ஃபத்வா எண் -1

வழங்கியவர்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

தமிழாக்கம்: முபாரக் மதனீ

பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்

    கேள்வி : நான் தொழுகையில் ஆர்வமுள்ள ஓர் இளைஞன். எனினும், இரவில் தாமதித்து உறங்குவதால் காலை ஏழு மணிக்கே அலாரம் வைத்து எழுகிறேன். எழுந்தவுடன் பஜ்ரைத் தொழுது விட்டு விரிவுரைகளுக்கு செல்வது வழக்கம். வியாழன் வெள்ளி போன்ற நாட்களில் லுஹருக்குச் சற்று முன்பே விழித்தெழுந்து பஜ்ரைத் தொழுகிறேன். இது பற்றிய சட்டம் என்ன?

    ஃபத்வா: பஜ்ருத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதித்துத் தொழும் எண்ணத்தில் வேண்டுமென்றே அலாரத்தைத் தாமதமாக வைப்பது தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுவதாகவே கருதப்படும். தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுபவன், சில அறிஞர்களின் பார்வையில் காபிர் ஆவான். – தொழுகையை வேண்டுமென்று விடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!

    எனினும் யாருக்குத் தூக்கம் மிகைத்து உரிய நேரத்தை விட்டும் தொழுகை தவறிப் போகிறதோ, அவர் மீது குற்றமில்லை. விழித்தெழுந்ததும் அவர் தொழுது விட வேண்டும். அவ்வாறே குறித்த ஒரு தொழுகையை மறந்து விட்டவர் ஞாபகம் வந்ததும் தொழுது விட வேண்டும்.

    அதல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவது அல்லது தாமதித்துத் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடிகாரத்தில் நேரம் வைத்துத் தாமதித்து எழுவது இவை அனைத்தும் வேண்டுமென்று தொழுகையை விடுவதாகவே கருதப்படும். இவ்வாறு செய்வது எல்லா அறிஞர்களதும் பார்வையில் மிகப் பெரும் பாவமாகவே கருதப்படுகிறது. என்றாலும் இவன் காபிராகி விடுவானா இல்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

    பெரும்பாலான அறிஞர்கள் இவன் காபிராக மாட்டான் என்று கருதுகின்ற அதேவேளை, சில அறிஞர்கள் அவன் காபிராகி விடுவான் என்று கூறுகின்றனர். இரண்டாவது சாராரின் கூற்றுக்கு ஒத்ததாகவே ஸஹாபாக்களின் நிலைபாடும அமைந்திருந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.

    ‘ஒரு மனிதனுக்கும் ஷிர்க் குப்ருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

    மேலும், ‘நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். யார் தொழுகையை விடுகிறானோ அவன் காபிராவான்’ என்று கூறினார்கள். (நூல்கள் : அஹ்மத், திர்மிதி, நஸயி, இப்னுமாஜா)

By admin