‘(நபியே) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் என்னிடமே கேட்கட்டும்! என்னையே நம்பட்டும்! அவர்கள் நேர்வழியடைவார்கள்’ (எனக் கூறுவீராக). (அல்குர்ஆன் 2:186)

முஸ்லிம்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பலவற்றை இந்த வசனம் உள்ளடக்கி நிற்கின்றது. முஸ்லிம்கள் இணை வைத்தலின்பால் சென்று விடாமல் அவர்களை காக்கும் அரணாகவும் இவ்வசனம் அமைந்துள்ளது. கடவுளின் இலக்கணத்தை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் வசனமாகவும் இவ்வசனம் அமைந்துள்ளது.

கடவுளை நம்பக்கூடிய மனிதர்கள், மனிதர்களைக் கடவுள்களாகக் கருதி அவர்களின் கால்களில் விழுந்து கிடப்பதை நாம் காண்கிறோம். உயிரற்ற ஜடப்பொருட்களைக் கூட வணங்கி வழிபடக் கூடியவர்களை நாம் காண்கிறோம். கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி, இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுவதையும் நாம் காண்கிறோம்.

முஸ்லிமல்லாத மக்கள் தான் இப்படி நடக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களில் சிலரும் கூட இவ்வாறு நடந்து கொள்கின்றனர். தங்கள் தேவைகளை இறைவனிடம் கேட்காமல் இறந்து விட்ட நல்லடியார்களிடம் கேட்கின்றனர். உயிருடன் உள்ள பெரியார்களிடம் கேட்கின்றனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? கடவுளின் மீதும் அவனது ஆற்றலின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது காரணமா என்றால் நிச்சயமாக இல்லை. ‘கடவுள் மிகப் பெரியவன், பேராற்றலுடையவன், நினைத்ததை முடிப்பவன், ஆனாலும் மிகச் சாதாரண நிலையில் உள்ள நாம் அந்த மிகப் பெரியவனை நெருங்க முடியாது. அவனை நெருங்குவதற்கும் நேரடியாகப் பேசுவதற்கும் நமக்குத் தகுதி கிடையாது.

அவனை விட்டு நாம் வெகு தொலைவில் இருப்பதால் அவனும் நம்மைவிட்டு வெகுதொலைவில் இருக்கிறான்’ என்று மக்கள் நம்புவது தான் இதற்கு அடிப்படைக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில்; வாழ்ந்த முஸ்லிமல்லாத மக்கள் ஏகு இறைவனை நம்பினார்கள். அவனது வல்லமையை ஒப்புக் கொண்டிருந்தார்கள். அதில் அவர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இருந்ததில்லை. இதைப் பின்வரும் வசனங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

மேலும் (நபியே!) நீர் அவர்களிடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்துச் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்? என்று கேட்டால், ‘அல்லாஹ்’ என்றே உறுதியாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திசைதிருப்பப் படுகிறார்கள்? (அல்குர்ஆன் 29:61)

‘வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள் அல்லாஹ் என்றே நிச்சயமாகக் கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 31:25)

‘எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் உள்ளது? யார் பாதுகாப்பவனாக – பிறரால் பாதுகாக்க முடியாதவனாக உள்ளவன் யார்? நீங்கள் அறிந்தால் (கூறுங்கள்) என்று (நபியே) கேட்பீராக! அதற்கவர்கள் ‘அல்லாஹ்வுக்கே’ என்று விடையளிப்பார்கள்’. (அல்குர்ஆன் 23:88,89)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களும் கடவுள் நம்பிக்கையுடைய அனைத்து மக்களும் கடவுளைப் பற்றி இப்படித்தான் நம்புகிறார்கள். ஆனாலும் கூட அந்தப் பேராற்றலுடைய கடவுளை விடுத்து மற்றவர்களை வணங்குவதும், அவர்களிடம் பிரார்த்தனை செய்வதும் ஏன்? கடவுள் நம்மைவிட்டும் வெகு தொலைவில் இருக்கிறான். அவனை நம்மால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்று நம்புவதே இதற்குக் காரணமாகும்.

