நோன்பு திறத்தல்

முன்னுரை

நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1. நோன்பு திறக்கும் நேரம்:

‘பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்’ (அல்குர்ஆன் 2:187)

    ‘….நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்’ என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)

    ‘பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634)

    சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:

‘விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

    மற்றொரு அறிவிப்பில், ‘யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698)

    நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

3. நோன்பு திறக்கும் உணவு:
 
 ‘உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4. துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரம்: 

‘மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். …’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

    நோன்பாளி தனது நோன்பை திறக்குமுன் செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இதன் விளக்கம்.

5. நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது,
 

 ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

 

‘தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று ஓதுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350

பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்.

    ‘அல்லாஹும்ம லக சும்து….’ என்ற துஆ முஆத் பின் ஸஹ்ரா என்பவரால் அறிவிக்கப்பட்டு அபூதாவூதில் இடம் பெற்றிருக்கிறது. இது முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். இதே துஆ தப்ரானி, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவை பலவீனமான ஹதீஸ்களாகும். அதனால் இந்த துஆவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:

‘யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

    நோன்பிற்கான நன்மையை இரட்டிப்பாக்கிக் கொள்ள மற்றவரை நோன்பு திறக்கச் செய்வது ஓர் அரிய வாய்ப்பாகும்.

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

முடிவுரை:

நோன்பு திறத்தலின் போது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடந்து கொள்வோமாக!
 

 

By admin