‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை

முறையாக அறுக்கப்படாதவையே தாமாகச் செத்தவை. இவற்றில் கடல் வாழ் உயிரினங்கள் விதிவிலக்குப் பெறுகின்றன.

முறையாக அறுக்கப்படாதவை என்பதிலிருந்து வேட்டையாடப்படும் பிராணிகளும் விலக்குப் பெறுகின்றன. எந்த முறையில் அறுக்க வேண்டுமோ அந்த முறையை வேட்டையின் போது கையாள வேண்டியதில்லை. பின்வரும் வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் அறியலாம்.

அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி நீங்கள் (வேட்டையாட) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும் பிராணிகள் வேட்டையாடியதில் எதையும் உண்ணாமல்) உங்களுக்குகாகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 5:4)

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுமுள்ளனர்.

நாங்கள் வேட்டையாடும் பகுதியில் வசிக்கிறோம். எனது அம்பாலும் பயிற்றுவிக்கப்பட்ட நாய், பயிற்றுவிக்கப்படாத நாய் ஆகியவற்றின் மூலமும் நான் வேட்டையாடுகிறேன். இதில் எது ஆகுமானது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உனது அம்பால் வேட்டையாடி அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறியதை நீ உண், பயிற்றுவிக்கப்பட்ட உனது நாய் மூலம் வேட்டையாடி அல்லாஹ்வின் பெயர் கூறியதை நீ உண். பயிற்றுவிக்கப்படாத நாள் மூலம் வேட்டையாடியதை உயிருடன் பெற்றால் அறுத்து உண் என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி), நுல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

அம்புகளும் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களும் உயிரற்ற நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொண்டு வந்தாலும் அதை உண்ணலாம். அறுக்கத் தேவையில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. வேட்டையாடிய பின் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறினால் போதும் என்ற கருத்தைத் தரும் வகையில் இந்த ஹதீஸின் வாசகம் அமைந்திருந்தாலும் அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது. அம்பு எய்யும் போதே – நாயை அனுப்பும் போதே – அல்லாஹ்வின் பெயர் கூறிவிட வேண்டும். இதைப் பின் வரும் ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதரே! நான் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்கு) அனுப்புகிறேன். அவை (வேட்டைப் பிராணியில் எதையும் உண்ணாமல்) அப்படியே என்னிடம் கொண்டு வருகின்றன. அல்லாஹ்வின் பெயரையும் நான் கூறுகிறேன். (இதைச் சாப்பிடலாமா?) என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி உனக்காக முழுமையாகக் கொண்டு வந்தால் அதை உண்! என்றார்கள். அவை (வெட்டையாடப் பட்டவைகளைக்) கொன்று இருந்தாலுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கொன்றிருந்தாலும் தான் என்று விடையளித்தார்கள். ஆயினும் (இறை நாமம் கூறப்படாத) வேறு நாய்கள் அவ்வேட்டையில் கூட்டாக இருக்கக் கூடாது எனவும் கூறினார்கள். அம்பால் எறிந்து அம்பின் கூர்முனை பிராணியில் ஊடுருவினால் அதை நீ உண்! அம்பின் அகலவாக்கால் தாக்கியிருந்தால் அதை உண்ணாதே என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நுல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நாயை அனுப்பும் போதே அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குவதுடன் வேட்டை சம்மந்தமான இன்னும் சில விதிகளையும் தெளிவாக்குகின்றது.

வேட்டை என்ற பெயரால் பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது. வேட்டையாடப் பயன் படுத்தும் கருவி அப்பிராணிக்குள் ஊடுருவிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும், ஊடுருவவும் வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த அடிப்படையில் துப்பாக்கிகளால் வேட்டையாடலாம். ஏனெனில் அதன் குண்டுகள் பிராணிகளுக்குள் ஊடுருவும்.

கவண் (உண்டிவில் – கவட்டை) மூலம் வேட்டையாடி, வேட்டைப் பிராணி செத்து விட்டால் அதை உண்ணக் கூடாது. ஏனெனில் அதிலிருந்து புறப்படும் கல் ஊடுருவிச் செல்வதில்லை. உயிருடன் விழுந்தால் அறுத்து உண்ணலாம். கல்லால் எறிந்து வேட்டையாடுவதும் ஈரக் களிமண் உருண்டைகளைக் குழாயில் வைத்து வாயால் ஊதி வேட்டையாடுவதும் இதே வகையைச் சேர்ந்தவைதாம். இது போன்ற வேட்டைகளில் பிராணிகள் செத்து விட்டால் உண்ணக் கூடாது. மேற்கண்ட ஹதீஸிலிருந்தே இத்தனை விஷயங்களையும் விளங்கலாம்.

நாம் வேட்டையாட அனுப்புகின்ற நாய் போன்றவை வேட்டையாடி விட்டு அதில் ஒரு பகுதியை உண்டால் அதை நாம் உண்ணலாமா என்பதில் இரு கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.

