‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 2:173)

இந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள், அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பம் ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது.

திருக்குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். அவ்வசனங்களில் இந்த வசனமும் ஒன்றாகும்.

இந்த வசனத்தையும் இது போன்ற வசனங்களையும் அவற்றின் மேலோட்டமான பொருளில் புரிந்து கொண்டால் ஏனைய வசனங்களை மறுக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே தான் இவ்வசனம் பற்றி நாம் விரிவாக ஆராய்கின்றோம்.

தாமாகச் செத்தவை

விலக்கப்பட்ட உணவுகளில் ‘தாமாகச் செத்தவை’ இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. ‘தாமாகச் செத்தவைகளை உண்ணக் கூடாது’ என்றால் அடித்தோ கழுத்தை நெரித்தோ வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது.

தாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும்.

கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும் முட்டப்பட்டுச் செத்ததும் வனவிலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் 5:3 வசனத்தில் இறைவன் தெளிவு படுத்துகிறான்.

தாமாகச் செத்தவை என்பது முறையாக அறுக்கப் படாதவற்றைக் குறிக்கும் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

முறையாக அறுக்கப்படாதவைகளை உண்ணக் கூடாது என்பதையும் பொதுவாக விளங்கிக் கொள்ளக் கூடாது. விலங்கினத்தையும் பறவையினத்தையும் மட்டுமே இது குறிப்பிடுகின்றது. கடல்வாழ் பிராணிகள் தாமாகச் செத்தாலும் அந்தச் சாவு எந்த முறையில் ஏற்பட்டாலும் அவற்றை உண்ணலாம். இந்த வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் விளங்க முடியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)

‘தாமாக செத்தவைகள் ஹராமாக்கப்பட்டுள்ளன’ என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. உண்பதற்கு ஹராமாக்கப் பட்டுள்ளன என்று கூறாமல் பொதுவாக ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

உண்பதற்கு பயன்படுத்தக் கூடாது, வேறு எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்வதா? அல்லது உண்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது, வேறு வகையில் பயன் படுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்வதா?

இது பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நாம் ஆராயும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் சான்றாக ஹதீஸ்களைக் காண முடிகின்றது. ஆனாலும் இந்த இருவகையான ஹதீஸ்களையும் சிந்திக்கும் போது முரண்பாடற்ற முடிவுக்கு நாம் வந்து விடலாம்.

மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாகக் கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து செய்ற நபி (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ)

ஸவ்தா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஆடு செத்து விட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த ஆடு செத்து விட்டது’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள், ‘செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘தாமாகச் செத்தவை, ஓட்டப்படும் இரத்தம், பன்றியின் இறைச்சி – நிச்சயமாக அது அசுத்தமாகும். – அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை தவிர வேறெதுவும் உண்பவர் மீது ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று கூறுவீராக’ (6:145) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘நீங்கள் உணவாக இந்தத் தோலை உட்கொள்ள வில்லையே பாடம் செய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள்’ எனவும் கூறினார்கள். உடனே ஸவ்தா (ரலி) அவர்கள் செத்த ஆட்டின் தோலை உரித்துவர ஆளனுப்பினார்கள். அதைப்பாடம் செய்து அதிலிருந்து தண்ணீர்ப் பை தயாரித்துக் கொண்டார்கள். அது கிழியும் வரை அவர்களிடம் இருந்தது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத்)

ஆதாரப்பூர்வமான இவ்விரு ஹதீஸ்களை – குறிப்பாக, பெரிய எழுத்தில் உள்ள சொற்களை – நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இந்த ஹதீஸில் செத்த ஆட்டின் தோலைப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ள நபி (ஸல்) அனுமதிக்கிறார்கள். உண்பவர் மீது, உணவாக, உண்பது தான் ஹராம் ஆகிய வார்த்தைகள் தாமாகச் செத்தவற்றை உண்பது மட்டுமே ஹராம், வேறு வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் என்பதை அறிவிக்கின்றன.

செத்த ஆட்டின் தோலை, மாமிசத்தை, கொழுப்பை உண்ணக் கூடாது. அதே சமயம் வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன. இதற்கு முரணாக அமைந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

‘மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி, (மாற்றாரின்) வழிபாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்க அல்லாஹ் விலக்கியுள்ளான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ‘தாமாகச் செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது, அது ஹராம் தான்’ என்று கூறிவிட்டு, யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பை ஹராமாக்கியவுடன் அதை உருக்கி விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிடலானார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

‘ஒரு கூட்டத்தினருக்கு ஒரு பொருளை உண்பதற்கு ஹராமாக்கினால் அதன் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)

உண்பதற்குத் தடுக்கப்பட்டால் அவற்றை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

ஆதாரப்பூர்வமான இவ்விரு செய்திகளையும் முரண்பாடில்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது?

கொழுப்பும் – தோலும் சம்மந்தப்பட்டதாக மட்டும் இந்த ஹதீஸ்களை எடுத்துக் கொள்ள முடியாது. இவ்விரு ஹதீஸ்களிலும் பொதுவான காரணங்கள் கூறப்படுகின்றன.

செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான் என்றும் உண்ண ஹராமாக்கினால் விற்பதையும் ஹராமாக்கி விட்டான் என்றும் இரு இடங்களிலும் பொதுவான விதியே கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டில் நேரடியாக எதை ஏற்றாலும் மற்றொன்றை மறுக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை எப்படி சரி செய்யலாம்?

ஹலாலாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பிராணியை எடுத்துக் கொண்டால் அதில் உண்பதற்குப் பயன்படும் இறைச்சி, கொழுப்பு, ஈரல், நுரையீரல், குடல் போன்றவைகளும் உள்ளன, உண்பதற்குப் பயன்படாத தோல், மயிர், குளம்பு, குடலில் தேங்கியுள்ள சாணம் எலும்பு போன்றவைகளும் உள்ளன.

அந்த ஹலாலான உயிhப்பிராணி செத்துவிட்டால் உண்பதற்குப் பயன்படும் பொருட்களை உண்ணவோ வேறு வகையிலோ பயன்படுத்தக் கூடாது. உண்பதற்கு உதவாத பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளங்கினால் முரண்பாடு நீங்கி விடுகின்றது.

‘உண்ண ஹராமாக்கியதை விற்கவும் ஹராமாக்கி விட்டான்’ என்ற வார்த்தை உண்ண ஹராமாக்கப்பட்ட மாமிசம் கொழுப்பு போன்றவற்றையே குறிக்கின்றது.

செத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான் என்ற வார்த்தை உண்பதுடன் சம்மந்தப்படாத பொருட்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஹதீஸ் உண்பதற்குரிய பாகங்களைப் பற்றியும், மற்றொரு ஹதீஸ் உண்பதற்குரியதாக இல்லாத பாகங்களைப் பற்றியும் கூறுகின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்டால் இதில் முரண்பாடு நீங்கி விடும்.