‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை

கடல்வாழ் உயிரினங்களும் வேட்டையாடப்பட்டவைகளும் தாமாகச் செத்தவை என்பதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.

அனுமதிக்கப்ட்ட பிராணியை அறுக்கும் போது அதன் வயிற்றில் குட்டி – அல்லது குட்டிகள் – செத்த நிலையில் இருந்தால் தாமாகச் செத்தவை என்பதில் அது அடங்கும் என்றாலும் அதை உண்ணலாம். தாமாகச் செத்தவை என்பதிலிருந்து அது விலக்குப் பெறுகின்றது.

‘தாயை அறுப்பதே வயிற்றிலுள்ள குட்டியையும் அறுப்பதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை நாங்கள் அறுக்கிறோம். அதன் வயிற்றில் குட்டி இருக்கிறது. அதை நாங்கள் எறிந்துவிட வேண்டுமா? உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் விரும்பினால் அதை உண்ணுங்கள்! ஏனெனில் அதன் அறுப்பு, தாயின் அறுப்பில் அடங்கியுள்ளது’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: அஹ்மத்)

தாய் வயிற்றில் இறந்த குட்டி தானாகச் செத்தது என்றாலும் தாயை அறுப்பது குட்டியையும் அறுப்பதாக அமையும் என்ற நபி (ஸல்) அவர்களின் விளக்கம் காரணமாகத் தாமாகச் செத்தவை என்பதிலிருந்து இது விலக்குப் பெறுகின்றது.

இவற்றைத் தவிர வேறு வகையில் இறந்த எந்தப் பிராணியும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். அதை உண்ணக் கூடாது.

உயிருடன் உள்ள பிராணியின் ஒரு உறுப்பை அல்லது ஒரு பகுதியை வெட்டி எடுத்தால் அதுவும் தாமாகச் செத்தவற்றில் அடங்கும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

‘உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

இரத்தம்

தாமாகச் செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் குறிப்பிடுகின்றான். உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியின் இரத்தமும் உணண அனுமதிக்கப்படாத பிராணியின் இரத்தமும் விலக்கப்பட்டவையாகும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்டு இரத்தத்தைச் சர்வ சாதாரணமாக உண்கின்றனர். முஸ்லிம் வியாபாரிகள் இரத்தத்தை விற்பனையும் செய்து வருகின்றனர். இவ்விரண்டும் கூடாததாகும்.

இந்த வசனத்தில் பன்றியின் மாமிசத்தையும் தடை செய்திருப்பதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு மதிப்பளித்துப் பன்றியின் மாமிசத்தை முஸ்லிம்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால் அதே தொடரில் தான் இரத்தம் தடை செய்யப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு முஸ்லிம்கள் மதிப்பளிக்காதது வேதனைக்குரியதாகும். பன்றியின் மாமிசத்தை உண்பதும் இரத்தம் உண்பதும் சம அளவிலான குற்றங்களே என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அதில் சிறிதளவு கூட உட்கொள்வது கூடாது! அதிக அளவு உண்பது எவ்வளவு குற்றமோ சிறிதளவு உண்பதும் அதே அளவு குற்றமாகும் என்பதை நாம் அறிவோம்.

இரத்தத்தை பொருத்தவரை இந்தப் பொது விதியைப் பயன்படுத்த முடியாது. மாமிசத்துடன் ஒட்டியிருக்கும் இரத்தம் மாமிசத்தின் உள்ளே உறைந்து போயிருக்கும் இரத்தம் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டியதில்லை. சிவப்பு நிறம் மாறும் அளவுக்கு மாமிசத்தைப் பல முறை கழுவ வேண்டியதில்லை. பிராணியை அறுத்த பின் இரத்தம் வெளியேறி விட்டால் மாமிசத்தைக் கழுவாமலேயே உண்ணலாம். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியலாம்.

ஓட்டப்பட்ட இரத்தம்

‘தாமாகச் செத்தவை, ஓட்டப்பட்ட இரத்தம், பன்றியின் மாமிசம்; ஆகியவற்றைத் தவிர வேறெதனையும் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட செய்தியில் நான் காணவில்லை என்று (நபியே) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 6:145)

2:173 வசனத்தில் இரத்தம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் 6:145 வசனத்தில் ‘ஓட்டப்பட்ட இரத்தம்’ என்று கூறப்படுகின்றது. முந்தைய வசனத்தில் வசனத்தில் கூறப்படும் இரத்தம் என்பது ஓட்டப்பட்ட இரத்தத்தையே குறிக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஓட்டப்பட்ட பின் மாமிசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தம், வேட்டை நாய்களால் உயிரற்ற நிலையில் பிடித்து வரப்படும் பிராணிகளுக்குள் உறைந்து போய்விட்ட இரத்தம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.