‘எங்களை அல்லாஹ்வின்பால் இவர்கள் நெருக்க மாக்குவார்கள் என்பதற்காகவே இவர்களை வணங்குகிறோம்’ (அல்குர்ஆன் 39:3) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

கடவுள் மனிதனை விட்டும் வெகுதொலைவில் இருப்பதாக நம்புவது தான் பலதெய்வ வழிபாட்டுக்கும், இறைவழிபாடு புறக்கணிக்கப் படுவதற்கும் அடிப்படைக் காரணம். அந்தக் காரணத்தை களையெடுப்பதற்காகத் தான் ‘நான் அருகிலிருக்கிறேன்’ என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

எந்த அளவுக்கு அருகில் இருக்கிறான்? பத்தடி தூரத்தில் இருக்கிறானா? பார்க்கும் தூரத்தில் இருக்கிறானா? எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறானா? இதைப் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

‘நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடறி நரம்பைவிட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம்’. (அல்குர்ஆன் 50:16)

கடவுள் தொலைவில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சிலைகளின் முன்னே நிற்பவர்கள், சமாதிகளுக்கு முன்னே மண்டியிடுபவர்கள், சாமியார்களின் கால்களில் விழுபவர்கள் இதை நெருக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவனோ ஒரு மனிதனின் பிடறி நரம்பைவிட நெருக்கத்தில் இருக்கிறான்.

ஒரு மகானின் முன்னே ஒருவன் நிற்கிறான். அவர் தனக்கு மிகமிக அருகில் இருப்பதாகவும், கடவுள் அவரைவிட தொலைவில் இருப்பதாகவும் எண்ணுகிறான். ஆனால் கடவுள், கண்முன்னே நிற்கும் மகானைவிட அந்த மனிதனுக்கு நெருக்கமாக இருக்கிறான். இடைவெளியைக் கற்பனை செய்ய முடியாத நெருக்கத்தில் இருக்கிறான் என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவு படுத்துகிறான்.

கடவுள் நெருக்கமாக இருப்பது உண்மைதான். ஆயினும் நாங்கள் அவனிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வில்லையே! அவனது கட்டளைகள் பலவற்றை மீறியுள்ளோமே! நாங்கள் நேரடியாகக் கேட்டால் எங்களை அவன் கோபித்துக் கொள்வானே! அவனது கோபத்தைக் குளிரச் செய்வதற்குத்தான் இடைத்தரகர்களை, சாமியார்களை – ஷேக்மார்களை நாங்கள் நாட வேண்டியுள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த வாதம் போலித்தனமானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் ‘நான் அருகில் இருக்கிறேன், அழைப்பவனின் அழைப்புக்கு பதிலளிக்கிறேன்’ எனவும் சேர்த்துச் சொல்கிறான். அழைப்பவன் எவனாயினும் அவனுக்குப் பதிலளிக்கிறேன் என்று பொது அழைப்பு விடுக்கிறான். மகான்கள் மட்டும் நெருங்கும் வகையில் நான் இருக்க வில்லை, சாதாரண மனிதனும் நெருங்கும் வகையில் நான் இருக்கிறேன் என்று கூறுகிறான்.

‘தமக்குத்தாமே வரம்புமீறி நடந்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன். மிக்கக் கருணை உடையவன்’. (அல்குர்ஆன் 39:53)

‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்! நிச்சயமாக காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பார்கள்’. (அல்குர்ஆன் 12:87)

இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எவ்வளவு பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டவனாயினும் அதற்காக இறைவனை விட்டு விலக வேண்டாம். இறைவன் தரமாட்டான் என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். எவ்வளவு பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டாலும் அவற்றையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அவர்களும் அவனிடத்தில் நேரடியாக கேட்கலாம் என்று மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

தனக்குத் தகுதியில்லை என்று எண்ணி இறைவனை விடுத்து மற்றவர்களை நாடக்கூடாது எனவும் உணர்த்துகிறான்.

கடவுள் என்மேல் கோபமாக இருக்கிறான், அதனால் கடவுளுக்கு நேருக்கமானவர்களைத் தேடி ஓடுகிறேன் என்று கூறுவது அறிவுக்கும் ஏற்புடையதாக இல்லை.

கடவுள் கோபமாக இருக்கிறான் என்பதால் கடவுளுக்கு நேருக்கமானவர்களைத் தேமுவதாகக் கூறினால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்னின்ன மனிதர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று இறைவன் கூறினானா? இதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

உண்மை நிலையை அறிய முடியாத மனிதர்களைக் குளிரச் செய்வதற்காக, அவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அவர்களுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதில் அர்த்தமிருக்கிறது. அவர்கள் பக்குவமாக – கூடுதலாகவும் – அவரிடம் கூறி, கோபத்தைத் தணிக்க முயலக்கூடும். மனிதனில் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக்கூட அறிந்து வைத்திருக்கும் இறைவனுக்கு இத்தகைய இடைத்தரகர்களின் தேவை என்ன? இதைச் சிந்தித்தாலும், இந்தப் போக்கை மக்கள் மாற்றிக் கொள்வார்கள்.