‘உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை’. (அல்குர்ஆன் 2:190)

‘அவர்களைக் காணும் இடங்களில் அவர்களைக் கொல்லுங்கள்! உங்களை அவர்கள் எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்! குழப்பம், கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹரமில் அவர்கள் உங்களுடன் போரிடாத வரையில் அவர்களுடன் நீங்கள் போரிடாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போர் செய்தால் அவர்களுடன் நீங்களும் போர் செய்யுங்கள்! இதுதான் இத்தகைய நிராகரிப்பாளர்களின் கூலியாகும்’. (அல்குர்ஆன் 2:191)

‘எனினும் அவர்கள் விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்’. (அல்குர்ஆன் 2:192)

‘இம்மார்க்கம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும்வரை – குழப்பம் இல்லாது போகும் வரை – அவர்களுடன் போராடுங்கள்! அவர்கள் விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்கள் தவிர மற்றவர்கள் மீது வரம்பு மீறுதல் கூடாது’. (அல்குர்ஆன் 2:193)

‘புனித மாதம், புனித மாதத்திற்கு ஈடானதாகும். எல்லாப் புனிதங்களுக்கும் ஈடு உண்டு. (அதாவது ஒரு தரப்பானதன்று) எனவே யாரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் எந்த அளவு உங்கள் மீது வரம்பு மீறினாரோ அதே அளவுக்கு அவர் மீது நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இறையச்சமுடைய மக்களுடனேயே அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)

இஸ்லாத்தை உரிய முறையில் விளங்காதவர்களும், விளங்கியிருந்தும் இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்களும் செய்து வரும் தப்புப் பிரச்சாரத்தை இந்த வசனங்கள் முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளன.

‘இஸ்லாம், முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்லக் கட்டளையிடுகின்றது’ என்ற அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் நீண்ட காலமாகச் செய்யப்பட்டு வருகின்றது. இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான கொள்கைகளின் பால் மற்றவர்கள் கவரப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நஞ்சென அதை வெறுக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் இரண்டாவது வசனத்தை ‘அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்’ என்ற வாசகத்தை தமது பொய்ப் பிரச்சாரத்திற்கு ஆதாரமாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ‘அவர்கள்’ என்று அங்கே கூறப்படுவது உலகில் வாழும் முஸ்லிமல்லாத எல்லா மக்களையும் தான் என்று இவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.

உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை அவர்களிடம் இருந்தால், சிந்திக்கும் திறன் சிறிதளவாவது அவர்களிடம் இருந்தால் இத்தகைய வாதத்தை அவர்கள் எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

எந்த வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு, இத்தகைய வாதத்தை எழுப்புகிறார்களோ, அந்த வாசகத்துக்கு முன்னர் கூறப்பட்டது என்ன? அதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் கூறப்படுவது என்ன? என்பதைக் கவனித்தால் அவர்கள் தமது வாதத்திலுள்ள அபத்தங்களை உணர்வார்கள்.

‘அவர்களைக் கொல்லுங்கள்’ என்ற வாசகத்தில் கூறப்படும் ‘அவர்கள்’ என்போர் யார்? அவன், இவன், அது, இது, அவர்கள், இவர்கள், அவை போன்ற சொற்களைத் தனியாக பயன்படுத்த முடியாது. முன்னர் எதைப் பற்றியாவது எவரைப் பற்றியாவது கூறி விட்டு அதை மீண்டும் குறிப்பிடுவதற்கே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

திடீரென்று ஒருவரிடம் சென்று, ‘அவர்கள் வந்தார்கள்’ என்று கூறினால் எவர்கள் என்பதை அவரால் விளங்க முடியாது. ஏற்கனவே கூறப்பட்டவர்களைக் குறித்து தான் ‘அவர்கள்’ என்ற வாசகத்தைப் பயன்படுத்த முடியும்.

‘அவர்களைக் கொல்லுங்கள்’ என்ற வசனத்தைப் படிப்பவர்களுக்கு நியாயமான பார்வை இருந்தால் என்ன செய்ய வேண்டும்? யாரைப் பற்றியோ இதற்கு முன்னருள்ள வசனங்களில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு ‘அவர்கள்’ என்பது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இத்தொடரில் நாம் ஆரம்பமாகக் குறிப்பிட்ட வசனத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டும் வசனத்திற்கு முந்தைய வசனத்தில், ‘உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்’ என்று கூறப்படுகின்றது. அவர்கள் என்பதன் பொருள் ‘உங்களுடன் போரிட வருபவர்கள்’ என்பது தான் என எவருக்கும் விளங்கும்.

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவே இல்லை. அமைதியான முறையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அழித்தொழிக்கப் புறப்பட்டுவரும் ஏதிரிகளுடன் போரிடுமாறு தான் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

தன்னையும் தன் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தற்காப்புப் போரில் ஈடுபடுவதை அறிவுடைய மக்கள் குறை கூற மாட்டார்கள்.

