ஸஹர் செய்தல்

முன்னுரை

நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

1. ஸஹர் செய்வதன் சிறப்பு:

‘நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

    நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர் ஒருவர் வந்தார், ‘ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)

    ‘நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643)

    ‘ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)

    ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது 3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.

2. ஸஹர் நேரம்:

‘பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!’ (அல்குர்ஆன் 2:187)

    ‘வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!’ (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின் பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்: புகாரி 1916, நஸயீ 2171)

    ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்’ என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2002, திர்மிதி 699)

    நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர் செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது. ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. ஸஹர் உணவு:

‘நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

    நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், ‘அனஸே! நான் நோன்பு இருப்பதற்கு ஏதேனும் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின் பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். ‘அனஸே! என்னோடு உணவு அருந்த யாரையேனும் பாருங்களேன்;’ என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள். நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டே நோன்பிருந்து கொள்கிறேன்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நானும் நோன்பிருந்து கொள்கிறேன்’ என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டு ரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)

    அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்து நிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

4. ஸஹருக்கான அறிவிப்பு:

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.

    பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில் அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)

    பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)

    பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக ‘தப்ஸ்’ எனும் கொட்டு அடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய் கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒரு நபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.

5. விடி ஸஹர்:

விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச் செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்திருப்பர். இவர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர். இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

    இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தை இழந்து விட்டார்கள்.

    மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டு நோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

    இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.

6. ஸஹரை தாமதிப்பது:

‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்’ என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி 699)

    சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்கு முன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

7. ஸஹரை வரவேற்பது:

ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக!’ என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா (ரலி), நூல்: நஸயீ 2165)

8. பிரத்தியேக ஸஹர்:

ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்று தோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல. எனக்கு குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில், ‘எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922, முஸ்லிம் 2010)

9.சந்தேகமான பஜ்ர்:

‘உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)

    நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), முஸ்லிம் 1994)

    செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்ல என்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.

10. ஸஹரில் நிய்யத்:

பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விட வேண்டும்.

    ‘பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அது நோன்பு அல்ல’ (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

    சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்த பிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

முடிவுரை

ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச் செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும் இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

By admin