நாங்களும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோம் என்பர். இவ்வாறே அவர்களின் அமல்களை ஏமாற்றமளிப்பவையாக அவர்களுக்கு இறைவன் காட்டுகிறான். இவர்கள் நரகிலிருந்து வெளியேறக் கூடியவர்கள் அல்லர்’. (அல்குர்ஆன் 2:167)
இந்த மூன்று வசனங்களும் விளக்கம் தேவைப்படாத அளவுக்கு மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளன. மூமின்களின் உள்ளங்கள் நடுங்கும் அளவுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் இவ்வசனத்தில் அடங்கியுள்ளன.
தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலானவர்களின் நடவடிக்கைகளை நாம் கவனித்தால் இந்த வசனங்கள் குர்ஆனில் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தே அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்களா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. எனவே இவ்வசனங்களைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது.
மனிதர்களில் சிலர் அல்லாஹ்வுக்கு கூட்டாளிகளைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுவதை நம்மவர்களின் நடைமுறையோடு பொருத்திப் பார்ப்போம்.
நம்மவர்களில் எவரும் அல்லாஹ்வுக்குச் சமமாக அவ்லியாக்களை நேசிப்பதாகக் கூறமாட்டார்கள். வாயளவில் அவர்கள் இவ்வாறு கூறாவிட்டாலும், அவர்களின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வை விட அதிகமான நேரம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை அறிய முடியும். அவர்களின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
பள்ளிவாசலில் ஒரு இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருப்பார். அதைச் சில நூறு பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சொற்பொழிவின் போது அல்லாஹ் என்ற திருநாமத்தைப் பலதடவை அவர் குறிப்பிடுவார். கேட்பவர்களிடம் அந்தத் திருநாமம் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. சொல்பவரிடம் கூட அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் அப்துல் காதிர் ஜீலானி என்ற பெயரை அந்த இமாம் குறிப்பிடுவார். இந்தப் பெயரைக் கேட்டவுடன் கேட்பவரின் உள்ளங்கள் பூரிப்படைகின்றன. அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அவர்களை அறியாமலே ‘கத்தஸல்லாஹுஸிர்ரஹு’ என்ற வார்த்தை அவர்களின் வாயிலிருந்து புறப்படுகின்றது. கேட்பவர்கள் மட்டுமின்றி சொல்லக்கூடிய இமாமும் அல்லாஹ் என்ற திருநாமத்துக்கு கொடுக்காத அழுத்தத்தை அப்துல்காதிர் என்ற பெயருக்குக் கொடுப்பார். சர்வ சாதாரணமாக இந்த சமுதாயத்தில் இதை நாம் காண முடிகிறது.
‘அல்லாஹ்வின் திருப்பெயர் மட்டும் கூறப்பட்டால் மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனையன்றி மற்றவர்களின் பெயர்கள் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்’. (அல்குர்ஆன் 39:45)
இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போன்று இவர்கள் நடந்து கொள்ளக் காரணம் இவர்களின் உள்ளம் அல்லாஹ்வை விட மற்றவர்களை அதிகம் மதிக்கிறது, அதிகம் நேகிக்கிறது என்பது தான்.
அல்லாஹ் தொழுகையை கடமையாக்கி இருக்கிறான் என்பதும், தொழுகைக்காக தினமும் ஐந்து முறை பள்ளி வாசலிலிருந்து அழைப்பு விடப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அழைக்கப்பட்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருவதைத் தவிர்க்கக் கூடியவன், அழைக்கப்படாமலே தர்காவுக்கு ஓடுகிறான். தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு இவனது உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வழங்கிய இடத்தை விட அதிக இடம் இருக்கிறது என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது.
துன்பங்கள் ஏற்படும் போது அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பிரார்த்திக்க கடமை பட்டவர்கள் ‘யாமுஹ்யித்தீனே!’ என்று அழைப்பதும் இதே காரணத்தினால் தான்.
இறைவனை விட மற்றவர்கள் மீது அதிக நேசம் கொண்ட இத்தகையவர்கள் படுபயங்கரமான விளைவுகளை எதிர் நோக்கியுள்ளனர் என்பதையும் இந்த வசனங்களில் இறைவன் பட்டியலிடுகிறான்.
1) அவர்கள் அக்கிரமக்காரர்களாக இறைவனால் கருதப்படுவார்கள்.
2) நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்து, அல்லாஹ்வின் வேதனையை அதுவும் கடுமையான வேதனையை அவர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
3) அன்றைய தினத்தில் எவரும் எதிர் கேள்வி கேட்க இயலாமல் நிற்பார்கள். எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே, அன்றைய தினம் இருக்கப் போவதையும் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்கள்.
4) இதைவிட முக்கியமான அம்சம், இவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்த இந்த நல்லடியார்கள் இவர்களைக் கைகழுவி விடுவார்கள். காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களிடையே யாதொரு உறவும் அன்றைய தினம் இருக்காது.
