‘(நபியே) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் என்னிடமே கேட்கட்டும்! என்னையே நம்பட்டும்! அவர்கள் நேர்வழியடைவார்கள்’ (எனக் கூறுவீராக). (அல்குர்ஆன் 2:186)

இறைவன் மிக அருகில் இருந்தால், அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் – நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரைகுறை நம்பிக்கை உள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டுவிடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைபிடிக்காததும், பிரார்த்தனை ஏரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாகத் திருப்பி அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்திரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகிறது. அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்படக் காரணங்கள் என்ன?

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதிப்படிந்த நிலையில் இறiவா! இறiவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் ஹலாலான முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அவசரப்படுதல்

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு ‘நான் கேட்டேன் கிடைக்க வில்லை’ என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அவன் நமது வேலையாள் அல்ல. அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.

நான் பிரார்த்தனை செய்தேன், அங்கீகரிக்கப்பட வில்லை என்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

பாவமானதைக் கேட்கக் கூடாது

பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. ‘இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு’ என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் எதையாவது அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அதைக் கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவன் பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும் பிரார்த்திக்காது இருக்க வேண்டும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத்)

உறுதியான நம்பிக்கை

நாம் கேட்பதை இறைவனுக்கு நிச்சயம் தர முடியும், நிச்சயம் தருவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும். கேட்டுப் பார்ப்போம்! கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் கேட்கப்படும் துஆக்களும் ஏற்கப்படுவதில்லை.

ஏற்கப்படும் என்று உறுதியாக நம்பி அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்! கவனமற்ற ஈடுபாடு இல்லாத உள்ளங்களிலிருந்து வெளிப்படும் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் கேட்கும் போது கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும். ‘உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே! என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்ப்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.

உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில அவனை நிர்ப்பந்தம் செய்பவன் எவனுமில்லை. என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அனைத்தையும் கேட்க வேண்டும்

சாதாரண சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள். இந்தப் போக்கும் துஆக்கள் ஏற்கப்படாமல் போகக் காரணமாகும்.

செருப்பு அறுந்து விட்டால் நாமே இதை தைக்க முடியும் என்று எண்ணி அவன் அல்லாஹ்வின் உதவியைக் கேட்பதில்லை. குழந்தை வேண்டும் என்றால் அதை மட்டும் அல்லாஹ்விடம் கேட்கிறோம். சின்ன விஷயங்களில் அவனுக்கு அதிகாரம் இல்லை என்று கூறாமல் கூறுகிறோம். சிறியவை, பெரியவை என்று பேதம் பார்க்காமல் அனைத்தையும் அவனிடம் கேட்பவர்களின் துஆக்கள் தாம் அங்கீகரிக்கப்படும்.

நீங்கள் உங்கள் இறைவனிடம் செருப்பு வார் அறுந்து போவது உட்பட அனைத்துத் தேவைகளையும் கேளுங்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பணிவும் அடக்கமும்

நாம் யாரிடம் துஆச் செய்கிறோம் என்பதை உணர்ந்து கேட்க வேண்டும். அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டிருப்பவன் முன்னிலையில் நிற்கிறோம் என்ற உணர்வுடனும், பயத்துடனும், அடக்கத்துடனும் துஆச் செய்ய வேண்டும். சிறிய சப்தத்தையும் செவியுறக் கூடியவனிடம் கேட்கிறோம் என்பதை உணர்ந்து தாழ்ந்த குரலில் கேட்க வேண்டும்.

‘உங்களுடைய இறைவனிடம் பணிவுடனும் அந்தரங்கமாகவும் துஆச் செய்யுங்கள். நிச்சயமாக வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை’. (அல்குர்ஆன் 7:55)

மேடைகளில் பேசுவது போல் அலங்காரமான – அடுக்குமொழி வார்த்தைகளைத் தேடித் துஆ செய்யக் கூடாது. தாழ்ந்த அடிமை, உயர்ந்த எஜமானனிடம் கேட்கும் தோரணையிலேயே துஆச் செய்ய வேண்டும்.

தெரியாததைக் கேட்கக் கூடாது

இறைவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அதிகப்பிரசங்கித் தனமாக நமக்கு அறிவில்லாதவற்றை இறைவனிடம் கேட்கக் கூடாது.

இறைவா! சொர்க்கத்தில் வலது புறத்தில் வெள்ளை மாளிகையை எனக்குத் தா என்று தன் மகன் துஆச் செய்ததை அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) செவியுற்றார்கள். மகனே! அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேள்! நரகத்திலிருந்து பாதுகாப்புத் தேடு! ஏனெனில் தூய்மையிலும், துஆவிலும் வரம்பு மீறக் கூடிய மக்கள் இந்தச் சமுதாயத்தில் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்றார்கள். (நூல்: திர்மிதி)

நீங்கள் கேளுங்கள்! தருகிறேன் என்ற இறைவனின் உறுதி மொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக்கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை.

இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படா விட்டால் அதனால் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்க வில்லை என்று எண்ணிவிடக் கூடாது.

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்கு தெரியாவிட்டாலும் அவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதைவிடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதைவிட அதிக விலையில் வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயைவிட அதிகக் கருணையுடைய இறைவன், அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கு இழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதைவிடச் சிறந்ததை வழங்குவான்.

ஒரு அடியான் பெருஞ் செல்வத்தை கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிட சிறந்ததைக் கொடுப்பான்.

அதுவுமில்லையென்றால் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு அவனைத் தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாகப் பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம்.

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வும், அடியான் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.

அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்கா விட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான். அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான். அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அதைவிட அதிகம் கொடுப்பான்’ என்றார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: அஹ்மத்)

எனவே இறைவன் துஆக்கள் அனைத்தையும் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படும் என்றாலும் அவற்றிலும் கூட ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில பிரார்த்தனைகள் வேறுசில பிரார்த்தனைகளை விட அதிகம் ஒப்புக் கொள்ளப்படக் கூடியதாகும். இதை உரிய முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரவின் கடைசி நேரம்

இரவை மூன்றாக பிரித்து அதில் கடைசி பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.

இரவை மூன்றாக பிரித்து கடைசி பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

கடமையான தொழுகைக்குப் பின்

கடமையான தொழுகைகளை நிறைவேற்றிய பின் கேட்கும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை.

துஆக்களில் அதிகம் ஒப்புக் கொள்ளப்படத் தக்கது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவிலும், கடமையான தொழுகைக்குப் பின்பும் என்று விடையளித்தார்கள். (நூல்: திர்மிதி)

போர்க்களத்தில்

அல்லாஹ்வின் பாதையில் களத்தில் எதிரிகளுடன் மோதும் போதும், பாங்கு சொன்னவுடன் கேட்கும் துஆக்கள் அதிகம் ஒப்புக் கொள்ளப்படும்.

பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க்களத்திலும் (துஆக்கள்) நிராகரிக்கப் படுவதில்லை என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்கள்: அபூதாவூத், தாரிமி, முஅத்தா)

ஸஜ்தாவின் போது

அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை

நமக்கு வேண்டியவருக்கு நாம் நன்மை செய்ய நாடினால், அவருக்கு முன்னிலையில் அவருக்காக துஆச் செய்வதைவிட, அவருக்கு தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு உனக்கும் அதுபோல் கிடைக்கட்டும் எனக் கூறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: முஸ்லிம்)

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ

தந்தை தன் மகனுக்காக செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத்தக்கவை. தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப்பெற வேண்டும். நமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்று துஆக்கள் ஏற்கப்படும். அவை ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகளுக்காக செய்யும் துஆ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

இது போல நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன.

இந்த ஒழுங்குகளைப் பேணி இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள்வானாக!