வானம், பூமி, மலை, கடல் ஆகியவை இரண்டாவது சூரின் போது தான் அழியும்

    ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)

    கியாமத் நாள் குறித்து அன்றைய இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘அந்நாளில் அப்படி என்னதான் நிகழ்ந்து விடும்?’ எனவும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தக் கேள்விக்கு திருக்குர்ஆன் பல இடங்களில் விரிவாகப் பதில் அளித்தாலும் இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக இந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் படுகின்றது. அந்தப் பதிலின் ஒரு பகுதிதான் கீழே காணப்படும் இரு வசனங்கள்.

    ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18) இது அந்த வசனங்களின் பொருள்.

    குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் சூர் ஊதப்படும். சூர் ஊதப்பட்டவுடன் கூட்டம் கூட்டமாக விசாரணை மன்றம் நோக்கி மக்கள் விரைவார்கள் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

    இறந்து கிடக்கும் மனிதர்கள் உயிர் பெற்று எழுவது தான் இங்கே கூறப்படுகிறது. மனிதர்கள் எப்படி அழிந்து போவார்கள் என்ற விபரம் இந்த வசனங்களில் கூறப்பட வில்லை. 18:101, 36:51 வசனங்களிலும் உயிர்த்தெழுவது தான் கூறப்படுகின்றது.

    ஆயினும் மற்றொரு வசனத்திலும், நபிமொழிகளிலும் இரண்டு தடவைகள் சூர் ஊதும்போது அனைவரும் அழிந்து போவார்கள் என்றும், இரண்டாவது தடவை சூர் ஊதப்படும் போது அனைவரும் உயிர்த்தெழுவார்கள் என்றும் விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

    சூர் ஊதப்பட்டதும் வானங்களில் உள்ளவர்களிலும் பூமியில் உள்ளவர்களிலும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (மற்றவர்கள்) மூர்ச்சித்து விழுவார்கள். பிறகு இன்னொரு சூர் ஊதப்படும். அனைவரும் எழுந்து எதிர்நோக்கி நிற்பார்கள். (அல்குர்ஆன் 39:68)

    நாம் விரிவுரை செய்து செய்து கொண்டிருக்கும் வசனம் இரண்டாவது சூர் ஊதுவதைத்தான் குறிப்பிடுகிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். இந்த வசனத்தைத் தவிர சூர் பற்றிக் கூறும் எல்லா வசனங்களிலும் இரண்டாவது சூர் ஊதுவது மட்டுமே கூறப்படுகின்றது. முதலாவது சூர் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்கு நியாயமான காரணங்கள் கூற முடியும்.

    அழிப்பதற்காக ஊதப்படும் சூர் ஆதம் (அலை) முதல் யுக முடிவு நாள் வரை வாழ்ந்த அனைவராலும் அறிந்து கொள்ள முடியாது. இறுதிக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிலர் மட்டுமே அதை உணர்வார்கள். அந்தக் காலத்துக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள் வேறு வேறு வழிகளில் அழிந்து விட்டார்கள். ஆதம் (அலை) முதல் கடைசிக் காலம் வரை வாழ்ந்தவர்கள் ஒரு நேரத்தில் உயிர்த்தெழுவதால் இரண்டாவது சூர் ஊதுதலை அனைவரும் அறிவார்கள்.

    மேலும் மனிதன் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அஞ்ச வேண்டியதும் உயிர்த்தெழுந்து இறைவன் முன்னிலையில் நிற்க வேண்டியது பற்றித்தான் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காக அது பற்றிப் பலமுறை இறைவன் கூறாமலிருக்கக் கூடும்.

    இனி சூர் ஊதுதல் பற்றி மேலும் சில விபரங்களை நாம் அறிந்து கொள்வோம்.