5) அவர்கள் செய்து வந்த ஏனைய நல்லறங்கள் யாவும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கமாட்டா. அவை அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஆகி விடும்.
6) இதனால் நரகத்தில் நுழைந்த அவர்கள் என்றென்றும் அதிலேயே தங்கி விடுவார்கள். ஒருபோதும் நரகிலிருந்து வெளியேற இயலாது.
இப்படி ஆறு வகையான இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மறுமையை நம்பக்கூடிய மக்களுக்கு இது கடுமையான எச்சரிக்கையாகும்.
இதில் கடைசி மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டும்.
எந்தப் பெரியார்களை இவர்கள் பெரிதும் நம்பி இந்த அக்கிரமம் புரிந்தார்களோ அந்தப் பெரியார்களே அவர்களைக் கைகழுவி விடுவார்கள் என்பதைப் பல இடங்களில் இறைவன் விரிவாகவும் விளக்குகின்றான்.
‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் தான் கூறினீரா?’ என்று இறைவன் கேட்பான். அதற்கு, ‘நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கு அறிபவன்’ என்று அவர் கூறுவார். ‘நீ எனக்கு கட்டளையிட்ட படி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களுடனிருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய்’ (அல்குர்ஆன் 5:117,118) என்றும் கூறுவார்.
ஈஸா நபியவர்களைப் பெரிதும் நம்பியிருந்தவர்கள் மறுமையில் ஈஸா நபியால் கைவிடப்படுவார்கள் என்று இங்கே இறைவன் கூறுகிறான். கிறித்தவர்கள் அடையும் இதே நிலையைத் தான் இறைவனை விட மற்றவர்களை நேசிப்பவர்கள் அடைவார்கள் என்றால் அது எவ்வளவு கடுமையான குற்றம் என்பது விளங்க வரும்.
‘நீங்கள் அல்லாஹ்வையன்றி எவரைப் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரம் இல்லை. நீங்கள் அவர்களால் பிரார்த்தனை செய்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். மேலும் மறுமை நாளில் நீங்கள் இணை வைத்ததையும் அவர்கள் மறுத்து விடுவார்கள்’. (அல்குர்ஆன் 35:14)
‘நாம் உங்களை முதன் முதலில் படைத்தது போன்று தனியே நம்மிடம் வந்துள்ளீர்கள். உங்களுக்கு நாம் வழங்கியவற்றை முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டார்கள். (இறைவனின்) கூட்டாளிகள் என நீங்கள் எண்ணிய – பரிந்துரையாளர்களை – உங்களுடன் நாம் காணவில்லையே! உங்களுக்கிடையே இருந்த உறவுகள் அறுந்து விட்டன. நீங்கள் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் தவறி விட்டன’. (என்று இறைவன் கூறுவான்) (அல்குர்ஆன் 6:94)
10:28 வசனத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஈஸா நபி போன்ற மிகப் பெரிய நல்லடியார்களேயானாலும் இத்தகையவர்களைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசித்தவர்கள் எவ்வளவு தான் நல்லறங்களை நிறைவேற்றினாலும் அந்த நல்லறங்களில் எதையும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவற்றுக்கு எந்தக் கூலியும் அவனால் வழங்கப்படாது எனவும் இறைவன் கூறுகிறான்.
‘உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால் நீங்கள் இணை வைத்தால் உங்கள் நல்லறங்கள் அழியும். நஷ்டமடைந்தவர்களில் நீங்களும் ஆவீர்கள்’. (அல்குர்ஆன் 39:65)
‘அவர்கள் இணை வைப்பார்களானால் அவர்கள் செய்த நல்லறங்கள் அழிந்து விடும்’. (அல்குர்ஆன் 6:88)
இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசிப்பதும் பச்சையான இணை வைத்தல் தான் என்பதும் இணை வைப்பதால் ஏற்படும் விளைவுகள் இதனாலும் ஏற்படும் என்பதும் தெளிவாகின்றது.
இவ்வாறு நடந்து கொண்டவர்கள் நரகிற்குச் சென்று விட்டு ஏதோ ஒரு சமயத்தில் சுவர்க்கத்தை அடைய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அவர்கள் நரகை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று தெளிவாக இங்கே குறிப்பிடுகிறான் இறைவன்.
‘யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விட்டான்’ (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அது அல்லாத பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான்’. (அல்குர்ஆன் 4:48,115)
இறைவனின் மன்னிப்பை அறவே பெற முடியாத துர்பாக்கியசாலிகளாக இவர்கள் திகழ்வார்கள் என்று இந்த வசனங்களும் தெளிவாக விளக்குகின்றன. மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் இந்த அக்கிரமத்திலிருந்து நாம் விடுபடுவோமாக!