மாமனிதர் (பாகம் – 2)

அபூமுஹம்மத்

நூல்கள்: புஹாரி 6088, முஸ்லிம் 2296.

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:  

     நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள். அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது. பிறகு கிராமவாசி, ‘முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!’ என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.

விளக்கம்:

மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளரான அனஸ் எனும் சிறுவருடன் தனியாக வீதியில் நடந்து சென்றதாக இந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.

சாதாரண மனிதர்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு மதத்தின் மாபெரும் தலைவராக இருப்பவர் முன்னறிவிப்பின்றி – பக்தகோடிகள் புடை சூழாமல் – பந்தாக்கள் செய்யாமல் – சர்வசாதாரணமாக நடந்து செல்வதை உலக வரலாற்றில் நீங்கள் கண்டதுண்டா? அவரையும் அவரது மார்க்கத்தையும் அழித்தொழிக்க எதிரிகள் சமயம் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சூழ்ந்த நேரத்தில் இப்படி நடந்து செல்வதைக் கற்பனையாவது செய்ய முடியுமா?

சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் நடத்தும் பந்தாக்களைப் பார்த்துவரும் மக்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து சென்றபோது அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபர் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

இப்படி இருவிதமான தலைமையையும் பெற்றிருந்த நேரத்தில் சிறுவயது பணியாளர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாக நடந்து சென்ற வரலாற்றை அறியும் போது அந்த மாமனிதரின் அடக்கம் துணிச்சல் நம் கண்களைக் கலங்கச் செய்து விடுகின்றன.

இந்த மாமனிதர் அணிந்திருந்த ஆடை என்ன? அரசுக் கருவூலத்தில் ஆபரணங்களும் ஆடைகளும் குவிந்து கிடக்கும் போது – மக்களெல்லாம் அவர்களிடம் வந்து அதைப் பெற்றுச் செல்லுமளவுக்கு அரசுக் கருவூலம் நிரம்பியிருந்த போது – ஒரு மேல் துண்டை மட்டுமே போர்த்திக் கொண்டு வீதியில் நடந்து செல்கிறார்கள். அலங்காரம் இல்லை! உயர்ரக ஆடைகள் அணியவில்லை! தைக்கப்பட்ட சட்டை போன்ற ஆடைகூட அணியவில்லை! அணிந்திருந்த மேல் துண்டு கூட மேனியை உறுத்தாத வகையில் உயர்தரமாக, மென்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை! முரட்டுத்துணியை – மேனியை உறுத்தக் கூடிய துணியைச் சுற்றிக் கொண்டு வாழ்ந்த அதிசய வாழ்க்கை அந்த மாமனிதருடையது. நம்மைப் போல சாதாரணமானவர்கள் கூட அணிந்து வெளியே செல்ல வெட்கப்படும் ஆடையை அணிந்து வெளியே செல்வதற்கு அசாத்தியமான மனவுறுதி வேண்டும். நேர்மையாக வாழ்வதில் எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாத – மற்றவர்களிடம் தமது இமேஜ் – மதிப்பு – பாதிக்குமே என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த அந்த மாமனிதரிடம் இந்த உலகம் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.

முன்பின் தெரியாதவர் – நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் – ஆட்சித் தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது, சட்டையைப் பிடித்து, கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது. அந்த நிலையிலும் அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்னே அற்புத வாழ்க்கை!

எம்.ஜீ.ஆர் அணிந்திருந்த தொப்பியைத் தவறுதலாகத் தட்டிவிட்ட தொண்டரை எம்.ஜீ.ஆர் மக்கள் மத்தியில் அறைந்ததையும், அதற்காக போலீஸ் தொண்டரை சித்திரவதை செய்ததையும் இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வரின் நிலை இதுதான். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தின் சட்டையைப் பிடித்து முன்பின் அறிமுகமில்லாதவர் இழுத்ததும் அந்த நேரத்தில் கடுகளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்ததும் அவர் மாமனிதர் என்பதற்கு மகத்தான சான்று.

அந்தக் கிராமவாசி, சட்டையைப் பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை. நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்கிறார்.

உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும், பணிந்து, குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கேட்பதென்றாலும் கொடுப்பவரைப் புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.

இந்தக் கிராமவாசியின் அணுகுமுறையைப் பாருங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அவர் இப்படி நடந்து கொண்டால் கூட ஒங்கி அறைந்து விடுவோம்.

சட்டையைப் பிடித்துத் தோள்பட்டை கன்றிப் போகும் அளவுக்கு இழுத்ததும் முஹம்மதே! என்று பெயர் சொல்லி அழைத்ததும் அல்லாஹ் உம்மிடம் தந்தவற்றிலிருந்து எனக்குத் தருவீராக! என்று அதிகாரத் தோரணையில் கேட்டதும் அதன் பிறகும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது மட்டுமின்றி அவருக்குக் கொடுத்து அனுப்பியதும்; உலக வரலாற்றில் வேறு எவரிடமும் காண முடியாத அற்புத நிகழ்ச்சியாகும்.

கிராமவாசியின் துணிச்சல் என்று இதைக் கருதக் கூடாது. இவரிடம் சகஜமாக நடந்து கொண்டாலும் நம் இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டாலும் இந்த மாமனிதர் ஆத்திரப்பட மாட்டார் என்பது கிராமவாசிக்குத் தெரியும். மக்களுக்கே தெரியும் அளவுக்கு அவர்களின் எளிமை பிரசித்தமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இந்த மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம் தரங்கெட்ட அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று அவர்களின் பின்னே சென்று கொண்டிருக்கும் அவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

By admin