‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது சந்ததியருக்கு அருளப்பட்டதையும், மூஸா மற்றும் ஈஸாவுக்கு வழங்கப்பட்டதையும் தம் இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதையும் நாங்கள் நம்பினோம் என்றும் அவர்களில் எவரையும் நாங்கள் வேறுபடுத்த மாட்டோம் என்றும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறுங்கள்’. (அல்குர்ஆன் 2:136)

உலகில் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் யூனுஸ் நபியைக் குறிப்பிட்டு, யூனுஸ் நபியை விட நான் சிறந்தவன்’ எனக் கூற மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் கூற வேண்டும்?

எந்த நபியும் அவ்வாறு கூறக் கூடாது என்று ஏன் குறிப்பிட வேண்டும்? யூனுஸ் நபியைக் குறிப்பிட்டுக் கூறியதற்கு பிரத்தியேகமான காரணம் இருக்கிறது.

திருமறைக் குர்ஆனில் பல்வேறு நபிமார்களைப் பற்றிக் குறிப்பிடும் இறைவன், ‘நபியே அவர்கள் வழியில் நீயும் நடப்பீராக!’ என்று கூறுகிறான். அவர்களைப் பின்பற்றுவீராக! என்றும் கூறிகிறான்.

ஆனால் யூனுஸ் நபியைப் பற்றிக் கூறும் போது, ‘மீன் வயிற்றில் இருந்தவரைப் போல் நீர் ஆகிவிடாதே!’ (அல்குர்ஆன் 68:48) என்று கூறுகிறான்.

‘மீன் வயிற்றிலிருந்தவர் (அதாவது யூனுஸ் நபி) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நமக்குச் சக்தி இல்லை என்று எண்ணிக் கொண்டார்’. (அல்குர்ஆன் 21:87)

இறைவனின் பேரருள் மட்டும் அவருக்குக் கிட்டியிராவிட்டால் அவர் இழிந்த நிலையில் வெட்ட வெளியில் வீசப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவரை நல்லடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விட்டான்’. (அல்குர்ஆன் 68:49)

யூனுஸ் நபியின் சமுதாயத்தவர்கள் அவர்களை ஏற்க மறுத்து விட்டனர். எனவே தமது சமுதாயத்தை அழித்து விடுமாறு இறைவனிடம் அவர்கள் இறைஞ்சினார்கள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டான். ஊரை விட்டு வெளியேறுமாறு இறைவன் கட்டளையிட்டான். இறைவனின் கட்டளை தங்களுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் கண்ட யூனுஸ் நபியின் சமுதாயத்தவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி விடுகின்றனர். இறைவனும் அவர்களைக் காப்பாற்றினான். (அல்குர்ஆன் 10:98)

தன்னிடம் கூறியவாறு மக்களை அழிக்காமல் அவர்களைக் காப்பாற்றி விட்டானே என்று கோபம் கொண்டும் யூனுஸ் நபி ஊரை விட்டு வெளியேறியதைத் தான் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் கூறுகின்றன.

யூனுஸ் நபியைப் போல் கடுமையான சொற்களால் எந்த நபியும் கண்டிக்கப்பட்ட தில்லை. எனவே எந்த நபியும் யூனுஸ் நபியைவிடச் சிறந்தவர் தான் என்று கூறுவதற்கு இடமுண்டு. ஆனாலும் அவ்வாறு கூறுவதற்குக் கூட அனுமதியில்லை என்பதை விளக்கவே நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.

யூனுஸ் நபியை விடச் சிறந்தவர் என்று எந்த நபியைப் பற்றியும் கூறக் கூடாது என்றால் மற்ற நபிமார்களுடன் ஒப்பிட்டுக் கூறலாமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இறைத்தூதர்களில் சிலரை மற்றும் சிலரை விட நாம் சிறப்பித்திருக்கிறோம் (அல்குர்ஆன் 2:253) என்று இறைவன் கூறுகிறானே? ஆறு விஷயங்களில் ஏனைய நபிமார்களை விட என்னை இறைவன் சிறப்பித்திருக்கிறான் என்று கூறும் நபிமொழியை எவ்வாறு புரிந்து கொள்வது?

எந்த இறைத்தூதரையும் மற்ற இறைத்தூதர்களைவிட எல்லா வகையிலும் அல்லாஹ் சிறப்பிக்க வில்லை. ஒரு இறைத்தூதருக்கு சில சிறப்புக்களை வழங்கிய இறைவன் வேறு சில இறைத்தூதர்களுக்கு வேறு வகையான சிறப்புக்களை வழங்கியிருக்கிறான். அதைத்தான் மேற்கண்ட வசனமும், ஹதீஸும் கூறுகின்றன என்று புரிந்து கொண்டால், எந்த குழப்பமும் வராது.

ஆதம் (அலை) அவர்களை தன் கையால் இறைவன் படைத்தான். நேரடியாக ரூஹை ஊதினான். வானவர்களை மரியாதை செய்ய வைத்தான். (பார்க்க அல்குர்ஆன் 38:75, 7:11, 15:29)

இந்தச் சிறப்புக்கள் வேறு எந்த நபிக்கும் கிடைக்க வில்லை.

இப்ராஹீம் நபியைத் தனது உற்ற தோழராக இறைவன் தேர்வு செய்தான் (அல்குர்ஆன் 4:125)

ஹஜ்ஜுக்கு மக்களை அழைக்கும் பொறுப்பை அவர்களிடம் வழங்கினான் (அல்குர்ஆன் 2:227)

இறந்தவற்றை எவ்வாறு உயிர்ப்பிக்கிறேன் என்று நேரடியாகச் செய்து காட்டினான். (அல்குர்ஆன் 2:260)

பிறக்கும் குழந்தைகளின் விலாப்புறத்தில் ஷைத்தான் குத்துகிறான், ஈஸாவைத் தவிர என்பது நபிமொழி. (நூல்: புகாரி) தந்தை இன்றி பிறக்கச் செய்தான். உலகில் இரண்டு முறை வாழக்கூடிய வாய்ப்பை வழங்கினான்.

