‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவற்றை எப்போது உண்ணலாம்…?

விலக்கப்பட்ட உணவுகளான தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றை கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் இவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது இதுபற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? இதை உண்ணாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப் படுவது தான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர்.

இதை உண்ணாவிட்டால் இறந்து விடுவோம் என்ற சிலையை ஒருவர் அடைவது தான் நிர்பந்தம் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒருவர் அன்றாடம் தனக்கும், தன் குடும்பத்துக்கும் போதிய உணவைப் பெறாமலிருப்பதும் நிர்பந்தம் தான் என்று வேறு சிலர் கூறுகின்றனர். முதலிரண்டு நிலைகளையும் நிர்பந்தம் என ஏற்றுக் கொள்ளும் இவர்கள் நிர்பந்தத்திற்கு இன்னும் விரிந்த பொருளைக் கொடுக்கின்றனர்.

நபி வழியில் ஆராயும் போது இந்த மூன்றாவது கருத்துத்தான் சரியானது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. பிறரால் நிர்பந்திக்கப்படுபவரும் உயிர் போகும் நிலை அடைந்தவரும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்பதைப் போலவே அன்றாட உணவுக்கு ‘வழியில்லாதவர்களும் விலக்கப்பட்டவற்றை உண்ணலாம் என்ற முடிவுக்கு அனேக சான்றுகள் கிடைக்கின்றன.

ஓர் ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு (தானியக்) கதிரை எடுத்து உதிர்த்து சாப்பிட்டேன் எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்து விட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று விபரம் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தோட்டத்திற்குரியவரிடம் இவர் பசியோடு இருந்த போது இவருக்கு நீர் உணவளிக்க வில்லை. இவர் அறியாதவராக இருந்த போது இவருக்கு (திருடக்கூடாது) என்று கற்றுக் கொடுக்க வில்லை என்றார்கள். மேலும் எனது ஆடையை என்னிடம் திருப்பித் தருமாறு அவருக்குக் கட்டளையிட்டனர். மேலும் எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவு தருமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (அறிவிப்பவர்: அப்பாத் பின் ஷரஹ் பீல் (ரலி), நூல்: இப்னுமாஜா)

இந்த நபித்தோழர் எவராலும் நிர்பந்திக்கப்பட வில்லை. சாகும் நிலையையும் அடைந்திருக்க வில்லை. போதுமான உணவு கிடைக்காத நிலையில் – பஞ்சத்தில் அடிபட்ட நிலையில் – தான் வருகிறார். பிறரது தோட்டத்தில் நுழைந்து அதிலுள்ளவற்றை உண்பதும் சேகரிப்பதும் மார்க்கத்தில் விலக்கப்பட்டிருந்தும் இவர் அவ்வாறு செய்ததற்காகக் கண்டிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. தண்டித்த தோட்ட உரிமையாளரைத்தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தனர். அவருக்கோ போதுமான உணவுகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

இதிலிருந்து நிர்பந்தம் என்பதற்கு உரிய இலக்கணத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. அன்றாட உணவு கிடைக்காமல் இருப்பதும் நிர்பந்தம் தான் என்பதற்கு இது சான்றாக உள்ளது.

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் தோன்றலாம்.

இந்த நபித்தோழர் சாப்பிட்ட தானியக் கதிர் பொதுவாக அனுமதிக்கப்பட்ட உணவாகும். அது வந்து சேரும் வழி முறையற்றதாக உள்ளதால் தான் ஹராம் என்ற நிலையை அடைகிறது. இதே தானியத்தை உரிமையாளரிடம் கேட்டுப் பெற்றால் – விலைக்கு வாங்கினால் – அது ஹராமாக ஆகப் போவதில்லை.

ஆனால் தாமாகச் செத்தவை போன்றவை எல்லா நிலையிலும் ஹராமாக்கப்பட்டுள்ளது. திருடினாலும் அது ஹராம். விலை கொடுத்து வாங்கினாலும் அது ஹராம். எனவே இந்த வசனத்தில் கூறப்படும் நிர்ப்பந்தத்திற்கு இது விளக்கமாக முடியாது என்பதே அந்த சந்தேகம்.