நீ உன் நாயை அனுப்பும் போது, அல்லாஹ்வின் பெயர் கூறு! உயிருடன் அது உன்னிடம் பிடித்து வந்தால் அதை அறுத்துவிடு! கொல்லப்பட்ட நிலையில் அதை நீ கண்டால் அந்த நாய் அதில் (சிறிதளவேனும்) சாப்பிடாமல் இருந்தால் அதை நீ சாப்பிடு! ஏனெனில் நாய் பிடிப்பது தான் அதற்குரிய அறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூல்கள்: புகாரி, முஸலிம், அஹ்மத்)

இதற்கு முரணாகத் தோன்றும் மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்.

வேட்டைக்கு அனுப்பும் நாய்கள் வேட்டையாடப் பட்டதைச் சாப்பிட்டால் (அதை நாம் சாப்பிடலாமா?) என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவை சாப்பிட்டாலும் நீ அதைச் சாப்பிடலாம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரப் பூர்வமானவைதாம். ஒன்று மற்றொன்றை மாற்றிவிட்டது என்று முடிவு செய்ய வழியில்லை. ஏனெனில் எது ஆரம்ப நிலை எது இறுதி நிலை? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவ்விரு ஹதீஸ்களில் ஒன்று ஆதாரப் பூர்வமானதாகவும் மற்றொன்று பலவீனமானதாகவும் இருந்தால் பலவீனமானதை விட்டுவிட்டு ஆதாரப் பூர்வமானதை எடுத்து நடக்கலாம். ஆனால் இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப் பூர்வமானவையே!

இந்நிலையில் இரண்டில் எதைச் செய்வது பேணுதலானதோ – எது திருக்குர்ஆனின் போதனையுடன் ஒத்து வருகின்றதோ – அதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டுவிடுவதே முறையானதாகும்.

நாம் முன்னர் எடுத்துக் காட்டிய வசனத்தில் ‘வேட்டையாடும் பிராணிகள் (எதையும் உண்ணாமல்) உங்களிடம் அப்படியே கொண்டு வந்தவைகளை உண்ணுங்கள்’ என்று கூறப்படுகின்றது. புகாரி, முஸ்லிமில் இடம் பெறும் முதல் ஹதீஸ் இந்த வசனத்துடன் ஒத்துப் போகின்றது. அஹ்மத், அபூதாவூத், நஸயீயில் இடம் பெறும் இரண்டாவது ஹதீஸ் இந்த வசனத்துடன் முரண்படுகின்றது.

மேலும் முதல் ஹதீஸை ஏற்று, வேட்டைப் பிராணிகளால் சாப்பிடப்பட்டதை உண்ணாமல் இருப்பதால் எந்தக் கேள்வியும் வராது. பேணுதலுக்கு ஏற்றதாக உள்ள முதல் ஹதீஸினடிப்படையில் செயல்படுவதே சரியானதாகும்.

வேட்டையின் போது அம்பால் தாக்கப்பட்ட பறவை மற்றும் பிராணிகள் உடனே தண்ணீரில் விழுந்து இறந்து விட்டால் அதை உண்ணக் கூடாது. ஆனால் அம்பால் தாக்கப்பட்டவை ஓடிச் சென்று பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு செத்துக் கிடக்கக் கண்டால், அது செத்ததற்கு நாம் எய்த அம்பு தான் காரணம் என்பதும் உறுதியானால் அதை உண்ணலாம். இவ்விரு விஷயங்களும் பின் வரும் ஹதீஸ்களில் கூறப்படுகின்றன.

நீ அம்பை வீசி அதனால் தாக்கப் பட்டவைகளை ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு நீ கண்டு, உனது அம்பின் தாக்குதலைத் தவிர வேறு அடையாளங்கள் இல்லாவிட்டால் அதை உண்! தண்ணீரில் விழுந்து கிடந்தால் உண்ணாதே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூல்கள்: புகாரி, அஹ்மத்)

உன்னால் அம்பு எய்யப்பட்ட பிராணி மூன்று நாட்கள் கிடைக்காமல் இருந்து பிறகு அது கிடைத்தால் நாற்றம் வீசாமல் இருந்தால் அதைச் சாப்பிடு என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

நீ வேட்டையாடியது தண்ணீரில் விழுந்து செத்துக் கிடக்கக் கண்டால் அதை உண்ணாதே! ஏனெனில் உன் அம்பு அதைக் கொன்றதா? தண்ணீர் அதைக் கொன்றதா என்பதை நீ அறிய மாட்டாய் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

வேட்டையாடப் படும்போது முறையாக அறுப்பு நிகழ வில்லையாயினும் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் இதற்குத் தனி விதிகளைக் கூறுவதால் தாமாகச் செத்தவற்றில் இவை அடங்காது என்பதை அறியலாம்.

தாமாகச் செத்தவை விலக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கத்தை இதுவரை கண்டோம்.