‘இவ்வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவு படுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிக்கக்கூடியவர்களும் சபிக்கின்றனர் (மறைத்த குற்றத்திற்காக)’. (அல்குர்ஆன் 2:159)

‘மன்னிப்புக் கோரித் திருந்தி (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியவர்களைத் தவிர, இவர்களின் மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மன்னித்து அருள் புரிபவன்’. (அல்குர்ஆன் 2:160)

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காக இறைவன் ஏராளமான நபிமார்களை இவ்வுலகுக்கு அனுப்பி, அவர்களுக்கு வேதத்தையும் வழங்கினான். அந்த நபிமார்களின் போதனைகளையும் அவர்களுக்கு அவர்களுக்கு வேதங்களையும் கற்றறிந்த மக்கள் – அதாவது மார்க்க அறிஞர்கள் – சாதாரண மக்களிடமிருந்து மறைத்ததால் தான் அடுத்தடுத்து நபிமார்கள் அனுப்பும் அவசியம் எற்பட்டது. இதனால் தான் மக்கள் நேரான வழியிலிருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலைமை இந்தச் சமுதாயத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கற்றறிந்த மக்களுக்கு இங்கே கடும் எச்சரிக்கை செய்கிறான் இறைவன். சத்தியத்தை மறைப்பதற்கு இவர்கள் கற்பிக்கும் நியாயங்களையும் இறைவன் நிராகரிக்கிறான். இவ்வசனங்கள் மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் கவனமாகச் சிந்திக்க வேண்டிய அடிக்கடி நினைவு கூர வேண்டியவையாகும்.

மார்க்கத்தை மறைக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமன்று, நாங்கள் அனைத்தையும் சொல்லி விடத் தயாராகவே இருக்கிறோம். ஆனாலும் மக்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள இயலாது. இதன் காரணமாகவே மக்கள் எவற்றைப் புரிந்து கொள்வார்களோ அவற்றை மட்டும் மக்களுக்குச் சொல்கிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்தும் அறிஞர்கள் பலரை நாம் காண்கிறோம்.

இவர்களின் இந்தச் சமாதானம் சில மனிதர்களைத் திருப்திப் படுத்தப் பயன் படலாம். இறைவன் முன்னிலையில் எடுபடாது.

உலகில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நல்ல சிந்தனையாளர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது. இது உண்மை தான். அதே நேரத்தில் எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களும் உள்ளன. அவற்றைப் பேரறிஞன் எப்படிப் புரிந்து கொள்வானோ அது போலவே அடி முட்டாளும் புரிந்து கொளவான். இப்படிப்பட்ட விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

தாய் தந்தை மற்றும் உறவினர்களை அறிந்து கொள்ளுதல், நிறங்களை வகைப்படுத்தி அறிந்து கொள்ளுதல், எளிமையான கணக்குகளை அறிந்து கொள்ளுதல் போன்ற ஆயிரமாயிரம் விஷயங்களை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

அல்லாஹ்வுடைய மார்க்கம் – வேதம் – அறிவாளிகள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் போன்றதா? அல்லது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களைப் போன்றதா?

நாம் மக்களுக்காக தெளிவு படுத்திய பின்னர் என்று இறைவன் கூறுவதன் மூலம் அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விஷயங்களைப் போன்றதாகவே மார்க்கத்தையும் தந்திருப்பதாக அவன் கூறுகின்றான்.

இது அனைத்து மக்களுக்கும் உரியது, இது தெளிவானது, என்னால் தெளிவு படுத்தப்பட்டது என்று இந்தச் சொற்றொடர் மூலம் இறைவன் விளக்குகின்றான்.

இது தெளிவாக இருக்கும் போது – இறைவனால் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் போது – அனைத்து மக்களுக்காகவும் இது தெளிவு படுத்தப்பட்டிருக்கும் போது – மக்கள் விளங்க மாட்டார்கள் என்று கூறக் கூடியவர்கள் இறைவனுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இறைவன் தெளிவு படுத்தியவைகளில் தெளிவில்லாதவைகளும் உள்ளன என்றும் இவர்கள் கூற வருகின்றனர்.

மார்க்கத்தில் பல விஷயங்களை மறைப்பதற்கு இவர்கள் கூறும் சமாதானம் இறைவனின் புரிய வைக்கும் ஆற்றலையே சந்தேகிக்க வைக்கிறது என்பதை இவர்கள் உணர வில்லை. இந்தக் குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கி இருக்கிறோம் (அல்குர்ஆன் 54:17)

இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 4:82)

என்ற வசனங்களும் இங்கே நினைவு கூறப்பட வேண்டியவையாகும்.