அந்தக் கேள்வியில் ஓரளவு நியாயமிருந்தாலும் வேறு பல ஆதாரங்கள் இருப்பதால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் எங்களுக்குத் தாமாகச் செத்தவை ஹலாலாகும்’ என்று நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘காலையில் அருந்தும் பாலையும் மாலையில் அருந்தும் பாலையும் நீங்கள் பெற்றுக் கொள்ளா விட்டால் – தாவிர உணவையும் பெற்றுக் கொள்ளா விட்டால் அதை உண்ணலாம்’ என்றனர். (அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைஸீ (ரலி), நூல்: அஹ்மத்)

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு – பால் போன்ற திரவ உணவு – கூட கிடைக்காதவர்கள், எந்தத் தாவரமும் கிடைக்காதவர்கள் விலக்கப்பட்டதை உண்ணலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கிடைக்கவில்லை என்பது அப்பொருள் அந்தப் பகுதியில் இல்லாதிருப்பதையும் குறிக்கும் கிடைத்தாலும் வாங்கும் சக்தியில்லாமல் இருப்பதையும் குறிக்கும்.

காலையிலும் மாலையிலும் அருந்தும் பால் கிடைக்காத போது என்பதை பசியைப் போக்கும் அளவுக்குப் பால் கிடைக்காத போது என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு குறைந்த அளவுக்கு இரண்டு வேளை பால் கிடைக்கிறது, அது அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை என்றால் அவரும் கூட நிர்பந்தத்திற்கு ஆளானவரே. அவரும் விலக்கப்பட்ட உணவை உண்ணலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘தாமாகச் செத்தவை எப்போது எங்களுக்கு ஹலாலாகும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் உணவு என்ன?’ எனக் கேட்டனர். ‘நாங்கள் காலையிலும் மாலையிலும் (சிறிதளவு) பால் அருந்துவோம்’ என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது தானே பசி என்பது, எனக் கூறி விட்டு, தாமாகச் செத்தவற்றை அந்த நிலையில் எங்களுக்கு ஹலாலாக்கினார்கள். (அறிவிப்பவர்: ஃபுஜைவு அல் ஆமிரீ (ரலி), நூல்: அபூதாவூத்)

முந்தைய ஹதீஸில் இருவேளைப் பால் கிடைத்தால் அது நிர்பந்த நிலையாகாது என்று கூறப்படுகின்றது. இந்த ஹதீஸில் இருவேளைப்பால் மட்டுமே கிடைப்பது நிர்பந்தம் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் முரண்பட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிறு நிரம்பக் கூடிய அளவுக்குப் பால் கிடைப்பதை முந்தைய ஹதீஸ் கூறுகிறது. வயிறு நிரம்பாத அளவுக்கு குறைந்த அளவு பால் கிடைப்பதை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இரண்டு நபிமொழிகளுக்கிடையே முரண்பாடு கற்பிப்பதாகவும ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பதாகவும் அமையும். இரண்டில் எதையும் மறுக்காமல் ஏற்பதென்றால் இவ்வாறுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் ‘ஹர்ரா’ எனுமிடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் இன்னொரு மனிதர் வந்து ‘எனது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதை நீர் கண்டால், பிடித்து வைத்துக் கொள்வீராக’ எனக் கூறினார். (குடும்பத்துடன் தங்கியிருந்த) அந்த மனிதர் அந்த ஒட்டகத்தை கண்டார். உரிமையாளரைக் காணவில்லை. (அந்த ஒட்டகத்தை பிடித்து வைத்துக் கொண்டார்) அந்த ஒட்டகம் நோயுற்றது. இதை அறுப்பீராக என்று அவரது மனைவி கூறிய போது அவர் மறுத்து விட்டார். ஒட்டகம் செத்து விட்டது. அப்போது அவரது மனைவி ‘இதன் தோலை உரிப்பீராக! நாமும் சாப்பிட்டு இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்துக் கொள்வோம்’ எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் ‘நபி (ஸல்) அவர்களிடம் கேட்காமல் செய்ய மாட்டேன்’ என்று கூறி விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இது பற்றிக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘பிறரிடம் தேவையாகாத அளவுக்கு உமக்கு வசதி இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘அப்படியானால் அதை உண்ணுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர் வந்தார். அவரிடம் இந்த மனிதர் விபரத்தைக் கூறினார். ‘இதை நீர் அறுத்திருக்கக் கூடாதா?’ என்று அவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர் ‘(நீர் என்னைத் தப்பாக நினைத்து விடுவீர் என்று நான் வெட்கமடைந்தேன். (அதனால் அறுக்க வில்லை) என விடையளித்தார். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: அபூதாவூத்)

