மாமனிதர் (பாகம் – 8)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2306,

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்:

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டு விடுங்கள்! எனென்றால் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது’ எனக் கூறினார்கள். மேலும் தம் தோழர்களிடம் ‘அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதைவிடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ‘அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்’ எனக் கூறினார்கள்.

விளக்கம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித்தலைவராக இருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

மாபெரும் ஆட்சித்தலைவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் அற்பமான தொகையைக் கடன் வாங்குவது என்பது வரலாற்றில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எல்லாவிதமான அதிகாரமும் தன் கைவசத்தில் இருந்த போது அரசாங்கத்திலும் நிதிகள் குவிந்திருந்த போது தமக்காக அதைத் தொடாமல் தம் தேவைக்குத் தமது சொந்தப்பணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) பயன்படுத்தி வந்தனர்.

தனி நபர் ஒருவரிடம் ஒட்டகத்தைக் கடனாக வாங்கியதற்கு இதுவே காரணம்.

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர்மேல் ஆத்திரப்படும் அளவுக்கு கடுமையாக நடந்து கொள்கிறார்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்;தால் அதைத் திருப்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித்தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத்தான் கடனைக் கேட்க முடியும்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடனை வசூலிப்பது ஒருபுறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூட கேட்க முடியாது.

ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சிக்க சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்கள் பத்திரிக்கைகள் இருக்கக்கூடிய இன்றைய காலத்தில் கூட அதிகார வர்க்கத்திடம் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்க முடிவதில்லை.

ஜனாதிபதி பிரதமர் மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் போன்றவர்களை விட்டு விடுவோம். சாதாரண சட்டமன்ற உறுப்பினரிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கடனை வசூலிக்க முடியாது.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கொடுத்த கடன் திரும்ப வராது என்பது மட்டுமின்றி அடி உதைகளையும் சந்திக்க வேண்டிவரும்.

அகில உலகும் அஞ்சி நடுங்கக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படி கேட்க முடியுமா?

இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும் ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போது ‘தாம் ஒரு இறைத்தூதர் மாமன்னர் மக்கள் தலைவர்’ என்பதையும் இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்பதையும் அந்த மாமனிதர் எண்ணிப்பார்க்க வில்லை.

தமது நிலையிலிருந்து அதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனை தாமதமாக திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும் சிரமங்களையும் மனஉளச்சல்களையும நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால்தான் ‘கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது’ எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.

கொடுத்த கடனை முறைதவறி கேட்கும் போது ‘ஒழுங்காகக் கேட்டிருந்தால் தந்திருப்பேன். நீ கேட்ட விதம் சரியில்லாததால் தரமாட்டேன்’ என்று எத்தனை பேர் கூறுவதை நாம் அறிகிறோம். நாமும் கூட அதை நியாயம் எனக் கூறிவிடுகிறோம். ‘ஒழுங்காக கேட்காததால் இவர் கடனைத் திருப்பித் தராதது சரிதான்’ என்று தீர்ப்பும் வழங்கி விடுகிறோம்.

கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி சாதாரணமானவர்களிடம் கூட கடனை வசூல் செய்யக் கூடாது. அதனால் அவனது கௌரவம் பாதிக்கப்படுகிறது என மொத்த உலகமும் நினைக்கிறது.

அப்படியானால் அகில உலகும் புகழக்கூடிய மகத்தான மதிப்பைப் பெற்றிருந்த நபிகள் நாயகத்தின் கௌரவம் எந்த அளவு பாதிக்கப்படும்? இது எவ்வளவு பெரிய மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்கும்?

தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் ‘அவர் கடுஞ்சொல்லைப் பயன்படுத்தும் உரிமை பெற்றிருக்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அந்த வார்த்தையை சகித்துக் கொள்கிறார்கள்.

மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விட வயது கூடிய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.

கடுஞ்சொற்களை என்னதான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனைவிட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்தவரைக் குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.

ஆனால் இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனைவிட அதிகமாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.

இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.

By admin