அறுக்கப்பட்ட பின் பீறிட்டு வெளியேறும் இரத்தத்தையே இறைவன் தடை செய்திருக்கிறான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘ஓட்டப்பட்ட இரத்தம்’ என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.

கைவிரலில் வெட்டுப்பட்டு இரத்தம் வெளிப்பட்டால், பலரும் உடனே இரத்தம் வடியும் விரலை வாயில் வைத்துச் சூப்புகின்றனர். இவ்விரத்தமும் ஓட்டப்பட்ட இரத்தமே. எனவே அதைத் துப்பிவிட வேண்டும்.

இரத்தம் விலக்கப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் ஒரு ஐயம் தோன்றலாம். நாம் வாழுகின்ற நவீன காலத்தில், பாதிக்கபட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்தத்தைச் செலுத்திப் பிழைக்க வைக்கின்றனர். இதைச் செய்யலாமா? செய்தால் இறைவனின் கட்டளையை நாம் மீறியவர்களாக ஆவோமா? என்பதே அந்த ஐயம்.

இந்த ஐயத்திற்குரிய விடையை இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை ஆராயும் போது நாம் விளக்குவோம்.

பன்றியின் மாமிசம்

தாமாகச் செத்தவை, இரத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து ‘பன்றியின் மாமிசத்தை இறைவன் விலக்கியுள்ளதாகக் கூறுகின்றான்.

இறைவன் பன்றியிறைச்சியைத் தடை செய்துள்ளதால் பன்றியை முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த வெறுப்பு இந்த வெறுப்பு எல்லை மீறிப் ‘பன்றி’ என்ற வார்த்தையைக்கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை. நாலுகால் பிராணி, கட்டைக்கால், பொல்லா மிருகம் என்பது போன்ற வார்த்தைகளையே பன்றியைக் குறித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பன்றி என்று கூறிவிட்டால் வாயைக் கழுவ வேண்டும், உலூச் செய்ய வேண்டும், குளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவோரும் நம்மிடையே உள்ளனர். இதன் மூலம் தாங்கள் அதிகம் பேணுதல் உள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இந்தப் போக்கு பக்தியின் வெளிப்பாடோ பேணுதலின் அடையாளமோ அன்று. பன்றியை உண்ணக்கூடாது என்று தான் இறைவன் நமக்குக் கட்டளையிட்டுள்ளான். அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ நமக்குத் தடை விதிக்க வில்லை.

திருக்குர்ஆனில் நான்கு இடங்களில் கின்ஸீர் (பன்றி) எனும் வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. கனாஸீர் (பன்றிகள்) என்ற வார்த்தை ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தையே தடை செய்யப்பட்டது என்றால் இறைவன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். இறைத்தூதரும் பன்றி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்பு வாய் கழுவவில்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உலூச் செய்யவும் இல்லை, உலூச் செய்ய ஏவவுமில்லை.

எனவே இந்தத் தவறான நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.

தடை செய்யப்பட்டவற்றை விளக்கும் போது பன்றி எனக் கூறாமல் பன்றியின் மாமிசம் என்று இறைவன் கூறுகின்றான்.

பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டிருந்தால் பன்றி தடுக்கப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். ‘பன்றியின் மாமிசம்’ என்று இறைவன் இங்கே கூறுகிறான். எலும்பு, கொழுப்பு, குடல், ஈரல், நுரையீரல், கல்லீரல், இறைச்சி என்று பல்வேறு பொருட்கள் பிராணிகளில் உள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி வார்த்தைகள் உள்ளன. பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப் பட்டவை என்றால் ‘பன்றி தடை செய்யப்பட்டது’ என்று இறைவன் கூறியிருப்பான். அவ்வாறு கூறாமல் பன்றியின் இறைச்சி என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். அப்படியானால் பன்றியின் இறைச்சியைத் தவிர மற்ற பகுதிகளை உண்ணலாமா? என்ற ஐயம் பலருக்குத் தோன்றலாம்.

பன்றியின் அனைத்துப் பாகங்களும் விலக்கப் பட்டுள்ளனவா என்பதைப் பற்றி முடிவுக்கு வருவதற்காகத் திருக்குர்ஆனை ஆராய்ந்தால் எந்த இடத்திலும் பன்றியின் அனைத்துப் பாகங்களும் விலக்கப்பட்டவையே என்று கூறப்பட வில்லை. இது பற்றிக் கூறப்படும் நான்கு வசனங்களிலுமே பன்றியின் மாமிசம் என்றே தெளிவாகக் குறிப்பிடப் படுகிறது.

நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலாவது பன்றியின் மாமிசம் என்பது பன்றியின் அனைத்து பாகங்களையும் குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தால் அவ்வாறு நாம் காண முடியவில்லை.