    சூர் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

    சூர் என்பது (கொம்பு போன்ற வடிவிலமைந்த சப்தத்தை வெளிப்படுத்தும்) எக்காலமாகும். அதில் தான் ஊதப்படும் என்ற நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், தாரமி)

    சூர் என்பது இறைவனின் கட்டளைப்படி தானாக ஓசை யெழுப்புமா? அல்லது அதற்கென யாரேனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா? இதையும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

    சூர் ஊதுபவர் (வானவர்) தம் கையில் அதைப் பிடித்தவராக தலையைச் சாய்த்து ‘எப்போது ஊதுமாறு கட்டளையிடப்படும்’ என்று எதிர்பார்த்தவராக இருக்கிறார். இந்த நிலையில் நான் எவ்வாறு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்? என நபி (ஸல்) கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: திர்மிதி)

    சூர் ஊதும் பணிக்காகவே ஒரு வானவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக வேறு அலுவல் ஏதுமில்லை. எப்போது கட்டளை வரும் என எதிர்பார்த்தவராக கையில் சூர் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்ற விபரங்களை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

    அப்படியானால் சூர் ஊதும் பணிக்காக அமர்த்தப்பட்டவர் முதல் சூர் ஊதியதும் அழிந்து விடுவாரா? அழிந்து விட்டால் இரண்டாவது சூர் ஊதுபவர் யார்? இந்த சந்தேகத்திற்கு அல்லாஹ் மற்றொரு இடத்தில் விடையளிக்கிறான்.

    முதலாவது சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்களும் மற்றவர்களும் அழிந்து விட்டாலும் மலக்குகள் அழிய மாட்டார்கள்.

    முன்னர் நாம் எடுத்துக்காட்டிய 39:68 வசனத்தில் ‘அல்லாஹ் நாடியவர்களைத் தவிர’ என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ் நாடக்கூடிய சிலர் இந்த சூர் ஊதப்பட்ட பின் அழிய மாட்டார்கள் என்பது தெரிகின்றது. அல்லாஹ் நாடியவர்கள் என்போர் யார்? இதையும் திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறிவிடுகின்றது.

    ஒரு தடவை சூர் ஊதப்படும் போது பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு அவை ஒரேயடியாக துள்படுத்தப்படும் போது அந்நாளில் தான் நிகழவேண்டியது நிகழும். வானம் பிளந்து அந்நாளில் தன் சக்தியை இழந்து விடும். மேலும் மலக்குகள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். மேலும் அன்றைய தினம் என்மர் (எட்டு வானவர்கள்) உமது இறைவனின் அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 69:13-17)

    வானம் பிளந்து பலமிழந்து விட்டாலும் அதன் கடைக் கோடியில் மலக்குகள் இருப்பார்கள் என்பதும், எட்டு வானவர்கள் அர்ஷைச் சுமப்பார்கள் என்பதும் வானவர்கள் அழியமாட்டார்கள் என்பதற்கான சான்றுகள்!

    முதலாவது சூர் ஊதப்பட்டவுடன் அழிக்கப்பட்டவர்கள் உடனடியாக உயிர்த்தெழுவார்களா? அல்லது இரண்டுக்கு மிடையே கால வித்தியாசம் ஏதும் இருக்கிறதா? இதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

    இரண்டு சூர் ஊதுதலுக்குமிடையே நாற்பது இருக்கிறது என்பது நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். மக்கள் அபூஹுரைராவிடம் நாற்பது நாட்களா? என்று கேட்டனர். அதற்கு அபூஹுரைரா (ரலி) தெரியாது என்றனர். நாற்பது மாதங்களா? என்று மக்கள் கேட்டனர். அதற்கும் தெரியாது என்று விடையளித்தனர். நாற்பது வருடங்களா? என்று கேட்டதற்கும் தெரியாது என்றே விடையளித்தனர். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    அழிக்கப்பட்டதற்கும், உயிர்ப்பிக்கப்படுவதற்கும் நாற்பது ஆண்டுகள் அல்லது நாற்பது மாதங்கள் அல்லது நாற்பது நாட்கள் இடைவெளி இருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) ஐயத்துடன் கூறியிருந்தாலும் இரண்டும் உடனடியாக நடக்காது என்பது மட்டும் உறுதி.

    இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். சூர் ஊதப்பட்டவுடன் மனித, ஜின் மற்றும் உயிரினங்கள் தாம் அழியும். வானம், பூமி, மலை, கடல் ஆகியவை இரண்டாவது சூரின் போது தான் அழியும். வேறு வானம் வேறு பூமி உருவாக்கப்பட்டு அங்கே தான் விசாரணை நடை பெறும். இதற்கான ஆதாரங்களை அடுத்த இதழில் காண்போம்.

By admin