வம்புச் சண்டைக்கு வரக் கூடியவர்களிடம் போரிடும் போது கூட இஸ்லாம் வரம்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

‘அவர்கள் உங்களிடம் வரம்புமீறி நடந்து கொண்டால் அதே அளவுக்கு அவர்களிடம் வரம்புமீறுங்கள்’ என்று கூறப்படுவதை குறைமதியாளர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

அமைதியாக இருக்கும் மக்களிடம் வம்புச் சண்டைக்கு வரக்கூடியவர்கள் எந்த அளவுக்கு வரம்பு மீறுகிறார்கள் என்பதைக் கவனித்து அதைவிட அதிகமாகாத வகையில் எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டும் என்று உலகில் எந்த மார்க்கமும் கூறவில்லை.

வரம்பு மீறக்கூடியவர்களுடன் தான் அதுவும் அவர்கள் வரம்பு மீறிய அளவுக்கு போரிட வேண்டுமென்றால் வரம்பு மீறாது தாமுண்டு தம் வேலையுண்டு என்று வாழும் மக்களைத் தாக்க அனுமதி இல்லை என்பதும் இதிலிருந்து தெரிய வருகின்றது.

அவர்கள் விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்கள் மீது தவிர மற்றவர்களிடம் வரம்பு மீறக்கூடாது என்ற வாசகமும் இதே கருத்தைக் கூறுகின்றது.

புனிதமிக்க – போர் செய்வது விலக்கப்பட்ட – கஃபா ஆலயத்தின் எல்லையில் – போரிடக்கூடாது. அந்த இடத்தில் அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களுடன் போர் செய்யுங்கள்! போர் செய்வது விலக்கப்பட்ட மாதங்களில் அவர்களாகப் போரைத் துவக்கினால் நீங்களும் அவர்களுடன் போரிடுங்கள்! என்ற கட்டளையும் இதே கருத்தைக் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த – அவர்களுடன் அடிக்கடி போருக்கு படை திரட்டி வந்த – அவர்களை ஒழிப்பதற்காக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்த குறிப்பிட்ட சமுதாயத்துடன் போர் செய்வதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றனவேயன்றி முஸ்லிமல்லாத எல்லா மக்களையும் என்று கூறவில்லை.

முஸ்லிம், முஸ்லிமல்லாதவன் என்ற அடிப்படையில் போர் செய்வதற்கான இலக்கை இஸ்லாம் நிர்ணயிக்க வில்லை. நீதி, அநீதி என்ற அடிப்படையிலேயே இஸ்லாம் இதைத் தீர்மானிக்கின்றது.

முஸ்லிம்களில் இரண்டு சாரார்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்துங்கள்! அவர்களில் ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரியும் கூட்டத்தினருடன் நீங்கள் போரிடுங்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 49:9)

இவ்வசனத்தில் முஸ்லிம்களுக்கெதிராகப் போரிடுமாறு இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. காரணம் அந்த முஸ்லிம்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பது தான்.

யார் தமது உடமையைக் காக்கும் போரில் கொல்லப்படுகிறாரோ அவர் உயிர் தியாகியாவார். யார் தமது குடும்பத்தினரைக் காக்கும் போரில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார். என்பது நபிமொழி.

அக்கிரமத்துக்கு எதிராகத்தான் போரிட வேண்டும், முஸ்லிம் முஸ்லிமல்லாதவன் என்ற அடிப்படையில் போருக்குத் தயாராகக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் அரபு தீபகற்பத்தில் முஸ்லிமல்லாத பல்வேறு இனத்தவர் அமைதியுடன் வாழ்ந்து வந்தனர். முஸ்லிமல்லாத அத்தனை பேரையும் கொல்லுமாறு இஸ்லாம் கட்டளையிட்டிருந்தால் நபி (ஸல்) அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட அரபு நாட்டில் முஸ்லிமல்லாத ஒருவர் கூட கொல்லப்படாதிருக்க மாட்டார்.

போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களையும் சிறுவர்களையும் (போரில் கூட) கொல்லலாகாது’ என்று தடை விதித்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

போரிடும் போது உடல்களைச் சிதைக்காதீர்கள்! குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! மதகுருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம்)

போர்க்களத்தில் கூட புதுநெறியைப் புகுத்திய இஸ்லாம் மார்க்கத்தில் – போரில் கூட வரம்பு மீறக்கூடாது என உணர்த்திய மார்க்கத்தில் – பிற மதத்தவர்களைக் கொன்று விடுங்கள் என்று கூறுவதற்குச் சாத்தியமுள்ளதா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆக எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாம் காபிர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றதோ அந்த வசனமும் அதற்கு முன், பின்னுள்ள வசனங்களும் அவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளன என்பதே உண்மையாகும்.