பாகம் – 4

நீங்களும் நீங்கள் பெற்றுள்ள செல்வமும் ஆகிய
எல்லாமே உங்கள் தந்தைக்குரியன

என்னுயிர் அம்மா!

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி ஒன்றினைக் கேளுங்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து,

‘யா ரசூலுல்லாஹ்! என் தந்தை நினைக்கும் பொழுதெல்லாம் வந்து எனது செல்வத்திலிருந்து எடுத்துச் செல்கின்றார்!’ என்று முறையிட்டார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரது
தந்தையை அழைத்து வரும் படி பணித்தார்கள். சற்று நேரத்தில் அவரது தந்தை அழைத்து வரப்பட்டார். ஊன்று கோலின் உதவியுடன் வந்த அவர் முதிய வயதை உடையவர்.

அவர் வந்தவுடன் அவரது மகனின் முறையீடு பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள்.
அப்பொழுது அந்த முதியவர்:

யாரசூலுல்லாஹ்! ஒரு காலத்தில் எனது இந்த மகன் அனாதரவாக, எத்தகைய உதவிக்கும் வழியின்றி இருந்தார். அப்பொழுது நான் நல்ல சரீர சுகத்துடனும் செல்வத்துடனும் இருந்தேன். என் செல்வத்திலிருந்து இவருக்கு உதவி ஒத்தாசைப் புரிவதை நான்
தடுத்துக் கொள்ளவில்லை. இன்று இவர் ஒரு செல்வந்தர். எனினும், இவர் தனது செல்வத்தின் மூலம் எனக்கு உதவுவதிலிருந்து என்னை ஒதுக்கி வைக்கின்றார்’ என்று வேதனை ததும்ப, தன் பரிதாப நிலையை விவரித்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கலங்கி விட்டன. அவர்கள் அந்த வயோதிபரின் மகனை விளித்து:

‘நீங்களும் நீங்கள் பெற்றுள்ள செல்வமும் ஆகிய எல்லாமே உங்கள் தந்தைக்குரியன!’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றிலிருந்து நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், மனிதனின் சொத்து, செல்வம், திறமைகள் என்பனவெல்லாம் பெற்றோரின் பெரும் தியாகத்தின் விளைவுகளே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இதன்படி பிள்ளைகளும் அவர்களது செல்வங்களும் அவர்களின் தந்தைக்குரியன. எனவே தந்தையின் சொற்படியே அவர்கள் செயற்பட வேண்டும். அவர்களது செல்வத்தைத் தந்தை அனுபவிப்பதை ஒருபோதும் தடுக்கக் கூடாது. அது மிகவும் தகாத செயலாகும். மேலும், பெற்றோருக்கு நன்மை நாடி பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் வெகுவாகக் கூறியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர்
தாழ்த்துவீராக. மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும்  அவர்களிரு வருக்கும் கிருபை  செய்வாயாக!’ என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!’ (அல்குர்ஆன் 17:24)

என் அகம் நிறைந்த அம்மா!

ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர். எமக்காக எப்பொழுதும்
தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய
முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா!

அல்குர்ஆனும் நபிகளார் அறவுரைகளும் இது பற்றிய மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.

‘தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக
சிறப்பானது’! என ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,

‘யா ரசூலுல்லாஹ்! நான் அடிபணிந்து நிற்பதற்கும் மற்றவர்களை விடவும் சிறப்பானவராகக் கருதுவதற்கும் உரியவர் யார்?’ எனக் கேட்டார்.

‘உங்கள் தாய்!’ என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.

‘அதன் பின் யார்?’ அவர் மீண்டும் கேட்டார்.

‘உங்கள் தாய்!’ மீண்டும் அதே பதில் வந்தது.

‘அதன் பின் யார்?’ வந்தவர் மீண்டும் கேட்டார்.

‘உங்கள் தாய் தான்!’ நபி (ஸல்) அவர்கள் நாவிலிருந்து பதில் வந்தது. நான்காவது முறையாக, ‘அடுத்தவர் யார்?’ எனக் கேட்ட பொழுது, ‘உங்கள் தந்தை!’ என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

‘தாயின் பாதத்தடியில் சேயின் சுவனம் உண்டு!’

என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு
அன்புடன் பணிவிடை செய்து, அவரை மிக நல்ல முறையில் கவனித்து வந்தால் உங்களுக்கு
சுவன பாக்கியம் கிட்டும் என்பது இதன் கருத்து. இத்தகைய எண்ணற்ற போதனைகள்
தாய்க்குப் பணிவிடை செய்வதை பெரும் கடமை எனக் கூறி நிற்கின்றன.

பெற்றோரில் ஒருவரோ இருவருமோ மரணித்து விட்டால், அவர்களுக்காக இறைவனிடம்
பிரார்த்தனைப் புரிய வேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்களுக்கு மறுவுலக இன்பங்கள் கிட்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும் என்பது இறைத்தூதரின் இதயம் நிறைந்த கட்டளை.

பெற்றோருக்கு கண்ணியமளித்து, மிகுந்த கீழ்படிதலுடன் நடந்து, அவர்கள் வயது
முதிர்ந்து விட்டால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பணிவிடை புரிவதை
அல்லாஹ் போற்றியுள்ளான். அப்படி நடந்து கொள்வதைக் கட்டாயப்படுத்தியுள்ளான்.

ஆனால் ஒரு முக்கிய விஷயம்:

அல்லாஹ் தடுத்துள்ள, ‘செய்யக் கூடாது’ என விலக்கியுள்ள எதையும் தமது அன்புப்
பெற்றோர் செய்யும் படி பணித்தால், அவற்றைச் செய்யக் கூடாது. அப்படியானவற்றைத்
தவிர்த்து நடக்க வேண்டும் என்பது தான் இறை கட்டளை.

பெற்றோராயினும் தவறான, (இஸ்லாத்திற்கு) முரணான செயல் ஒன்றைச் செய்யும் படி
வேண்டினால் எப்படிச் செய்வது, எனினும் அவர்களது (இஸ்லாத்திற்கு முரணில்லாத)
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. இதை நாம் விளங்கிக் கொள்ள
வேண்டும்.

By admin