உலக விஷயங்களில் – அதுவும் மிகச் சில விஷயங்களில் வேண்டுமானால் இவர்களின் சமாதானம் எடுபட முடியும். மார்க்க விஷயத்தில் சிறிதும் பொருந்தாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நாங்கள் சத்தியத்தை சொல்லி விட தயாராகவே இருக்கின்றோம். மக்கள் அவற்றை ஏற்காமல் எதிர்ப்பார்கள். இதனால் அவர்களின் கண்டனத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதற்காகவே சில உண்மைகளை நாங்கள் சொல்லத் தயங்குகிறோம் என்று கூறக் கூடியவர்களும் உள்ளனர்.

இந்தச் சமாதானமும் இறைவன் முன்னிலையில் எடுபடாது. மக்கள் எதிர்ப்பார்கள் என்பது உண்மையே. அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. அதற்காக உண்மையைச் சொல்லத் தயங்குவது கூடாது.

சொந்த விஷயங்களில் வேண்டுமானால் சில விஷயங்களை அது ஏற்படுத்தும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு விட்டு விடலாம், விட்டுக் கொடுக்கலாம். மார்க்கம் எவருக்கும் தனியுடமையாக்கப் பட்டதன்று. அது இறைவனுக்கு சொந்தமானது. ‘நாம் அருளிய நேர்வழியை நாம் தெளிவு படுத்திய பின்’ என்ற வசனத்தின் மூலம், மார்க்கம் எவருக்கும் உரிமையானதன்று என்று தெளிவாக அறிவித்து விடுகின்றான்.

இவர்களுக்கு மட்டும் உரிமையில்லாத – அனைத்து மக்களுக்கும் பொதுவான – ஒன்றை மறைப்பது எந்த வகையில் நியாயம்?

மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்று தெரிந்தே தான் அல்லாஹ் அனைத்து விஷயங்களையும் கூறியிருக்கிறான். இல்லையென்றால் மக்களின் எதிர்பே வர முடியாத விஷயங்களை மட்டும் சொல்லியிருப்பான். இதையும் அவர்கள் உணர வேண்டும்.

மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரும் என்று அஞ்சக் கூடிய இவர்கள், ‘அல்லாஹ் அவர்களைச் சபிக்கிறான், யாருடைய சாபத்துக்கு இறைவனிடம் மதிப்பிருக்கிறதோ அவர்களும் சபிக்கிறார்கள்’ என்ற இறைவனின் எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

மனிதர்களின் ஏச்சுக்கள் – அதுவும் சத்தியத்தை ஏற்க மறுக்கும் மனிதர்களின் ஏச்சுக்களால் எதுவும் ஏற்படப் போவதில்லை. இவர்களின் ஏச்சுக்களுக்கு அஞ்சி அல்லாஹ்வின் சாபத்தை இவர்கள் தேடிக் கொள்கிறார்கள். நல்ல மனிதர்களின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள்.

இறைவனின் சாபத்திற்கு ஆளாகி விட்டால் மறுமை வாழ்க்கை பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர வில்லை.

சத்தியத்தை மறைக்காமல் எடுத்துச் சொல்வதால் ஏற்படும் சிரமங்கள் சாதாரணமானவை, மறைப்பதால் ஏற்படும் சிரமங்கள் மனிதனால் தாங்க முடியாதவை என்பதை உணரக்கூடியவர்கள் – மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் – இந்தச் சமாதானங்களைக் கூற மாட்டார்கள்.

சிறிய விஷயங்களை மறைப்பதன் மூலம் மக்களிடம் பெரிய விஷயங்களைக் கூறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே சில்லரை விஷயங்களை மக்கள் மத்தியில் வைத்துப் பிரச்சனை ஏற்படுத்தாமல் பெரிய பெரிய விஷயங்களாகச் சொல்கிறோம் என்று கூறக்கூடிய அதிமேதாவிகளும் உள்ளனர்.

இவர்கள் எந்த மக்கள் மத்தியில் சில்லரை(?) விஷயங்களைக் கூறத் தயங்குகிறார்களோ அதை விட மோசமான மக்களைக் குர்ஆன் ஆரம்பத்தில் சந்தித்தது. இறைத் தூதரவர்கள் இவர்களை விடவும் மோசமான மக்களுக்குத் தான் போதனை செய்தார்கள்.

