‘நம்பிக்கையாளர்களே! சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் என்ற அடிப்படையில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பழி தீர்ப்பது உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனா(கிய கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்பட்டால் நல்ல முறையைப் பின்பற்றி அழகிய முறையில் (நஷ்ட ஈட்டை) வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் அருளுமாகும். ஆகவே இதன் பிறகு யார் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு கடுமையான வேதனை உண்டு’. (அல்குர்ஆன் 2:178)

‘அறிவுடையோரே! இவ்வாறு பழி தீர்ப்பதில் உங்களுக்கு வாழ்க்கை(க்கு உத்தரவாதம்) உள்ளது. இதன் மூலம் நீங்கள் (இறை) அச்சமுடையோர் ஆகலாம்’. (அல்குர்ஆன் 2:179)

இந்த உலகம் தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிக்கலான பிரச்சனைக்கு இவ்வசனங்கள் தெளிவான தீர்வைத் தருகின்றன. மனித உயிர்கள் சர்வ சாதாரணமாகவும் அற்பக் காரணங்களுக்காகவும், காரணங்கள் ஏதுமின்றி கூறிக்காகவும் பறிக்கப்பட்டு வருவதை அன்றாடம் காண்கிறோம்.

அரசியல்வாதிகள், ஆட்சியிலிருப்போர், காவல் துறையினர் கூட தங்கள் எதிரிகளை ஆள் வைத்துக் கொலை செய்யும் அவலத்தை நாம் காண்கிறோம்.

இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட எந்தத் திட்டமும் உருப்படியான தீர்வைத் தரவில்லை. புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களால் நிலைமை மேலும் மோசமாகிப் போய் விட்டது என்பது தான் இதனால் ஏற்பட்ட பலன்.

குற்றங்கள் அதிகரிக்கின்றன. மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்றால் அதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்துக் களையெடுக்க வேண்டும்.

யாரைக் கொலை செய்தாலும் எத்தனைக் கொலைகள் செய்தாலும் அதனால் கொன்றவனுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்கும் சட்டங்கள் தான் உலகில் பரவலாக அமுல் படுத்தப்படுகின்றன.

கொலையாளிகளுக்கு இரக்கம் காட்டுவது தான் மனிதாபிமானத்தின் அடையாளம் என்று இவர்கள் கருதுகின்றனர். இந்தக் கொலையாளிகள் மனிதாபிமானமின்றி பல உயிர்களைப் பறித்துள்ளனர் என்பதோ, இவர்கள் உயிருடன் நடமாடினால் மேலும் பல உயிர்களைப் பறிப்பார்கள் என்பதோ இவர்களின் நினைவுக்கு வருவதில்லை.

குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலை.

திருட்டுக் கொடுத்தவனின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு தான் திருடனுக்குத் தண்டனை வழங்க வேண்டும். திருடனின் கையை வெட்டுவது வெளியிலிருந்து பார்ப்பவனுக்குக் கொடுமையாகத் தோன்றினாலும் திருட்டுக் கொடுத்தவன் இதுதான் சரியான தண்டனை என்று கூறுவான்.

ஒருவன் கொலை செய்யப்பட்டால் அவனது வாரிசுகளின் உணர்வை – அவனது கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வை – மதிக்க வேண்டும். அதனால் தான் மேற்கண்ட வசனத்தில் கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகளிடம் அந்தப் பொறுப்பை இஸ்லாம் வழங்குகின்றது.

கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகள் விரும்பினால் கொலை செய்தவனை மன்னித்து உரிய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம். கொலைக்குக் கொலைதான் வேண்டும் என வாரிசுகள் விரும்பினால் அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஏராளமான கொலை செய்தவர்களை அவர்களுடன் எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ஜனாதிபதி மன்னிக்கலாம், யார் யாருக்கோ பிறந்தநாள் வருகிறது என்பதற்காக கொலையாளிகளின் தண்டனை குறைக்கப்படலாம் என்பது போன்ற பொருத்தமில்லாத சட்டங்கள் தான் உலகில் அமுலில் உள்ளன.

இத்தகைய சட்டங்கள் பாதிக்கப்பட்டவனின் உரிமையையும் உணர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. பழிவாங்க வேண்டும் என்று அவனைத் தூண்டுகின்றது. சட்டத்தைத் தன் கையில் எடுக்க வேண்டும் என்று அவனை நிர்பந்திக்கிறது. ஆட்சியாளர்கள் வழங்க மறுத்த தண்டனையை பாதிக்கப்பட்டவன் வழங்கி விடுகிறான். அத்துடன் நின்று விடுவதில்லை. இந்தக் கொலைக்குப் பழி வாங்குவதற்காக இவனது வாரிசுகள் அவனைக் கொல்கின்றனர். முடிவே இல்லாமல் பல தலைமுறைகளுக்கு இது தொடர்கின்றது. கொலைகள் பெருகுவதற்கு இதுவும் முக்கியமான காரணமாகும்.

கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகள் மன்னித்துவிடும் போது பழிவாங்கும் எண்ணம் ஏற்படுவதில்லை. மன்னிக்க விரும்பாமல் தண்டிக்க விரும்பினால் அதை ஆட்சியாளர்கள் மூலம் நிறைவேற்றும் போது பழிவாங்கும் போக்குத் தொடர்வதில்லை.

கொலை செய்தால் தன்னுடைய உயிர் பறிக்கப்படும் என்ற அச்சம் ஒவ்வொருவனுக்கும் இருந்தால் எவ்வளவு தான் ஆத்திரமூட்டப்பட்டாலும் ஒருவன் கொலை செய்ய மாட்டான். கொலைகாரர்களுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறை வேற்றப்படுவதன் மூலம் மற்றவர்கள் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.

இதனால் தான் ‘பழிக்குப் பழி வாங்குவதில் உயிருக்கு உத்தரவாதம் உள்ளது’ என்று இறைவன் கூறுகிறான்.

மனிதச் சட்டங்களால் சட்டம் ஒழுங்கையும் மனிதர்களின் உயிர் உடைமைகளையும் காக்க முடியவில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த நடுநிலையாளர்கள் இஸ்லாமியச் சட்டத்தைக் கோர ஆரம்பித்து விட்டனர்.

அரபு நாடுகளில் உள்ளது போன்ற சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்று அறிவு ஜீவிகள் கூற ஆரம்பித்து விட்டனர். நீண்ட கால அனுபவத்திற்குப் பிறகு மனிதனுக்குத் தோன்றக் கூடிய தீர்வை அன்றே திருக்குர்ஆன் கூறி விடுகின்றது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு உயிர் பறிக்கப்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் இது போன்ற தண்டனைகளில் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் உள்ளது என்பது தான் உண்மை.