அலக் எனும் அற்புதம்
 ஹாபிழ் கே.என்.முஹம்மது ஜமாலி பாக்கவி, ஃபாஸில் உமரி,மக்கி
 

‘நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம். பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம். பின்னர் அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.பின்னர் அந்த தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.பின்னர் அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.

பின்னர் அவனை வேறொரு படைப்பாக (முழு மனிதனாக) உண்டாக்கினோம் …’ (அல்குர்ஆன் 23:12-14)

 ஆண் உயிரணுவும் பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்து தான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று அல்குர்ஆன் 76:2ல் குறிப்பிடுவது இதனைத்தான்.
 அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’ என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
 ‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமாணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்;போது அதன் செல்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக்கின்றது.
 இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலையிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது.
 ‘அலக்’ என்பது கருவுற்ற சினைமுட்டையா?
 ‘அலக்’ என்பது ‘அலகா’ எனும் வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். அலகா என்பதற்கு மூன்று பொருள்கள் உள்ளன. அந்த மூன்று பொருள்களும் ‘அலகா’வின் நிலைக்கு பொருந்திப் போவது அல்லாஹ்வின் வல்லமையை நினைவூட்டுகிறது. அறிவியல் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
 1. பற்றிப் பிடித்து தொங்குதல்: நீர்த் துளி வடிவில் உள்ள கலப்பு இந்திரியம் ஏழாவது நாளில் கருப்பையினுள் நுழைகிறது. கருப்பையினுள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதன் உள்வரிச் சவ்வில் தன்னை ஆழப்பதித்து, தொங்கத் தொடங்குகிறது.

2. இரத்தம், கருஞ்சிவப்பு இரத்தம், உறைந்த இரத்தம்: தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வாரத்தின் இடையே இரத்தத்தால் நிரப்பப்பட்டு, மூடப்பட்டுள்ள நாளங்களைக் கொண்டதாக உருமாறுகிறது.

3. குளங்களில் வாழ்ந்து உயிர்ப் பிராணிகளைப் பற்றிப்பிடித்து, அதன் இரத்தத்தை உட்கொள்ளும் அட்டைப் பூச்சியோடு, நிரப்பப்பட்ட இரத்த நாளங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வார இறுதியில், தோற்றத்திலும் இரத்தத்தை உறிஞ்சும் போது பிராணிகளை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதிலும் முழுமையாக ஒத்துப் போகிறது.

 வெளித் தோற்றத்தில் அட்டைப் பூச்சியைப் போன்றும், உட்புறத்தில் இரத்தம் நிரப்பப்பட்ட நாளங்களைக் கொண்டதாகவும் இருக்கும் ‘அலகா’
கருவறையில் தன்னை ஆழப்பதித்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் அலகாவின் முழுமையான விளக்கமும் பொருளுமாகும்.
 அறிவுலகத்தின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவஞானி என்றும் போற்றப்படும் அரிஸ்டாட்டில் (கி.மு.384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்து தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத் துளியில் ஒழிந்திருக்கும் குட்டி மனிதன் தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’ தான் மறைந்திருக்கிறான் என்று கூறி வந்தனர். 17ம் நூற்றாண்டு வரை கருவியல் கோட்பாடு இவ்வாறு தான் இருந்தது.
 அறிவியல் கண்களை திறந்துவிட அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்பு முனையாயின. அதிலும் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சிக்கே வித்திட்டது.
 கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் கீத்மூர், மாரீஸ் புகைல், டாக்டர் ஜோ, லே ஸிம்சன் போன்ற சிந்தனையாளர்களை
அல்குர்ஆன் அல்லாஹ்வின் அற்புத வேதம் என்று கூற நிர்ப்பந்தித்தது.
 கனடாவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறு துறைத்
தலைவராகவும் கருவியல் துறைப் பேராசிரியராகவும் இருந்த டாக்டர் கீத் மூர் ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனிதக் கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார்.
 அது பற்றி விரிவாக ஆய்வு செய்த அவர்,
 கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டு, கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரே விதமாக இருந்ததைக் கண்டு வியந்து போன அவர், மேலும் இத்துறையில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யலானார். ஏனெனில், ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சி போன்றதென இதற்கு முன் கீத்மூர் அறிந்திருக்கவில்லை. இது இத்துறையில் அவரை மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டியது.
 விலங்கியல் துறைக்குச் சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனிதக் கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு தெரிவித்து மகிழ்ந்தார்.
 அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்ட போது டாக்டர் கீத்மூர் திகைத்து விட்டார். குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித்தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையான மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாக்கத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில் ‘அலக்’ உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கிறது என்றார்.
 கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தியாகவே இது இடம் பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு ‘பழங்காலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.
 மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் உதவியுடன் தான் ஒருவர் இவற்றைப் பார்க்க முடியும். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு தான் இக்கருவி
கண்டுபிடிக்கப்பட்டது.
 கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டவை. 14
நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடுமுரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண்கூடாகப் பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர் கீத் மூர்.
 கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை அல்லாஹ்வின் தூதர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்க வில்லை என்றார்.
 அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளைத் திரட்டினார். தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த கருவில் உருவாகும் மனிதன் எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கியப் பாடநூலாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் ‘அல்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 அல்குர்ஆனின் அற்புதம் கண்டு இஸ்லாத்தின் பால் விரைந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை கிருத்துவ மதத்தில் தக்க வைப்பதற்காக கிறிஸ்துவ உலகம் படாதபாடு படுகிறது.
 கிறித்துவ பிரச்சாரகரான ஜகரிய்யா பத்ருஸ் என்பவர் கிருத்துவ வேதங்களிலும்? ‘அலக்’ என்பது இருப்பதாக பொய்யாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்.
 இந்நிலையில் ‘அலக்’ என்பதற்கு கலப்பு இந்திரியத்தைக் குறிக்கும் கருவுற்ற சினை முட்டை என்ற சொல்லைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இந்திரிய நிலையைத் தாண்டி, ‘அலக்’
எனும் அடுத்த கட்டத்திற்கு வந்த கருவை மீண்டும் இந்திரிய நிலைக்கே கொண்டு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து ‘அலக்’கிற்கு அடுத்த நிலையான முல்கா நிலைக்குத் தாவி விடுகிறார். ஆக விஞ்ஞானிகளை வியப்புற வைக்கும் ‘அலக்’கின் எதார்த்தப் பொருளை அல்குர்ஆனில் இருந்து அப்புறப்படுத்தி யுள்ளனர்.
 அல்குர்ஆனின் 96வது அத்தியாத்தின் பெயரையும் ‘அலக்’ எனும் பதம் இடம் பெற்ற (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) அனைத்து ஆயத்துகளின்
பொருள்களையும் மாற்றியுள்ளார். கிருத்துவ உலகை ஆட்டிப் படைக்கும் அலக் எனும் சொல்லுக்கு மாற்றுப் பொருள் கொடுப்பதின் மூலம் இஸ்லாத்தின் எதிரிகளோடு கை கோர்க்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. எனவே முஸ்லிம்கள் இவர்களிடம் கவனமாக இருப்பது மிக அவசியமாகும்.
 சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:8)
 சமுதாய ஒற்றுமை

By admin