இது பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து கூறியிருக்கும் கருத்துக் களிலும் சரியான தெளிவு கிடைக்க வில்லை. அறிஞர்கள் அளிக்கும் விளக்கம் என்னவென்று பார்ப்போம்.

‘ஆட்டிறைச்சி ஒரு கிலோ வேண்டும் என்று கேட்டால் இறைச்சி, எலும்பு, கொழுப்பு, மற்றும் பல பாகங்களையும் கலந்தே தருகின்றனர். இறைச்சி என்பது ஏனைய பாகங்களையும் சேர்த்தே குறிக்கின்றது என்பதை இதிலிருந்து அறியலாம்’. இதுதான் அறிஞர்களின் கருத்துடைய சாரம்.

பெருமளவு ஆட்டிறைச்சியுடன் சிறிதளவு எலும்பு போன்றவை கலப்பதால் அதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்தையும் இறைச்சி எனக் கூறுகின்றனர். தனியாக எலும்பை மட்டும் இறைச்சி என்று எவரும் கூறுவதில்லை. இதை இந்த அறிஞர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இவர்கள் கூறுவது போல் சில நேரங்களில் இறைச்சியுடன் கலந்த மற்ற பொருட்களுக்கும் சேர்த்து இறைச்சி எனக் கூறப்பட்டாலும் எலும்பு போன்ற மற்ற பாகங்களிலிருந்து பிரித்துக் காட்டவும் இறைச்சி என்ற பதம் பயன்படுத்தப் படுவதுண்டு. இதுதான் இறைச்சி என்பதன் நேரடிப் பொருள். இந்த நேரடிப் பொருளை விட்டு நடைமுறையில் – சில சமயங்களில் மட்டும் – பயன் படுத்தப்படும் பொருளைத் தேர்வு செய்ய எந்த நியாயமான காரணத்தையும் அறிஞர்கள் கூறவில்லை.

மேலும் சட்டங்களைக் கூறும் இடத்தில் நேரடியான பொருள் கொள்ள தடை இருந்தால் தவிர, மற்ற சமயங்களில் நேரடியான பொருளையே கொள்ள வேண்டும்.

பன்றியின் இறைச்சி விலக்கப்பட்டுள்ளது என்ற வாக்கியம் அல்லாஹ் சட்டத்தைக் கூறும் வாக்கியமாகும். பன்றியின் அனைத்துப் பாகங்களும் விலக்கபட்டிருந்தால் இந்த இடத்தில் ‘பன்றி விலக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்க முடியும். குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கும் பன்றியின் மாமிசம் என்பதைக் கூறத் தேவையில்லை. எனவே அறிஞர்களின் இந்த விளக்கமும் ஏற்புடையதான இல்லை.

அப்படியானால் பன்றியின் இறைச்சி தவிர ஏனைய பாகங்களை உண்ணலாமா? என்ற கேள்விக்கு என்ன விடை?

‘ஹலால் தெளிவானது. ஹராமும் தெளிவானது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்கிடமானவைகளும் உள்ளன. அவற்றைப் பெரும்பாலான மக்கள் அறியமாட்டார்கள். யார் சந்தேகத்திற்கிடமானவைகளை விட்டும் விலக்கி கொள்கிறாரோ அவர் தமது மானத்தையும் மார்க்கத்தையும் காத்துக் கொண்டார். யார் சந்தேகத்திற் கிடமானவைகளைச் செய்கிறாரோ வேலியோரத்தில் (கால்நடைகளை) மேய்ப்பவர் போன்றவர். சில நேரங்களில் வேலிக்குள்ளேயும் மேய்ந்து விடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

மேற்கண்ட குர்ஆன் வசனத்திலும் ஏனைய வசனங்களிலும் பன்றியின் இறைச்சி என்று குறிப்பிடப் பட்டாலும், சில சமயங்களில் பன்றியின் இறைச்சி என்பது அதன் ஏனைய பாகங்களுக்கும் கூறப்படுவதால் பேணுதல் அடிப்படையில் பன்றியின் எல்லாப் பாகங்களையும் விட்டு விலகிக் கொள்வதே சிறந்ததாகும். நேரடியான சான்றின் அடிப்படையில் இவற்றை உண்ணக் கூடாது என்று கூற முடியாவிட்டாலும் பேணுதல் என்ற அடிப்படையிலேயே அவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் ‘பன்றி விற்பது ஹராம்’ என்ற ஹதீஸின் அடிப்டையில் பன்றியின் அனைத்து பாகங்களும் ஹராமாகும். நாம் மேலே கூறிய பேணுதலுக்காக பன்றியின் எல்லா பாகங்களையும் விட்டு விலகிக் கொள்வதே சிறந்தது என்பதும் அடிபட்டுப் போகிறது.