‘(நபியே) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் என்னிடமே கேட்கட்டும்! என்னையே நம்பட்டும்! அவர்கள் நேர்வழியடைவார்கள்’ (எனக் கூறுவீராக). (அல்குர்ஆன் 2:186)

இறைவன் நெருக்கமாக – மிக நெருக்கமாக – பிடரி நரம்பைவிட நெருக்கமாக இருக்கிறான் என்பதை அத்வைதக் கொள்கைக்குச் சான்றாகச் சில அறிவீனர்கள் பயன்படுத்துகின்றனர். பிடரி நரம்பு என்பது அந்த மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதைவிட நெருக்கமாக இறைவன் இருப்பதாகக் கூறுவதால் மனிதனுக்குள்ளே தான் கடவுள் இருக்கிறான். அதாவது மனிதனே கடவுளாகி விடுகிறான் என்றெல்லாம் இந்த அறிவீனர்கள் விளக்கம் தருகிறார்கள். இப்படி விபரீதமான விளக்கம் தரக்கூடியவர்களுக்கு இந்த வசனத்திலேயே பதிலும் மறுப்பும் இருப்பதை அவர்கள் உணரவில்லை.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று கூறும் வசனங்கள் பல உள்ளன. அர்ஷில் இருப்பவன், மனிதனின் பிடரி நரம்பை விட அருகில் இருக்கிறான் என்றால் இரண்டும் முரண்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் பிடரிநரம்புக்கு அருகில் அவன் இருந்தால் ஒவ்வொருவனிடமும் ஒரு இறைவன் என்று ஆகிவிடும். பல கோடிக் கடவுள்கள் உளளதாக இதன் பொருள் அமையும். அந்த விபரீதத்தைக் கூட உணராமல் இந்த அறிவிலிகள் மனிதனுக்குள் கடவுள் இருக்கிறான் என்று வாதிடுகின்றனர்.

நான் அருகில் இருக்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு இறைவன் நிறுத்தவில்லை. எந்த வகையில் இருக்கிறேன் என்பதையும் விளக்குகிறான். ‘அழைப்பவரின் அழைப்பை ஏற்பதில் அருகில் இருக்கிறேன்’ என்று தெளிவுபடுத்துகிறான். பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனுக்கு நமது குரல் எவ்வளவு தெளிவாகச் சென்றடையுமோ அதைவிடத் தெளிவாக நமது பிரார்த்தனைகள் அவனைச் சென்றடையும் என்பதே இதன் விளக்கமாகும்.

மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பிர்அவ்னிடம் இறைவன் அனுப்பும் போது,

‘நிச்சயமாக நான் உங்கள் இருவருடனும் இருக்கிறேன். (அதாவது அனைத்தையும்) கேட்கிறேன். பார்க்கிறேன்’. (அல்குர்ஆன் 20:46) என்று சொல்லி அனுப்புகிறான். உங்களுடன் இருக்கிறேன் என்பதன் பொருள் உங்களுக்கு நடப்பதை நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்பது தான்.

நான் அருகில் இருக்கிறேன். அழைப்பவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் என்று கூறிய பிறகும் அடக்கத்தலங்களில் போய்த் தங்கள் தேவைகளைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு உண்மையை விளக்கும் போதனைகளைப் பல இடங்களில் இறைவன் கூறுகிறான்.

‘நிச்சயமாக நீர் இறந்தவர்களைச் செவியேற்கும்படிச் செய்ய முடியாது’. (அல்குர்ஆன் 30:52)

‘நிச்சயமாக அல்லாஹ் நாடியவர்களுக்கு கேட்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது’. (அல்குர்ஆன் 35:22)

இறந்தவர்களும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நமக்கு அருகில் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவர்கள் நாம் கூறுவதை செவியுற முடியாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். செவியுறவே முடியாதவர்கள் பிரார்த்தனைக்கு எப்படிப் பதிலளிப்பார்கள் என்பதை சமாதிகளை வழிபடும் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கட்டும்’. (அல்குர்ஆன் 7:194)

‘அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்’. (அல்குர்ஆன் 7:197)

‘அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரம் இல்லை’. (அல்குர்ஆன் 35:13)

‘அல்லாஹ்வை விடுத்து தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும் தனக்கு நன்மை செய்ய முடியாததையும் அவன் அழைக்கிறான். இது தான் (சத்தியத்தை விட்டு) தொலைவாக உள்ள வழிகேடாகும்’. (அல்குர்ஆன் 22:12)

‘கியாமத் நாள்வரை அழைத்தாலும் தனக்குப் பதில் தர முடியாதவர்களை – அல்லாஹ் அல்லாதவர்களை – அழைப்பவனை விட வழிகெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது. அன்றியும் மனிதர்கள் ஒன்று கூட்டப்படும் போது இவர்கள் அவர்களுக்குப் பகைவர்களாக இருப்பர். தங்களை இவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததையும் அவர்கள் மறுத்து விடுவார்கள்’. (அல்குர்ஆன் 46:5,6)

மிக அருகில் இருக்கின்ற – அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற – வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது.

இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள் கொள்கையாகும்.

பல்வேறு தெய்வங்களை – பெரியார்களை வழிபடக்கூடியவன் கடுமையான – தாங்கமுடியாத ஆபத்தைச் சந்திக்கும் போது அவனது வாய், கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச் சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். கழுத்துக்கு சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும், எந்த நிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான் அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருக்குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக விளக்குகிறான்.

‘இன்னும் கடலில் உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டால், அவனையன்றி நீங்கள் யாரை அழைத்தீர்களோ அவர்கள் காணாமல் போய் விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். (அல்குர்ஆன் 17:67)

மனிதனின் உள் மனது இறைவன் மிக அருகில் இருப்பதை ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது.

இறைவன் எல்லா மனிதர்களும் நெருங்கக்கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக்கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தனது சுயமரியாதையை இழக்க மாட்டார்கள். எவர் காலிலும் விழ மாட்டார்கள். காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள். மலஜலத்தை சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள். மதத்தின் பெயரால் சுரண்டப்பட மாட்டார்கள். பக்தியின் பெயராலும் பிள்ளைவரம் என்ற பெயராலும் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள்.

இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக்கூடியவர்கள் எவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள். யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். திருட மாட்டார்கள். கொலை செய்ய மாட்டார்கள். பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள். இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம் ஏராளம்!