இந்த மனிதரும் இவரது குடும்பத்தினரும் சாகும் நிலையில் இருக்கவில்லை. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் போதிய வருமானம் கிடைக்காதவராகவே இருந்துள்ளார். அத்தகைய நிலையில் இருந்தவருக்கு தாமாகச் செத்தவற்றை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அன்றாடம் இருவேளை உணவு கிடைக்காதவர்கள், சத்துள்ள திரவ உணவுகூட கிடைக்காதவர்கள் அனைவரும் நிர்பந்தத்திற்கு ஆளானவர்களே. இதைத்தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

உயிர் போகும் நிலையை அடைவது தான் நிர்பந்த நிலை எனக் கூறுவது ஆதாரமற்றதும் சாத்தியமற்றதுமாகும். உயிர் போகும் நிலையை அடைந்தவன் தாமாகச் செத்தவற்றை, விலக்கப்பட்டவற்றைத் தேடிச் செல்லும் அளவுக்குச் சக்தி பெற மாட்டான். அவனால் எழுந்து நிற்கக் கூட இயலாது. இத்தகைய நிலையில் உள்ளவனுக்கு இந்த அனுமதியால் எந்தப் பயனும் இல்லை. அல்லாஹ்வின் இந்த அனுமதி அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.

மேலும் பல நாட்கள் உணவு கிடைக்காமல் சாகும் நிலையை அடைந்து படுக்கையில் விழுந்தவனின் குடல் மாமிசத்தைச் சீரணம் செய்யும் நிலையில் இருக்காது. அவனால் அதைச் சாப்பிடவும் இயலாது. திரவ உணவுகள் மூலம் தன்னையும் குடலையும் திடப்படுத்திக் கொண்ட பின்பே மாமிசத்தை உட்கொள்ள முடியும். இந்தக் காரணத்தினாலும் இந்த விளக்கம் ஏற்க முடியாததாக உள்ளது.

அல்லாஹ்வின் ஒன்றை அனுமதிக்கிறான் என்றால் அது சாத்தியமாக வேண்டும். சாத்தியமில்லாதவைகளை அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். அனுமதிப்பதில் எந்தப் பயனும் இருக்காது. எனவே மூன்றாவது கருத்தே அறிவுக்குப் பொருத்தமாகவும் நடைமுறைப்படுத்த ஏற்றதாகவும், தக்க ஆதாரங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அல்லாஹ்வின் தூதருடைய விளக்கத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வோர் இந்த முடிவுக்குத் தான் வர முடியும்.

எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளின் நிலையை நாம் அறிவோம். கூழுக்கும் பாலுக்கும் வழியின்றி எலும்பும் தோலுமாக மக்கள் காட்சியளிப்பதை தொலைக்காட்சி வழியாக நாம் அறிகிறோம். இந்த மக்களுக்கு எந்த உணவும் தடுக்கப்பட்டதன்று. இதை அம்மக்கள் விளங்கி கிடைப்பதையெல்லாம் உண்டால் இந்த அவலநிலையிலிருந்து விடுபடுவார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்தும் இந்தச் சலுகையை அவர்கள் புரிந்து கொள்ளாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிர்பந்தத்திற்கு ஆளானோர் விலக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும்’ என்பதே அந்த இரு நிபந்தனைகள். தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக் கூடாது. பஞ்சத்தில் அடிபட்ட இந்தப் பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.

நிர்பந்தமான நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக் கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பி இருந்து கொண்டு விலக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும். இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்பந்த நிலையை அடைந்தவர்கள் இந்த வசனத்தில் விலக்கப்பட்டவற்றையும உண்ணலாம். ஏனைய ஆதாரங்கள் மூலம் விலக்கப்பட்டவற்றையும் உண்ணலாம் அதில் எந்தக் குற்றமுமில்லை.