முதலாவது சூரின் போது அனைத்தும் அழிக்கப்பட மாட்டாது

    ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)

    அழிப்பதற்கும் ஆக்குவதற்கும் தனித்தனியாக சூர்கள் ஊதப்படும் என்பதையும் முதல் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்களும், மற்ற உயிரினங்களும் அழிக்கப்படுவார்கள். எனினும் மலக்குகள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் சென்ற இதழில் நாம் கண்டோம்.

    முதல் சூர் ஆக்குவதற்கும், இரண்டாவது சூர் அழிப்பதற்கும் என்று பொதுவாகக் கூற முடியாது. முதலாவது சூர் ஊதப்படும் போது அழிக்கப்படாமல் இன்னும் சில பொருட்கள் விடப்படும். அவை ஆக்குவதற்காக ஊதப்படும். இரண்டாவது சூரின் போது அழிக்கப்படும் என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்கலாம்.

    பூமி கடுமையான நடுக்கத்திற்கு உள்ளாக்கப்படும் போது மேலும் மலைகள் நூளாக்கப்பட்டு பரப்பப்பட்ட புழுதியாக அது மாறும். அப்போது நீங்கள் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். (அல்குர்ஆன் 56:5,6)

    மக்கள் மூன்று பிரிவினர்களாகப் பிரியும் போது, அதாவது இரண்டாவது சூர் ஊதப்படும் போது, தான் இப்பூமியில் மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டு மலைகள் தூளாகும் என்பதை அவ்வசனங்கள் கூறுகின்றன.

    இப்பூமி கடும் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்படும் போது, மேலும் இப்பூமி, தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும் போது, உமது இறைவன் இதற்குக் கட்டளையிட்டதால் அந்நாளில் அது தன் செய்திகளை அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமது செயல்கள் காண்பிக்கப்படுவதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள். (அல்குர்ஆன் 99:1,2)

    மக்கள் தமது செயல்களுக்குரிய பிரதிபலனுக்காக நிறுத்தப்;படும் நாளில் – அதாவது இரண்டாவது சூர் ஊதப்படும் நாளில் – தான் பூமி அழிக்கப்படும் என்பதை இந்த வசனங்களும் கூறுகின்றன.

    வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகும் அந்நாளில் இன்னும் மலைகள் பஞ்சு போல் ஆகிவிடும் அந்நாளில் ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன் 70:8,9,10)

    ஒருவன் மற்றவனைக் கண்டு அவனைப் பற்றி விசாரிக்காமல் செல்லும் நாளில் – அதாவது இரண்டாம் சூர் ஊதப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்ட பின் – தான் வானம் உருக்கப்பட்ட செம்பு போல் மாறி மலைகள் பஞ்சாய் பறக்கும் என்பதை இந்த வசனங்களும் கூறுகின்றன.

    சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்; போது, மலைகள் பெயர்க்கப்படும் போது, சூல் நிறைந்த ஒட்டகங்கள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது, காட்டு மிருகங்கள் ஒன்று சேர்க்கப்படும் போது, கடல்கள் தீ மூட்டப்படும் போது, உயிர்கள் (உடலுடன்) ஒன்று சேர்க்கப்படும் போது, உயிருடன் புதைக்கப்பட்டவர் எந்தக் காரணத்துக்காகக் கொல்லப்பட்டார் என்று விசாரிக்கப்படும் போது, ஏடுகள் விரிக்கப்படும் போது, வானங்கள் அகற்றப்படும் போது, நரகம் கொழுந்து விட்டு எறியுமாறு செய்யப்படும் போது, சொர்க்கம் சமீபமாகக் கொண்டுவரப்படும் போது, ஒவ்வொரு ஆத்மாவும் தாம் கொண்டுவந்ததை அறிந்து கொள்ளும். (அல்குர்ஆன் 81:1-14)

    மனிதன், காட்டுமிருகங்கள், ஒட்டகங்கள் ஆகியவை உயிர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தத்தமது செயல்களின் பலன்களை அடையும் அந்த நாளில் தான், அதாவது இரண்டாவது சூர் ஊதப்பட்ட பின்புதான், சூரியன் நட்சத்திரங்கள், கடல்கள், மலைகள், வானங்கள் ஆகியவை அழிக்கப்படும் என்பதை இந்த வசனங்களும் கூறுகின்றன.