இத்தகைய சிறப்புக்களை வேறு யாருக்கும் இறைவன் வழங்க வில்லை.

அதுபோலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் யாருக்கும் வழங்காத சிறப்புக்களை வழங்கினான்.

இறைத்தூதர்களில் சிலரை சிலரை விட சிறப்பித்திருக்கிறோம் எனக் கூறும் வசனத்திலேயே, ‘அவர்களில் இறைவனிடம் உரையாடியவர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிடுகிறான். இதிலிருந்து எல்லா வகையிலும் ஒருவர் சிறப்பிக்கப்பட்டதை அவ்வசனம் கூறவில்லை. குறிப்பிட்ட சில விஷயங்களில் ஒருவரைவிட மற்றவருக்கு வழங்கப்பட்ட சிறப்பையே குறிப்பிடுகிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதனால்தான் அல்லாஹ்விடம் உரையாடிய குறிப்பிட்ட சிறப்பை அதைத் தொடர்ந்து கூறுகிறான்.

ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்படாத சிறப்புக்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற ஹதீஸும் அதைத்தான் உணர்த்துகின்றது. குறிப்பிட்ட சில சிறப்புக்களை நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ஆறு சிறப்புக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஹதீஸில் பின்வரும் செய்தியும் சேர்ந்து இடம் பெறுகிறது.

உனக்கும் ஏனைய நபிமார்களுக்கும் உதாரணமாவது, ஒரு மனிதன் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அதை முழுமைப்படுத்துகிறான். ஒரு செங்கல் இடத்தைத்தவிர அந்தக் கட்டிடத்தை நிறைவு செய்கிறான். மக்கள் அந்த மாளிகையைப் பார்த்து விட்டு என்னே அழகான மாளிகை! இந்த ஒரு செங்கல்லும் வைக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்று பேசிக் கொள்கின்றனர். அந்த ஒரு செங்கல் நான்தான் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

எல்லா நபிமார்களும் சேர்ந்து உருவாக்கிய மாளிகையில் ஒவ்வொருவரும் ஒரு செங்கல் போன்றவர்கள். தாமும் அதில் ஒரு செங்கல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தமக்குச் சில சிறப்புக்களைக் கூறிவிட்டு அதைத் தொடர்ந்து அதையும் குறிப்பிடுகிறார்கள்.

சில சிறப்புக்கள் எனக்கு மட்டும் வழங்கப்பட்டதால் மற்றவர்கள் தகுதியில் குறைந்தவர்கள் என எண்ணாதீர்கள் என்று இதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

நாம் ஆரம்பமாக சுட்டிக்காட்டிய விளக்கத்துக்கு எடுத்துக் கொண்ட வசனம், ‘அவர்களில் எவருக்கிடையிலும் பேதம் பார்க்க மாட்டோம்’ என்று கூறுவது இதைத்தான்.

ஒரு நபியை ஒரு ஊருக்கு மட்டும் நபியாக அனுப்புகிறான் எனவும், இன்னொரு நபியை ஒரு நாட்டுக்கு அனுப்புகிறான் எனவும் அமைத்துக் கொள்வோம்.

இதனால் இவரை விட அவர் சிறந்தவர் என்று ஒப்பிட்டுப் பேசக் கூடாது. ஒரு ஊருக்கு மட்டும் நபியாக அனுப்பப்பட்டவர், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினார். ஒரு நாட்டுக்கு அனுப்பப்பட்டவரும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினார். இவரது பொறுப்பை அவருக்கும் அவரது பொறுப்பை இவருக்கும் இறைவன் மாற்றிக் கொடுத்திருந்தால் அப்போதும் தம் பணியைச் சரியாகச் செய்திருப்பார்கள். இந்த வகையில் இருவரையும் ஒப்பிட்டுத் தரம் தாழ்த்தி விடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஏனைய நபிமார்களைத் தரம் தாழ்த்திப் பேசக்கூடிய பேச்சாளர்கள் மலிந்து கிடக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்ர் குகையில் இருந்த போது, ‘கவலைப்படாதே! நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்’ எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 9:40)

மூஸா நபியை பிர்அவ்ன் விரட்டிச் சென்ற போது, ‘என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’ என்று மூஸா நபி கூறினார்கள். (அல்குர்ஆன் 26:27)

பார்த்தீர்களா! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்முடன் எனக் கூறினார்கள். மூஸா நபியோ என்னுடன் எனக் கூறியுள்ளார்கள் என்று சில மூட மேடைப் பிரசங்கிகள் கூறுவர். மூஸா நபி சுயநலவாதி, தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக் கூடியவர் என்று சித்தரித்து நபிகள் நாயகத்தை உயர்த்துகின்றனர். இறைத்தூதர்களிடையே இத்தகைய பாகுபாடுகளைக் கற்பிக்கக் கூடாது என்பதால் தான் அவனது தூதர்களிடையே பாரபட்சம் காட்ட மாட்டோம் என்று இறைவன் கூறச் செய்கிறான்.

இப்படி உளறக்கூடிய பிரசங்கிகளுக்கு இந்த வசனத்தில் எச்சரிக்கை இருக்கிறது.

இதை உணர்ந்து எல்லா நபிமார்களையும் பாரபட்சமின்றி மதிக்கக்கூடியவர்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள்வானாக.