ஓர் உலகமகா செய்தி

    ‘அம்ம யதஸாஅலூன்’ என்று துவங்கும் இந்த அத்தியாயம் ‘அந் – நபா’ அத்தியாயம் என்றழைக்கப் படுகின்றது. இதன் பொருள் ‘மகத்தான செய்தி’ என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.

    நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும்.

    ‘எதைப் பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் (இரு கூறாகப் பிளவுபட்டு) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்)?’ (அல்குர்ஆன் 78:1,2,3)

    என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்பதே பெரும் சர்ச்சைக்குறிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.

    ‘மேலும் மனிதன் தான் படைக்கப்பட்டதை மறந்து விட்டு நமக்கு உதாரணம் கூறுகிறான். எலும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் உயிர்ப்பிக்க முடியும்? என்று அவன் கூறுகிறான்’. (36:78)

    ‘எலும்புகளாகவும் மக்கிப் போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுவோமா என்ன? என்றும் அவர்கள் கேட்கின்றனர்’. (17:49)

    ‘நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால் நாங்கள் எழுப்பப்படுவோமா? முந்தைய எங்களின் முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?’. (37:56, 56:47)

    ‘நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின் (மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) நாம் கூலி வழங்கப் பெறுவோமா?’. (37:53)

    ‘நாம் கப்ருகளிலிருந்து திரும்பவும் எழுப்பப்படுவோமா? மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட போதுமா? அப்படியானால் அது பெரும் நஷ்டமுண்டாக்கும் திரும்புதலே என்றும் கூறுகின்றனர்’. (79:11)

    ‘மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?’. (75:03)

    ‘இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர்’. (16:38)

    ‘தாங்கள் எழுப்பப்படவே மாட்டோம் என்று நிராகரிப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்’. (64:07)

    ‘இன்னும் (நபியே!) ‘நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்’ என்று நீர் கூறினால் இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை என்று காபிர்கள் கூறுகின்றனர்’. (11:07)

    ‘மகத்தான ஒரு நாளில் அவர்கள் எழுப்பப்பட உள்ளனர் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?’. (83:4)

    ‘இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை ஏதும் இல்லை, நாங்கள் எழுப்பப்படக் கூடியவர்களாகவும் இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். (6:29)

    நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறுஉலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் இறைத்தூதர்களை நம்புவதற்கு இந்த விஷயமே முதல் காரணமாக இருந்தது என்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

    ‘நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (திரும்பவும்) எழுப்பப்படுவீர்கள் என்று இவர் உங்களுக்கு வாக்களிக்கிறாரா?

    உங்களுக்கு (அவரால் அறிவிக்கப்பட்ட) வாக்குறுதி வெகு தொலைவு! வெகு தொலைவு!
இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை ஏதுமில்லை, நாம் வாழ்கிறோம், மரணிக்கிறோம், (அவ்வளவு தான்) நாம் திரும்பவும் எழுப்பப்படக் கூடியவர்கள் அல்லர்.

    இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறும் மனிதரேயன்றி வேறில்லை. இவரை நாம் நம்பப் போவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்’. (திருக்குர்ஆன் 23:35-38)

    மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனதுதான் இறைத் தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்களால் நம்ப முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது. இன்னொரு கூட்டமோ அதைவிட உறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது.

    அடிக்கப்பட்டார்கள், அதனால் அவர்கள் துன்பப் பட்டாலும் தாங்கிக் கொண்டார்கள்!

    தரக்குறைவான வார்த்தைகளால் ஏசப்பட்டார்கள், சகித்துக் கொண்டார்கள்!

    சித்திரவதை செய்யப்பட்டார்கள், அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்!

    நாடு கடத்தப்பட்டார்கள், அனைத்தையும் துறந்து விட்டு செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை!

    ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்க வில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.

    குறைந்த எண்ணிக்கையினராகவும் பலவீனர்களாகவும் இருந்தும் பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை தான் காரணம்!

    இப்போது மீண்டும் அந்த மூன்று வசனங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்!

    எதைப்பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? எந்த விஷயத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா வினா எழுப்புகின்றனர்?

    மறுஉலக வாழ்க்கையை நம்பும் விஷயத்தில் அவர்கள் இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருந்ததையும் அதுபற்றி அவர்கள் அடிக்கடி வினா எழுப்பிக் கொண்டிருந்ததையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் எழுப்பிய வினாக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இதற்கு முன் நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.

    அவர்கள் வினா எழுப்பும் விஷயம் சாதாரணமானதல்ல. அது மகத்தான விஷயம் என்பதும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. அது எப்படி மகத்தான விஷயமாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

    மறுவுலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!

    கல்லுக்கும் மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும் எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (33:39) இந்த நம்பிக்கையினால் தான்.

    தன்னலமே பெரிது என்ற வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) இந்த நம்பிக்கையினால் தான்.

    ஒற்றுமையின்றி தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) இந்த நம்பிக்கையினால் தான்.

    மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம் (5:90) அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால் தான்.

    தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும் கூட உறுதி மொழி எடுத்துக் கொண்டது (60:12) இந்த நம்பிக்கையினால் தான்.

    எந்த மனிதரிடமும் எந்த உதவியையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்க கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273) இந்த நம்பிக்கையினால் தான்.

    தங்களுக்கு ‘நல்லது இது’ ‘கெட்டது இது’ என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும்; மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104) இந்த நம்பிக்ககையினால் தான்.

    இப்படி ஒரு சமுதாயத்தின் வாழ்வையே அடியோடு மாற்றியமைப்பதற்கு இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளதால் அதை மகத்தான செய்தி என்று கூறுகிறான்.

    இந்த மகத்தான செய்தி பற்றி அவர்கள் வினா எழுப்பிக் கொண்டிருந்தார்கள் என்றால் அந்த வினாவுக்கு விடை என்ன? அவர்களின் மறுமை பற்றிய ஐயங்களை இறைவன் எவ்வாறு அகற்றுகிறான்?

By admin