படுமோசமான மக்களை நாம் சந்திக்கிறோமே இவர்களிடம் பெரிய விஷயங்களை மட்டும் கூறுவோம் என்று நபியவர்கள் இருக்க வில்லை. நபியவர்களை விடவும் தங்களை அறிவாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் சின்ன விஷயம் என்று தள்ளுபடி செய்யும் விஷயங்கள் எவரது கற்பனையிலும் உதித்தவை அல்ல. அப்படி இருக்குமானால் இவர்கள் விரும்பியதை மறைக்கலாம்.

ஆனால் இவர்கள் சின்ன விஷயங்கள் என்று கூறக் கூடியவையும் குர்ஆனில் உள்ளவை தான், நபி வழியில் உள்ளவை தான்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் எல்லா மக்களுக்கும் சொன்ன விஷயங்களில் சின்னவை பெரியவை என்று பாகுபடுத்தி, ஒரு பகுதியை மக்கள் மத்தியில் சென்று விடாமல் தடுக்க இவர்கள் எங்கிருந்து அதிகாரம் பெற்றனர்.

மனிதர்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்று சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தவர்கள், அனைத்தையும் ஏற்பார்கள். சின்னதையும் ஏற்பார்கள். பெரியதையும் ஏற்பார்கள். ஏனெனில் அல்லாஹ் ‘நம்முடைய தூதர் தந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள், தடுத்ததை விலக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான். எதையும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் மனிதர்களில் உள்ளனர். அவர்கள் சின்ன விஷயங்களை மட்டுமின்றிப் பெரிய விஷயங்களையும் கூட ஏற்க மாட்டார்கள்.

பெரிய விஷயங்களை அனைவரும் ஏற்ற பின் சின்ன விஷயங்களைச் சொல்லலாம் என்றால் ஒரு காலத்திலும் அனைவரும் ஏற்கப் போவதில்லை. அதனால் இவர்கள் ஒரு காலத்திலும் சின்ன விஷயங்களைச் சொல்லப் போவதில்லை. கியாம நாள் வரையிலும் பெரிய விஷயங்கள் என்று இவர்கள் கருதுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். மார்க்கத்தின் கனிசமான பகுதி கடைசி வரை மக்களைச் சென்றடையாமலே இருக்கும் நிலையைத் தான் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய விஷயத்தை உணர்ந்து கொண்டவர்கள் இத்தகைய வாதத்தை எழுப்ப மாட்டார்கள்.

சத்தியத்தை மறைப்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் எந்தச் சமாதானமும் இறைவனிடம் எடுபடாது.

மக்கள் ஏற்க மாட்டார்கள், பக்குவப்பட வில்லை, சின்ன விஷயங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் இஸ்லாம் தோன்றிய காலத்தில் நபியவர்கள் சிந்தித்தால் அதில் நியாயமிருக்கும்;. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் மக்கள் பக்குவப்பட வில்லை என்றால், 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சின்ன விஷயங்களைச் சொல்லக் காலம் கனியவில்லை என்றால் எப்போது தான் சொல்வார்கள்? இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்?

எல்லாத் தவறுகளையும் மன்னிப்புக் கேட்டு விட்டாலே மன்னிக்கக் கூடிய இறைவன் இந்தக் குற்றத்தை மன்னிப்பதற்குக் கூடுதலான நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றை நிறைவேற்றாமல் இறைவனின் மன்னிப்பைப் பெற முடியாது.

பாவ மன்னிப்புக் கேட்டு, திருந்தி, மறைத்தவற்றைத் தெளிவு படுத்தியவர்களைத் தவிர (அல்குர்ஆன் 2:160) என்று இறைவன் கூறுகிறான்.

வெறும் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது, மாறாக மன்னிப்பும் கேட்க வேண்டும், தாங்கள் கூறிய சமாதானங்கள் தவறானவை என்பதை உணர்ந்து திருந்தவும் வேண்டும், அத்துடன் இதுவரை மறைத்தவற்றை யெல்லாம் மக்களுக்குத் தெளிவு படுத்தவும் வேண்டும். இல்லையெனில் இறைவனின் சாபத்திற்குரியவர்களாகவே அவர்கள் நீடிக்க வேண்டி வரும்.

இந்த இருவசனங்களும் இல்லையானால் உங்களுக்கு எதனையும் நான் அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதையும் (புகாரி, முஸ்லிம்) யாரேனும் கல்வி சம்மந்தமாகக் கேட்கப்பட்டு, மறைத்தால் கியாமத் நாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்கள் என்ற நபியவர்களின் எச்சரிக்கையையும் (அபூதாவூத், திர்மிதி) இவர்களின் சிந்தனைக்கு வைக்கிறோம்.

மேற்கண்ட நபிமொழியின் படி மார்க்கத்தில் எந்த ஒன்றையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.