    ‘வானம் பிளந்து விடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது, கடல்கள் அகற்றப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததை அறிந்து கொள்ளும்’. (அல்குர்ஆன் 82:1-5)

    இந்த வசனங்களும் அதே கருத்தை கூறுவதை யாரும் அறியலாம்.

    ‘அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் அகிவிடுவர். மேலும் மலைகள் உதிர்க்கப்பட்ட பஞ்சுபோல் ஆகும்’. (அல்குர்ஆன் 10:4,5)

    ‘இந்த பூமி வேறு பூமியாகவும் (மாற்றப்பட்டு) வானங்களும் மாற்றப்படும் அந்நாளில் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் (மக்கள்) நிற்பார்கள்’. (அல்குர்ஆன் 14:48)

    மனிதனைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் அந்த நாளில் தான் இந்த பூமி, வானம் அழிக்கப்பட்டு வேறு பூமியும் வானங்களும் ஏற்படுத்தப்படும் என்பதை இந்த வசனங்களும் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

    ‘வானம் பிளந்து விடும் போது தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது, இன்னும் பூமி விரிக்கப்பட்டு அது தன்னில் உள்ளவற்றை வெளியாக்கி அது காலியாகி விடும்போது, தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும் போது,

    மனிதனே! நிச்சயமாக நீ இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக இருக்க உழைக்கின்றாய். பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்’. (அல்குர்ஆன் 84:1-8)

    ‘நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

    இன்னும் நட்சத்திரங்கள் அழிக்கப்படும் போது

    மேலும் வானம் பிளக்கப்படும் போது

    மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும் போது

    தூதர்களுக்கு தத்தம் சமூகத்தாருக்காக சாட்சியம் கூற

    நேரம் குறிக்கப்படும் போது

    எந்த நாள் வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

    தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்’. (அல்குர்ஆன் 77:7-13)

    ‘கியாம நாள் எப்போது வரும்? என்று (ஏளனமாகக்) கேட்கிறான்

    ஆகவே, பார்வையும் மழுங்கி

    சந்திரன் ஒளியும் மங்கி

    சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்

    அந்நாளில் (தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?

    என்று மனிதன் கேட்பான்

    இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை (என்று கூறப்படும்)

    அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

    அந்நாளில் மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும் (உலகின்) பின்

    விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்’. (அல்குர்ஆன் 75:6-13)

    நிச்சயமாக அவர்கள் அதை வெகுதூரமாகக் காண்கின்றனர்

    ஆனால் நாமோ அதனை வெகுசமீபத்தில் காண்கிறோம்.

    வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் – நாளில்

    இன்னும் மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)

    (அனுதாபமுடையவர்களாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு

    நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.

    அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள். (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்)

    அந்நாளின் வேதனைக்க ஈடாக

    குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்,

    தன் மக்களையும் தன் மனைவியையும் தன் சகோதரனையும்

    அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்

    இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடு கொடுத்துத்)

    தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்) (அல்குர்ஆன் 70:6-14)

    ‘எனவே சூரில் ஊதல் ஒரு முறை ஊதப்படும் போது, இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடொன்று மோதி அவை இரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் –
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். வானமும் பிளந்து அந்நாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

    இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றியும் அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப் பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது’. (அல்குர்ஆன் 69:13-18)

    இன்னும் இது பற்றிக் கூறுகின்ற எல்லா வசனங்களும் மனிதன் உயிர்ப்பிக்கப்படும் நாளில் தான் இவ்வுலகம் முழுமையாக அழியும் என்பதைக் கூறுகின்றன.

    நாம் விரிவுரை செய்து கொண்டிருக்கும் இந்த அத்தியாயத்தில் இந்த விபரங்கள் தெளிவாகக் கூறப்படுகின்றன.
முதலாவது சூரின் போது அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுவதால் அந்தத் தவறான கருத்தை மறுக்க இதை நாம் விரிவாக விளக்கியுள்ளோம். எனவே இரண்டாவது சூர் ஆக்குவதற்கானது என்று பொதுவாகக் கூற முடியாது. இனி அந்த நாளில் நடை பெறும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.

By admin