‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது சந்ததியருக்கு அருளப்பட்டதையும், மூஸா மற்றும் ஈஸாவுக்கு வழங்கப்பட்டதையும் தம் இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதையும் நாங்கள் நம்பினோம் என்றும் அவர்களில் எவரையும் நாங்கள் வேறுபடுத்த மாட்டோம் என்றும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறுங்கள்’. (அல்குர்ஆன் 2:136)

முஸ்லிம்கள் சமுதாயத்தினரில் பெரும்பாலோர் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்ற அல்லது அறவே புரிந்து கொள்ளாத வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வசனத்தில் இறைவன் மூன்று கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.

இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நம்பினோம் எனக் கூற வேண்டும் என்பது முதல் கட்டளை. இதற்கு விளக்கம் தேவையில்லை.

நமக்கு அருளப்பட்ட குர்ஆனையும், இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை), அவரது வழித்தோன்றல்களாக வந்த யூசுப் (அலை) போன்றவர்கள், மூஸா (அலை), ஈஸா (அலை) மற்றும் ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும் நம்பினோம் எனக் கூறுங்கள்! இது இரண்டாவது கட்டளை.

இறைவன் அருளிய வேதங்கள் மொத்தம் நான்கு மட்டுமே என்று சிலர் கூறுவது தவறானது. எல்லா நபிமார்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து வேதங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதை இந்த வசனம் கூறுகிறது.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களிடையே பாரபட்சம் பார்க்க மாட்டோம் எனக் கூறுங்கள் என்பது மூன்றாவது கட்டளை. இதைத்தான் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது.

நபிமார்கள் அனைவருமே சமாமானவர்கள் தாமா?

நபிமார்களில் சிலரை மற்றும் சிலரைவிடச் சிறப்பித்திருப்பதாக இறைவன் கூறுவதற்கு இது முரணாக அமைந்துள்ளதே?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஏனைய நபிமார்களை விட தம்மை உயர்த்திக் கூறியுள்ளார்களே! அது இந்தக் கட்டளைக்கு முரணாக அமைந்துள்ளதே?

என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் பலருக்கு ஏற்படக் கூடும்.

முதலில் இறைத்தூதர்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற கருத்திலமைந்த ஆதாரங்களைப் பார்த்து விட்டு அதற்கு எதிரான கருத்தைத் தருவது போல் அமைந்த ஆதாரங்களைக் காணலாம்.

ஒரு யூதர் தனது வியாபாரப் பொருளுக்கு விலை கூறிக் கொண்டிருந்தார். அவர் திருப்தியடையாத விலைக்குக் கேட்கப்பட்டது. (அதை மறுக்கும் முகமாக) மூஸா நபியை ஏனைய மனிதர்களை விடச் சிறப்பித்தவன் மீது ஆணையாக! கட்டுபடியாகாது என்று அவர் கூறினார். இதைக் கேட்ட அன்ஸாரித் தோழர் ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடையே வாழும் போது, மனிதர்களை விட மூஸாவைச் சிறப்பித்தவன் மீது ஆணையாக! என்று கூறுகிறாயா? எனக் கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல்காசிமே! எனக்கு உங்களிடம் உடன்படிக்கையும் பாதுகாப்பும் உள்ளது. அவ்வாறு இருக்க என் கன்னத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று முறையிட்டார்.

ஏன் முகத்தில் அறைந்தீர்? என்று அன்ஸாரித் தோழரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அவர் நடந்ததைக் கூறினார். இதைக் கேள்விப் பட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அதன் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது.

பின்னர் (தம் தோழர்களிடம்) நபிமார்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (உலகத்தை அழிப்பதற்காக) சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைவரும் மூர்ச்சித்து விழுவார்கள். பிறகு மற்றொரு சூர் ஊதப்படும். அப்போது நான்தான் முதலில் உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படுவேன். நான் உயிர்ப்பிக்கப்பட்டுப் பார்க்கும் போது மூஸா நபி அர்ஷைப் பிடித்துக் கொண்டிருப்பார். தூர் மலையில் மூர்ச்சித்து அவர் முன்பே விழுந்து விட்டது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? அல்லது எனக்கு முன் உயிர்ப்பிக்கப்பட்டாரா? என்பதை நான் அறிய மாட்டேன். எவரும் (எந்த நபியும்) ம(த்)தாவின் மகனாகிய யூனுஸ் நபியை விட சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

‘நான் யூனுஸ் நபியை விட சிறந்தவன் என்று எனது எந்த அடியாரும் கூறக்கூடாது’ என்று அல்லாஹ் கூறுவதாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்)

நான் யூனுஸ் நபியை விடச் சிறந்தவர் என்று கூறுவது எந்த நபிக்கும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஅபர் (ரலி), நூல்: அஹ்மத்)

நபிமார்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்துக் கூறாதீர்கள் என்பது நபிமொழி. (அபூஸயீதுல் குத்ரீ (ரலி), நூல்: அஹ்மத்)

இந்த நபிமொழிகளை ஊன்றிக் கவனிக்கும் போது நபிமார்களை ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டுச் சிறப்பித்துக் கூறக்கூடாது என்பதைத் தெளிவாக அறியலாம்.

மூஸா நபியையும் சிறப்பித்துக் கூறக்கூடாது என்பதையும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து தெளிவாக அறியலாம்.

மூஸா நபியைச் சிறப்பித்து யூதர் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அதை மறுக்காதது மட்டுமல்ல, மறுமையில் முதலில் எழுப்பப்படுவது நான்தான். ஆனால் எனக்கு முன்பே மூஸா நபி அர்ஷைப் பிடித்துக் கொண்டிருப்பார் எனக் கூறியவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூஸா நபியை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் சிறந்தவர்கள் என்று மறைமுகமாக நபித்தோழர் குறிப்பிட்டதையும், நபி (ஸல்) அவர்கள் ஆதரிக்க வில்லை. மாறாக ‘நபிமார்களுக்கிடையே பாரபட்சம் காட்டாதீர்கள்’ என்று கூறுகிறார்கள்.

இந்த நபியை விட அந்த நபி சிறந்தவர் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.